நண்பர்கள் தின வாழ்த்துகள்
பள்ளியிலே படிக்கையிலே,
பக்கத்து சீட்டிலே,
என்னோடு அமர்ந்தவனே!
சின்ன சின்ன சண்டையிட்டாலும்,
சிரிச்சு பேச மறந்ததில்ல;
புளியமரத்துகட தேன்மிட்டாய்,
பகிராம நீயும் திண்ணதில்ல;
கண்ணாம்பூச்சி விளையாண்டாலும்,
கள்ளன் போலீஸ் விளையாண்டாலும்,
நம் முகத்துல சந்தோஷம்,
ஒருபோதும் குறஞ்சதில்ல;
பள்ளி தேர்வுல - நீ
விடை எழுத உதவிய என்னை,
விமலா டீச்சர் அடிச்ச அடி,
அடி மனதில் கேட்பதுண்டு;
அறியா பருவமதில்,
நம்மோட இந்த உறவுதான் நட்போ?
கல்லூரி பருவமதில்,
தேர்வுக்கு முன்னிரவு,
கண்முழிச்சு தான் படிச்சு,
ஒரே அறையில் கண்ணுறங்கி,
ஊர் கதைகள் தான் பேசி,
நட்டநடு ராவிலே,
வயிறு வலிக்க நாம் சிரிச்ச சிரிப்பு,
மனசோரம் ஒலிப்பதுண்டு;
கண்ணீர் வரவழைப்பதுண்டு;
கஷ்டத்துல நானிருக்க,
முகம் சாய்க்க தோல் தந்தாய்;
கண்ணீரை தான் துடைத்தாய்;
விபத்திலே அடிபட்டு,
உயிருக்கு போராடும் நேரத்திலே,
இரத்த சொந்தங்கள் யோசிக்க,
ஓடோடி வந்தாயே! - உன்
இரத்தக் கொடை தந்தாயே!
என்னுயிர் நண்பனே!
அடிக்கடி சந்திப்பு,
படிபடியாய் மறைந்தாலும்,
அலைபேசியின் தொடர்பு,
வெகுவாக குறைந்தாலும்,
காலங்கள் மாறினாலும்,
நம் நட்பு மாறாது - அது
நம்மை மறவாது!
என்னுயிர் நண்பர்களுக்கு
முன்கூட்டியே என் நண்பர்கள்தின வாழ்த்துகள்!