மணிப்பூர்
வாடிய பூவில்
இயற்கையின் மறுமுகம்
தெரிகிறது
கடிகாரத்தில் தேடினாள்
விரயமான மணித்துளிகளை;
விரைந்தது மனம்
ஊர்ந்தது ஊழி
வரும்வழியில் விழுந்திருப்பாளோ?
வாகனம் ஏதும் இடித்திருக்குமா?
நண்பர்களுடன் வீண் அரட்டையா?
மின்னூட்டு இறந்த கைபேசியா?
வினாக்களில் அவிந்தாள் தாய்.
இருபது வயதாயிற்றே…
இருட்டியாயிற்றே…
மகள் வரும் வழியில்
தெருநாய்கள் அதிகமாயிற்றே..
கையைக் காலை கடித்திருக்குமா?
மேலே விழுந்து பிராண்டியிருக்குமா,
சனியன் பிடித்த நாய்?
நூறு வரையிலும் இருக்குமே
நாய்கள் அங்கு!
ஆடையைக் கவ்வியிருக்குமா?
நெஞ்சைக் கிழித்திருக்குமா?
படக்கூடாத இடத்தில்…
இப்படி, பயத்திற்கும் கவலைக்கும்
கைகளைக் கொடுத்து
இழுக்கவிட்ட அன்னைக்கு
ஆறுதலாக அழைப்பு மணி!
‘எங்க போய்த் தொலைஞ்ச?
ஏன் இவ்வளவு தாமதம்?’
‘ஏழு மணிதானம்மா ஆகுது’
கன்னத்தைத் தட்டிவிட்டு
வீட்டுக்குள் சென்றது
அவளது இருபது வயதுச் செல்லம்.
மணிப்பூர் செய்தியை
அவள் பார்த்தது
அப்போது தான்!