மதுபோதை

சாராயம் தொட்டுச் சரிகின்ற சீர்கேடு
ஆராயா திந்நாள் அரசு
*
அரசின் வருவாய் அதிகரித் தற்கோர்
வரப்பிர சாதம் மது
*
மதுவில்லா ஆட்சி மலர்ந்திடு மானால்
அதுவன்றோ நாட்டின் அரண்
*
அரணாக வென்று அரசாள வந்தார்
முரணாவ தாலே முடக்கு
*
முடக்குவா ரின்றியே முன்னேறும் போதை
வடமிழுப் பார்க்கே வனப்பு
*
வனப்பொடு யார்யாரோ வாழ்வதற் காக
தினங்குடிப் பார்க்கே தெரு
*
தெருவினில் மக்கள் தினசரி நிற்க
உருவான போதை உடும்பு
*
உடும்புப் பிடியாய் உடம்பைக் கெடுக்கும்
இடும்பைத் தொடுதல் எதற்கு?
*
எதற்கென வெண்ணும் இதய மிருந்தால்
இதற்கோர் முடிவும் இருக்கு
*
இருக்குமிவ் வாழ்வை இயல்பொடு வாழார்
சருகாகத் தானேகஞ் சா
*
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (4-Sep-23, 1:55 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 81

மேலே