மாமழை நீ ---வெண்பா---

நேரிசை வெண்பா :

முண்மீறிக் காலேறும் முன்னில்லாச் செய்வெம்மை
தண்ணிழற் பூம்பொழிற் தான்காயும் - புண்மருண்டு
வீணிலைகாண் அல்லிமரை வெந்துலர் வேனிலில்
பாணிலத்துப் பெய்மழையாள் பார்.

முண்மீறி - முள் மீறி, செய் - வயல், வெம்மை - வெப்பம், தண் - குளிர்ச்சி, பொழில் - சோலை, காயும் - அழியும், புண்மருண்டு - புள் மருண்டு, புள் - பறவை, மருண்டு - மயங்கி, வீணிலை - வீழ் நிலை, மரை - தாமரை, வேனில் - வெயிற்காலம், பாணிலத்து - பாழ் நிலத்து, மழையாள் - மழைபோன்றவள்.

பொருள் :

வயல்வெளியில் நடந்து போகையில் நெருஞ்சி முட்களையும் மீறி, இதுவரை இல்லாத வெயில் கால்களைச் சுட்டு வருத்தும்.

குளிர்ந்த நிழலையும் பூவையும் உடைய சோலைகள், அவற்றையெல்லாம் இழந்து நிற்கும்.

தாங்க முடியாத வெப்பத்தால் பறவைகள் மயங்கி விழுவதைப் பார்த்து நீரற்ற குளத்தில் அல்லியும் தாமரையும் வெந்து கருகிக் கிடக்கும்.

இப்படிப்பட்ட வெயில் காலத்தில் பாழடைந்த நிலத்திற்குப் பெய்யும் மழையைப்போல ஒருத்தியைப் பார்த்தேன்.

(ங0/சா/உ0ருச)

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (17-Jul-23, 10:28 am)
பார்வை : 138

மேலே