கேரளா பயணம்

சமீபத்தில் நான் என் குடும்ப உறுப்பினர்களுடன் கேரளாவில் உள்ள குருவாயூர் மற்றும் வேறு சில கோவிகளுக்கு சென்று வந்தேன். இந்தப்பயணம் குறித்து சில செய்திகளை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
குருவாயூர் கோவிலின் மிக அருகாமையிலேயே உள்ள ஒரு ஹோட்டலில் இரண்டு இரவுகள் நாங்கள் தங்கினோம். மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படும் நல்ல ஹோட்டல் இது. இரவு படுத்துறங்கும் நேரம் தவிர வேறு எந்த நேரத்தில் கேட்டாலும் சூடான வெந்நீர் இங்கு கிடைத்து.
குருவாயூர் கோவில் வளாகம் மிகவும் சுத்தமாக இருந்தது. கேரளாவின் எல்லா கோவில்களுக்கும் அழகு சேர்ப்பது கோவிலில் உள்ள எண்ணெய் தீபங்கள் மற்றும் விளக்குகள் தான். ஒவ்வொரு கோவிலிலும் எத்தனை தீபங்கள்! விளக்குகள், இவற்றில் எத்தனை வகைவகையான வடிவமைப்புகள்! குறிப்பாக, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலின் வாசலில் உள்ள தீப விளக்கு மிகவும் உயரமானது. அந்த விளக்கின் கீழிருந்து மேல்புறம் வரையில் எண்ணெயில் ஊறி எரிகின்ற திரிகள். இரவினில் பார்க்க மிகவும் ரம்மியமாக இருந்தது. இந்த கோவிலில் அவ்வளவு கூட்டம் இருந்தபோதும் கூட, அதிகமாக சத்தமே இல்லை. மற்ற கோவில்களைப்போலவே இந்தக்கோவிலும் ஒரு வர்த்தக தலமாக மாறிவிட்டது. சிறப்பு தரிசனம் செல்வதற்கு ஒரு நபருக்கு டிக்கெட் விலை ஐநூறு ரூபாய். சந்தனம் கொடுக்கும் இடத்தில், பணம் கொடுக்கவில்லை என்றால், கண்ணுக்கு தெரியாத அளவில் கொஞ்சம் சந்தனம் தருகிறார்கள். பத்து ரூபாய் தொடங்கி, சந்தனம் விநியோகிப்பவருக்கு கொடுக்கப்படும் பணத்திற்கு ஏற்ப, சந்தனம் கூடுதலாகவும், சிறிய வாழை இலையில் பூவுடன் சேர்த்து கொடுக்கப்படுகிறது.
கோவிலின் அருகே உள்ள ஒரு சிறிய ஹோட்டலில் விடிகாலை நான்கு மணி அளவில், நிர்மால்ய தரிசனம் பார்த்துவிட்டு திரும்புகையில், சூடாக குழாய் புட்டும் கடலை கறியும் கிடைத்தது. புட்டு அவ்வளவு மிருதுவாக சுவையாக இருந்தது.ஆப்பம், இட்லி போன்ற சிற்றுண்டி வகைகளும் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது.
