காதலும் மறைந்திடுமா காணல் நீராக பாகம் - 11
தாயாக மாறினாள்...!!!!
மயங்கி சரிந்த குழந்தையை தாங்கிய திலோத்தமா அதிர்ந்து ஒரு வினாடி நிதானித்து குழந்தையின் கண்ணத்தில் லேசாக தட்டியபடி கண்ணா கண்ணா இங்க பாரு என்று எழுப்ப முயற்சித்தாள்.
நேரம் ஆக ஆக திலோவின் குரல் நடுங்கியது, கண்களில் நீர் கோர்த்து வழிய ஆரம்பித்தது. செய்வது அறியாமல் குழந்தையை தூக்கிக் கொண்டு இன்ஸ்பெக்டர் நின்றிருந்த திசை நோக்கி ஓட எத்தனித்தவளை பிடித்து தடுத்தார் கமிஷனர்.
குனிந்து குழந்தை முகத்தை பார்த்துக் கொண்டு இருந்த திலோத்தமா அவளைப் பிடித்து தடுத்த கரங்களை பார்த்து நிமிர்ந்து கரங்களுக்குறிய முகத்தைப் பார்த்தாள்.
அங்கு அவளுடைய "கமிஷனர் அங்கில்லை" பார்த்ததும் விழிகள் பளிச்சிட இங்க பாருங்க அங்கில், குழந்தை மயக்கம் ஆயிட்டான் ஹாஸ்பிடல் கொண்டு போகனும் என்று தேம்பி அழுதபடியே கூறினாள்.
தன்னைப் பார்த்த உடன் அவள் விழிகளில் தெரிந்த நம்பிக்கையை நினைத்து மனம் வேதனை கொண்டது.
தான் அவளுடைய பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைத்து விடுவோம் என்ற நிம்மதி அவள் முகத்தில் பரவுவதை வேதனையுடன் கண்டார் கமிஷனர்.
இருந்தாலும் இந்தக் குழந்தை திலோத்தமா உடன் இருந்தால் அதனால் அவள் வாழ்க்கையே கேள்விக் குறியாக மாறிவிடும் என்பது திண்ணம்.
இவ்வாறாக மனதிற்குள் யோசித்தபடி மனதைக் கல்லாக்கி கொண்டு அவளிடம் பேச ஆரம்பித்தார்.
திலோத்தமா இங்க பாரு, இதுக்கு தான் சொல்றேன் இவ்வளவு சின்ன குழந்தையை உன்னால் சமாளிக்க முடியுமா...?
நீயே சின்ன பொண்ணு இந்த மாதிரி நேரத்தில் என்ன செய்ய வேண்டுமென்று புரியாமல் நீயே அழுவுற பாரு என்றார்.
எப்படியாவது அவள் செய்கை தவறு என்று அவளுக்கு புரிய வைத்து விடும் வேகம் அவர் வார்த்தையில் தொனித்தது.
அங்கில் இதெல்லாம் இப்ப பேசுற விஷயம் இல்ல முதல்ல இவனுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கனும் வாங்க போவோம் என்று கெஞ்சினாள்.
என்ன மாதிரி வசதியில் அவள் வளர்ந்தாள் என்று மனதில் நினைத்து கொண்டார். இளவரசி மாதிரி வசதியில் திளைத்த பெண் இன்று ஊர் பெயர் தெரியாத ஒரு குழந்தைக்காக அவர் முன் கெஞ்சுகிறாள், என்றால் அவள் அந்தக் குழந்தையிடம் கொண்டுள்ள தன்னலம் அற்ற அன்பை நினைத்து அவர் மனம் நிறைந்தது.
முதலில் இந்தக் குழந்தையை ஹாஸ்பிடல் கொண்டு செல்ல வேண்டியது தான் முக்கியம், அது தான் சட்டபடி முதலில் செய்ய வேண்டியதும்.
முதலில் அதை பார்போம், திலோத்தமாவுக்கு பிறகு பொறுமையாக பேசிப் புரியவைக்க வேண்டும் என்று மனதில் எண்ணியவாறு, சரிம்மா வா நம்ம காரிலேயே போய் விடுவோம் என்றபடி இன்ஸ்பெக்டரிடம் சென்று இவர்களை ஃபாலோ செய்யுமாறு கூறி திலோவை தன் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.
இந்தப் பிரச்சினைக்கு என்ன தான் தீர்வு என்று புரியாமல் குழம்பிய படி காரை செலுத்திக் கொண்டு இருந்தார் கமிஷனர்.
அந்த ஏரியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கொண்டு காரை நிறுத்தினார்.
காத்துக் கொண்டு இருந்தார் போல் கார் நின்றவுடன் கதவை திறந்து கொண்டு குழந்தையுடன் மருத்துவமனைக்குள் ஓடினாள் திலோத்தமா.
