கடைபிடியாடா

நல்லநேரம் பார்த்துதானே எதுவும் செய்கிறாய்
கெட்டநேரம் வந்தா தானே ஒடுங்கி சாகிறாய்
நல்லநேரம் கெட்டநேரம் வெளியில் இல்லையடா
அவை இரண்டும் உன் உள்ளே இருக்குது தேடிப்பாரடா

வழிகள் பல தரணியெங்கும் நெறைஞ்சி கெடக்குது - உன்
வழியைத் தேடிப் போகத்தானே அறிவும் இருக்குது
அறிவை நீயும் கூர்மையாக்கி என்றும் வையடா - பகுத்
தறிவை கொண்டு துன்பங்களை தூக்கி எறியடா

அழகை ரசிக்க உனக்கு ரெண்டு விழிகள் இருக்குது - அந்த
அழகுக்குள்ளே ஆபத்துந்தான் ஒளிஞ்சி கெடக்குது
ரெண்டையுமே புரிந்துகொள்ள ஆறறிவும் இருக்குது - உன்
உள்மனசு சொல்வதை கேட்டால் தெளிவும் பிறக்குது.

பிறர் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொள்ள பொம்மையில்லையடா
அதன் உண்மை நிலை அறிந்து நீயும் புரிந்து கொள்ளடா
புரிந்து கொண்ட அத்தனையையும் நிலைநிறுத்தடா - வாழ்வில்
நிலைநிறுத்தி ஒவ்வொருநாளும் கடைபிடியாடா

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (9-Sep-23, 5:18 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 143

மேலே