பொதுவாக, கேரளாவில் அசைவம் உண்பவர்கள் மிகவும் அதிகம் இருந்தாலும், குருவாயூர் கோவில் அருகாமையில் அசைவ உணவு ஹோட்டல் ஒன்றைக்கூட நாங்கள் பார்க்கவில்லை. இது கோவிலுக்கு தனி ஒரு சிறப்பை தருகிறது. கோவிலை சுற்றி பல சிறிய கடைகள் உள்ளன. தின்பண்டம் தொடங்கி பெண்களுக்கு தேவையான பொருட்கள், பூஜை பொருட்கள், விதவிதமான அலங்காரத்துடன் குருவாயூர் கிருஷ்ணனின் படங்கள், யானை முகத்தில் சாற்றப்படும் அழகான 'நெற்றிப்பட்டம்' போன்ற பல பொருட்கள் கிடைக்கின்றன. கேரளாவில் எந்த பெரிய கோவிலுக்கு சென்றாலும் 'நெற்றிப்பட்டம்' விற்கப்படுவதை காணலாம். அதைப்போல மரத்தில் செதுக்கப்பட்ட யானைகள் இங்கு பிரசித்தி, பல வடிவங்களில், சிறிது முதல் பெரிய உயரம் வரையில் இந்த யானை பொம்மைகள் கிடைக்கின்றது. இந்த கோவிலில் சில வருடங்களுக்கு முன்பு வரை இறை சேவைபுரிந்து, உயிர் வாழ்ந்து வந்த 'குருவாயூர் கேசவன்' என்கிற யானை மிகவும் பெயர் பெற்றது
இன்னொரு விஷயம் நான் கவனித்தது, பொதுவாக கோவில் வளாகத்தில் எவரும் பிரசாதத்தை சாப்பிடுவதில்லை. திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோவிலுக்குள், நெய் மற்றும் சிறிய அப்பம் போன்ற பிரசாதத்தை வாங்கி அங்கேயே நான் சாப்பிட ஆரம்பித்தபோது, அருகில் சென்று கொண்டிருந்த ஒரு கேரள பெண்மணி என்னிடம் "பிரசாதத்தை வெளிப்புறம் சென்று சாப்பிடவும். கோவிலின் உள்ளே சாப்பிடக்கூடாது" என்று சொன்னார்கள். கோவிலின் சுத்தத்தையும் தூய்மையையும் அவர்கள் எந்த அளவுக்கு பாதுகாக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். நான் தமிழ் நாட்டில் நூற்றுக்கணக்கான பெரிய மற்றும் புராதனமான கோவில்களுக்கு சென்று வந்திருக்கிறேன். கேரளாவை பார்க்கும்போது, நம் கோவில்களில் அந்த அளவுக்கு சுத்தம் இல்லை என்பது கொஞ்சம் மனவேதனையைத் தருகிறது.
இன்னொரு விஷயம், கேரளாவின் கோவில்களின் பிராகாரத்தில் பக்தர்கள் அதிகம் அமர்வதில்லை. சொல்லப்போனால் அவர்கள் கோவிலில் வந்து தரிசனம் செய்துவிட்டு சென்றுவிடுகின்றனர். நம் கோவில்களில், பலர் கோவிலின் உள்ளே பல இடங்களில் அமர்ந்துகொண்டு, பிரசாதம் வைத்துக்கொண்டு சாப்பிடுவது, அதிக நேரம் அளவளாவிக்கொண்டிருப்பது, கோவில் பிராகாரத்திலேயே ஆங்காங்கே பிரசாதம் கொடுக்கப்பட்ட இலையை அல்லது தொண்ணையை போட்டுவிடுவது போன்ற செயல்களை செய்கின்றனர். இறைவனின் தன்மைக்கு அடுத்தது என்று சொல்லப்படும் சுத்தம், நம் ஊர் கோவில்களில் அந்த அளவுக்கு இல்லை என்பதே என் கருத்தாகும்.
அதிகம் பிரசித்தியும் பழமையும் புராதனமும் நிறைந்த கோவில்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம் இருக்கின்றன. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மதுரை மீனாட்சி, சிதம்பரம் நடராஜர், பழனி, தஞ்சை பெரிய கோவில், திருவாரூர் தியாகராஜர் கோவில், வரதராஜ பெருமாள், திருத்தணி, வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி மற்றும் திருக்கடையூர் கோவில்கள், கும்பகோணத்தில் உள்ள பல கோவில்கள் இவை எல்லாமுமே மிகவும் புகழும் பழமையும் வாய்ந்த கோவில்கள். ஆயினும் சுத்தம் தூய்மை சுகாதாரம் அங்கே மக்கள் நடந்துகொள்ளும் முறை இவற்றை பார்க்கையில், நாம் கேரளா கோவில்களிடமிருந்து கொஞ்சம் கற்கவேண்டியது உள்ளது.