அலங்கோலமாக கையில் குழந்தை உடன் பித்து பிடித்தவள் போல் ஓடி வரும் பெண்ணை கண்டு வரவேற்பு பகுதியில் நின்றிருந்த இரு செவிலியர் வேகமாக இவளை நோக்கி வந்தனர்.
அவர்கள் திலோவிடம் கேட்கும் முன்பே இவள், அவர்களிடம் குழந்தையை பாருங்க மயங்கி விட்டான் நல்லா தான் சாப்பிட்டு கொண்டு இருந்தான் திடீரென இப்படி என்ன ஆச்சுன்னு தெரியவில்லை என்று ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் பேசினாள்.
அவர்கள் சரி சரி கொஞ்சம் பொறுமையா இருங்க என்னன்னு பார்போம் என்று கூறி குழந்தையை தூக்க ஒரு செவிலி கை நீட்டினாள்.
திலோத்தமா குழந்தையை அவரிடம் கொடுக்க மறுத்து அவளை தூக்க விடாமல் தூரமாக நகர்ந்து கொண்டே, நானே தூக்கி வர்றேன் என்று குழந்தையை அணைத்தவாறு அவருடன் இணைந்து நடந்தாள்.
அவளின் செய்கையில் ஆச்சரியம் அடைந்த செவிலி அப்போதுதான் திலோத்தமா உடன் வந்தவர்களை திரும்பி பார்த்தாள்.
நேர்மைக்கு பெயர் போன கமிஷனர் வினோத் குமார் மிஷ்ராவை அங்கு பார்த்த உடன் அவள் விழிகளில் ஆச்சரியம் படர்ந்தது.
அவள் திரும்பி கமிஷனரை நோக்கி வந்து வணக்கம் தெரிவித்தாள்.
சார் இவங்க..... என்று இழுத்தாள்
உடனே கமிஷனர், நர்ஸ் சீக்கிரமா ட்ரீட்மெண்ட் ஆரம்பிங்க இந்த குழந்தைக்கு எதுவும் ஆகக்கூடாது என்றார்.
ட்யூட்டி டாக்டர் யார் பெயர் என்ன என்றவுடன்....
பயத்துடன் சார் டாக்டர் இந்த நேரத்தில் இருக்க மாட்டார், நாங்க தான் பார்க்கனும் என்றாள்.
இதைக் கேட்ட உடன் கோபத்தில் முகம் சிவக்க டாக்டர் பேர் என்ன ஃபோன் பண்ணி உடனே வர சொல்லுங்க என்று கத்தினாள் திலோத்தமா.
கமிஷனர் திரும்பி இன்ஸ்பெக்டரை பார்த்து ஆள் பேர், ஃபோன் நம்பர் கேட்டு உடனே இன்ஃபாம் பண்ணி இன்னும் பத்து நிமிடத்தில் இங்க இருக்கச் சொல்லுங்க என்று உத்தரவு பிறப்பித்தார்.
டாக்டர் வர்றதுக்கு முன்ன குழந்தையை செக்கப் ரூமுக்கு கொண்டு படுக்க வைக்க சொல்லுங்க சார் என்று நர்ஸ் கூறவும்,
திலோவை பார்த்து கண்ணை காண்பித்தார்.
சத்தமில்லாமல் குழந்தையுடன் அவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
உள் அரையில் நுழைந்ததும் நர்ஸ் ஒரு ஃபார்மும் பேனாவும் எடுத்துக் கொண்டு திலோத்தமாவை நோக்கி குழந்தையின் பேர் சொல்லுங்க, இந்தக் குழந்தைக்கு நீங்க என்ன உறவு என்றாள்.
விழிகள் விரிய திகைத்து நின்றாள் திலோத்தமா....
பதில் வராமல் போகவும் நிமிர்ந்து இவள் முகத்தை பார்த்த செவிலி ஹலோ மேடம் குழந்தைக்கு நீங்க என்ன உறவு என்று அழுத்தி கேட்டாள்.
அம்.... அம்.... அம்... அம்மா என்றாள்.
பேர் சொல்லுங்க என்றவுடன்,
திலோத்தமா.
குழந்தையோட பேர் என்றவுடன்
ஒரே ஒரு வினாடி தயங்கி பின் சரளமாக " கண்ணன்" என்றாள்.
இங்கு நடந்த அனைத்தையும் அந்த அறையின் வாசலில் நின்று கவனித்து கொண்டு இருந்த கமிஷனர், அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.
நினைத்த அளவுக்கு சுலபமாக முடியும் விஷயம் இல்லை இது என்ற எண்ணம் பயங்கரமாக அவர் மனதில் எழுந்தது.
சந்திப்போம்.....
கவிபாரதீ ✍️