என் தேவதைக்கொரு வாழ்த்து

என் தேவதைக்கொரு வாழ்த்து

சின்னுக்குட்டி.

அப்பாவின் சாமிக்கு, சிறுதேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்துடா

எனக்கும் உங்கம்மாக்கும்
நீ முதல் சொந்தம்.
காலம் உன்னையும்
உன் தம்பியையும் உங்கம்மாவையும்
விட்டுப் பிரியணும்னு
சொன்னப்போ
ஒரு தைரியத்திற்கு துணை நின்றது
என் தன்னம்பிக்கை.

உலகத்தில் உண்மை அன்பைத் தவிர
வேறு எதற்கும் இத்தனை
சக்தி இருக்கமுடியாது டா
தனிமையில் பயணப்பட்ட
பிரபஞ்சத்திற்கு
உன் பெயரிட்டேச் சென்றிருந்தேன்.
தப்பித் தப்பிப்
போகும் இடங்களுக்கெல்லாம்
உன் பெயரை
என் உயிரடையாளப்படுத்திக்கொண்டேன்.

இன்றும்தான்

தனித்து புறப்படுகிறேன் எனும்போது
ஒரு டாட்டா சொல்லிவிட்டு
ஒருமுறையே உன் கண்களைக்
கண்டுவிட்டு
திரும்பிப் பார்க்கமுடியாமல்
கழுத்துவரை சுவாசம் முட்டும்
உயிரானது பலமுறைக் கரைந்து
கூடு திரும்பும்
அக்கணமே இறந்துவிடுவேனோ
என்பதைப்போல்.

முதல் முறை
அப்பா என உன் கனத்தக்குரலோடு
கட்டித் தழுவியபோது
என் அடிவயிறின் ஏக்கக் கதறல்களை
மனபீடத்தில் ஒலிப்பதிவு செய்துக் கொண்டேன்.

உன்‌முகம் பார்க்க
என் எல்லா உணர்வுகளையும் அடக்கிவைத்த எனக்கு
இந்த பெரும் தனிமை
கதறி அழ ஆசுவாசமாய் இருக்கிறது மகளே .
எனக்கேப் பிடித்துப்போன பரிசாய்
இதை நான்
கருதிக்கொள்கிறேன்.

சில சுயபலிகள் எல்லாம்
எடுக்கத் துணிந்திருக்கிறேன் என்பது உன் ஒருவளுக்காக மட்டுமே.

உங்களைப் பிரிந்திருப்பதும்
உடன் கட்டை ஏறுவதைப் போலத்தான்
எரிந்து சாம்பலாகியும்
உயிர்த்தெழும் பக்குவம்
பழகியிருக்கிறேன்.

என் உடன் நீ யாராலும் அழிக்கமுடியாத
ஆழத்தில் இருக்கிறாய்
என்றே இவ்வாழ்க்கையை நான்
பொருட்படுத்திக் கொள்கிறேன்.

ஒவ்வொரு முறை
நீ அழைக்கும்போதெல்லாம்
உனக்கு ப்ரியமான பொருள் ஒன்று
காணாமல் போகிறதாக
புகார் செய்கிறாய்.
உன் நினைவிருக்கவேண்டி
வந்துபோகும்
முறைக்கு முறை
ஒவ்வொருப் பொருளாய்
களவுக்கொண்ட திருடனிடமே .

உன் அப்பாதான் அந்தத் திருடன்.
இதை எப்போது கண்டு பிடிப்பாய் ம் ?

நானும் அவளும் வெற்று இலையில்
வாழ்க்கைத் தொடங்கினோம்
சொந்தமாய் நீ வந்தாய்
பொறுப்பு இதுதான் என
உன்னை சுமந்த என் கைகளின் நடுக்கம்
உணர்த்தியது.

இந்த ஆண் தேவதைக்குப் பிறந்த பெண் தேவதை நீ என்பதால்
உலகத்தில்
ஒருவரும் கூறாதப் பெயரிட்டேன்.
நீ எங்கள் வாழ்வை
வளமாக்கினாய்.
அர்த்தமாக்கி அழகாக்கி
என் உள்ளங்கைகளில் வைத்தாய்.
எப்படி இப்பிறவியில் உன் கடன் தீர்க்கப்போகிறேன்.

என்னை நேசித்த அத்தனைப் பெண்களும்
என்னிடம்
ஒரு தந்தையின் பாசமே உணர்ந்திருந்தார்கள்.
இந்த உலகத்திற்கு சொல்லிக் கொள்ள
வேறு எதை நான்
கொண்டுபோகிறேன்.

எத்தனையோ நெருக்கடிகளுக்கு
நடுவில்
உங்கள் மூவரைமட்டும்
சொந்தம் கொள்ளவேண்டுமாய்
தக்கவைத்துக் கொள்ளவேண்டுமாய்
நெக்குருகி நிற்கிறேன்.

என்னை உபதேசப்படுத்த
இன்னுமொரு கீதையோ குரானோ
விவிலியமோ வேண்டாம்

அப்பா எனும் கனத்த குரலின்
ஒற்றை
நினைவொலி போதும்
எப்பேற்பட்ட
அழுத்தும் பேராபத்துகளிலிருந்தும்
ஒன்றோ இரண்டோ
அதற்கு மேலான
நெட்டிப்புகளிலிருந்து
தானெழுந்து கொள்வேன்.

யார்
என்மீதுக் கோபித்துக் கொண்டாலும்
உலகத்தின்
அமைதிகளை எல்லாம்
உனக்கெனவே
என் மொழி ஆக்கினேன்.
அன்றுமுதல்
என் அசுராம்சங்கள் எல்லாம்
உன் பேரன்பின் பார்வையால்
சவதாகமாகின.

உறங்கிக் கொண்டிருக்கும் உன்னிடம்
அருகில்
கணநேரம் இருந்துவிட்டு
பார்த்த கொதி தீராத முன்னமே
என் கண்களின் நீராவியால்
இதோ சபை நிறைக்கிறேன்
ஏதும் சொல்லாமல்
உன்னை ஏமாற்றி
அந்த அறைவிட்டுச் செல்கிறேன்

மன்னித்துவிடுடா .

உயிர்ப்புக்குரிய உன் அப்பா

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (3-Sep-23, 4:21 am)
பார்வை : 160

மேலே