நாங்கள் சென்ற அனைத்து கோவில்களுக்கும் ஆண்கள் மேலாடையை எடுத்துவிட்டுதான் செல்ல முடியும். அதைப்போலவே குருவாயூர் மற்றும் வேறு சில கோவில்களுக்குள் ஹிந்து அல்லாதவர்கள் செல்லமுடியாது. இந்த கெடுபிடிகள் அவ்வளவு வரவேற்கத்தகுந்தவை அல்ல என்பதும் என்னுடைய கருத்து.
கேரளாவில் பிறக்கும் மக்களில், குறைந்தது ஐம்பது விழுக்காடு (தோராயமான கணிப்பே) மக்கள், வேறு மாநிலங்களுக்கும் வேறு தேசங்களுக்கும் சென்று வசிக்கின்றனர். இதனால் கேரளாவில் பொதுவாக ஜனத்தொகை குறைந்தே காணப்படுகிறது. கோவில் மட்டும் இல்லை, வேறு பல பொது இடங்களும் இங்கே ஓரளவுக்கு நன்கு சுத்தமாக சுகாதாரமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். கூட்டம் அதிகம் இல்லையேல் அங்கு சுத்தமும் அதிகமாக இருக்கும். ஆயினும் கேரளா மக்கள் இயற்கையிலேயே சுத்தத்தை கடைபிடிப்பவர்கள். அவர்கள் சென்னையில் இருந்தாலும், வேறு பல மாநிலங்களில் இருந்தாலும், ஒரு நாளில் இரண்டு முறை குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள். நாம் வாரத்தில் ஓரிருமுறை தலைக்கு குளிப்பதே பெரிய விஷயம். இவர்கள் தினமுமே தலைக்குத்தான் குளிக்கிறார்கள். தலைக்கு தேங்காய் எண்ணெய்தான் போட்டுக்கொள்கிறார்கள். சமையலில் தேங்காய் எண்ணெயைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால்தான் என்னமோ இவர்கள் பலர் ஆரோகியமான அடர்ந்த கருப்பு தலை முடியுடன் இருக்கிறார்கள்.
குருவாயூ, திருச்சூர் தவிர, காலடி மற்றும் சோட்டாணிக்கரை பகவதி கோவில்களுக்கும் சென்று வந்தோம். காலடி என்கிற இடத்தில்தான் அத்வைத சித்தாந்தத்தை நமக்கு அருளிச்சென்ற ஆதி சங்கரர் பிறந்தார். அவர் வாழ்ந்த முப்பத்தி இரண்டு வயதிற்குள் அவர் இந்தியா முழுவதும் சென்ற இடங்கள் கொஞ்சம் அல்ல, அவர் கடவுள்களையும், கடவுள் தன்மையையும் பற்றி எழுதிய பாடல்கள், தோத்திரங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. தென்கோடியில் தாயை விட்டு பிரிந்து, சந்நியாசம் ஏற்று வட இந்தியாவில் இருந்தபோதும், அவரது தாய் இறக்கும் தருவாயில் இருந்தபோது, காலடிக்கு வந்து, அவரது ஈமச்சடங்குகளை செய்துவிட்டு தாய்க்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிய துறவி இவர். சங்கரரின் இரண்டு மூன்று வயதிலேயே அவரது தந்தை காலமானார். அப்படி இருக்கையில், விதவைத் தாயை கவனித்துக்கொள்ளாமல், ஊரில் தனியாக விட்டுவிட்டு, அவர் சனாதன தருமத்தை இந்திய முழுவதும் சென்று பரப்பிய செயல், தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்கும்படியாக இல்லை. ஆதி சங்கரர் பெற்ற தாயை, அனாதையாக விட்டார் என்பது தர்மத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் நிச்சயமாக பொருந்தும் செயல் அல்ல.
ஒரு முறை ஆதி சங்கரர் பாதையில் சென்றுகொண்டிருக்கையில், எதிரில் ஒரு சாதாரண வேறு குலத்து மனிதன் வந்துகொண்டிருந்தபோது, சங்கரர் அந்த மனிதனிடம் " கீழ் குலத்து மனிதனான நீ, என்மேல் படக்கூடாது, நகர்ந்து செல்" என்று சொன்னபோது அந்த மனிதன் ' நீங்கள் என்னை நகரச்சொல்கிறீர்களா அல்லது என் தேகத்தை நகரச்சொல்கிறீர்களா?' என்று கேட்டவுடன்தான் அவருக்கு உண்மையான ஞானோதயம் கிடைத்தது என்பது வரலாறு. அதாவது, மனிதர்கள் பலவிதங்களில், அவர்களது தோற்றங்களில், செயல்களில், செய்யும் தொழில்களில் வேறுபாடு கொண்டவர்கள் ஆயினும் அனைத்து மனிதர்களின் உள்ளே இருக்கும் ஆத்மா அனைவர்க்கும் ஒன்றே. அந்த ஆத்மாவே பரமாத்மா என்று எங்கும் பறந்து விரிந்து கண்ணுக்கு விளங்காத மாபெரும் இயக்கும் பேராற்றலாக இருக்கிறது என்பதுதான் ஆதிசங்கரருக்கு மேற்கூறிய நிகழ்ச்சி கற்பித்த பாடம். எனவே ஆதி சங்கரர் மக்களில் எந்தவித பாகுபாடுகளையும் காணவில்லை.
அவருக்கு பின் வந்த அவரது சீடர்கள் என்று சொல்லப்படும் சந்நியாசிகள் ஆதி சங்கரரின் உண்மையான இறை தத்துவத்தை சரிவர மக்களுக்கு கொண்டு செல்லவில்லை என்றுதான் நான் நினைக்கிறன். ஏனெனில், அவரது சீடர்கள் ஆதி சங்கரரின் கருத்துக்களையும் இறைதத்துவதையும் சரியான முறையில் உள்வாங்கி அதை மக்களுக்கு சொல்லியிருப்பார்களாயின், இந்து மதத்தினற்குள்ளாகவே பல ஜாதிகள் மற்றும் குலங்கள் உருவாகியிருக்க வழியே இல்லை.
எங்கேயோ தொடங்கி எங்கேயோ போய்விட்டேன் என்கிறீர்களா. என்ன செய்வது, கேரளாவில் இரண்டு நாட்கள் தங்கி கோவில்களுக்கு சென்றுவிட்டு, காலடி எனும் புனிதமான ஊரில் எனது காலடி பட்டதனால், ஏதோ ஒரு உணர்ச்சி பெருக்கில் ஆதிசங்கரரை பற்றியும் குறிப்பிட்டேன்.

சரி, இப்போது கட்டுரையை முடிக்கும் நேரம் வந்துவிட்டது. குருவாயூர் கோவிலிலிருந்து, சுமார் ஐந்தரை கிமீ தூரத்தில் 'சவக்காடு' என்னும் கடற்கரைக்கு சென்று வந்தோம். மாலை ஏழு மணி அளவில் சென்றபோது, அங்கே கடல் அலைகள் அழகுடன் ஆர்பரித்துக்கொண்டிருந்தன. கடலின் அலைகளில் காலை வைத்தபோது மிகவும் குளிர்ச்சியாக இருந்தது, ஆனால் பதமாக இல்லை. இருப்பினும் பதினைந்து நிமிடங்கள் கடலின் அலைகளை கண்டு ரசித்து விட்டு கால்களை நனைத்துவிட்டு, திரும்பி வருகையில், சிற்றுண்டி எடுத்துவிட்டு ஹோட்டல் அறைக்கு வந்தோம்.

திருவனந்த புறம் சென்று வந்து விட்டேன். கேரளாவில் இன்னும் பல ஊர்களை சென்று பார்க்கவேண்டும் என்னும் ஆர்வம் இருக்கிறது. இறைவனின் தேசம் எனச்சொல்லப்படும் கேரளாவை நாம் அனைவருமே ஒருமுறை சென்று அங்குள்ள இயற்கை அழகையும், மக்களில் எளிய இயற்கை தன்மைகளையும், சுற்றி பார்க்கவேண்டும்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (16-Aug-23, 4:00 pm)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : kerala payanam
பார்வை : 136

சிறந்த கட்டுரைகள்

மேலே