மனசாட்சி

மனசாட்சி

இன்றுடன் அதன் நட்பு துண்டிக்கப்பட்டு இரண்டு நாட்களாகிறது. எப்பொழுதும் வாசலை பார்த்தபடி அது நின்று கொண்டிருப்பது போல இப்பொழுதும் எண்ணத்தில் தோற்றம் அளித்து கொண்டிருக்கிறது.
ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு மேலான நட்பு, தந்தையினால் அறிமுகப்படு -த்தப்பட்ட நட்புத்தான். இவனது கையை பிடித்து அழைத்து வந்தவர், இவனது முழங்கால் உயரமே நின்று கொண்டிருந்ததை பார்த்து “நீதான் பார்த்துக்கணும்” உன் பொறுப்பு என்று சொன்னதும் ஞாபகம் இருக்கிறது.
அப்பாவின் மரணத்து துக்கத்தை கூட இதன் அருகில் அமர்ந்துதான் போக்கியிருக்கிறான். அதன் அருகில் இருப்பது எப்பொழுதும் ஒரு பாதுகாப்பாகவே உணர்ந்து கொண்டிருப்பவன்.
திருமணம் ஆன பின்னால் மனைவியை வீட்டிற்குள் அழைத்து வந்த போது அதனை அறிமுகப்படுத்தும் போது அவள் சிரித்தாள். இவன் “மறை கழண்ட கேசோ” என்று கூட நினைத்திருக்கலாம். ஆனால் மிக அழுத்தமாகவே அவனது எண்ணங்களை
அவளிடம் சொல்லி வைத்தான்
அதற்கு அடுத்து ஓடிய கால ஓட்டங்களில் இவனுக்கு குழந்தைகள் பிறந்து வளர்ந்து வரும்போது ஏற்பட்ட மன கஷ்டங்கள், பொருளாதார சிரமங்களை இதனிடம் சொல்லி புலம்புவான்.
இவனுக்கு பிடித்த விசயமே இவனது எந்த புலம்பல்களுக்கும் அது பதில் அளிப்பதே இல்லை, அதன் அசைவுகளின் வருடல்களே இவனுக்கு ஆறுதல்களாய் இருக்கும்.
இவன் வீட்டுக்குள் இல்லாத பொழுது இங்குதான் இருப்பான் என்பதை மனைவி கண்டு பிடித்து விடுவாள் “அதுகிட்ட புல்மபி என்ன பிரயோசனம்” நடக்கறதை பார்க்காம சும்மா புலம்பிகிட்டு…
அவளது வார்த்தைகள் இவனுக்கு உள்ளத்தில் ஊசியை ஏற்றுவது போலிருக்கும். அவளை சொல்லி என்ன பயன்? பொருளாகாதர சிக்கல்கள், அதை சந்திக்கும் எல்லா மனிதர்களுக்கும் வரும் கோபம்தானே.! அதனால் இவளது கேலி கிண்டல்களை பெரிதாக எடுத்து கொள்ளாமாட்டான்.
ஆனால்,இவனே இதனுடைய இழப்புக்கு தயாராக இருந்த போது அவள் தீவிரமாக எதிர்த்தாள். இவனுக்கு அப்பொழுது தோன்றியிருந்த சுயநலம், பணச்சிக்கல், எல்லாமுமாய் சேர்ந்து, மனைவியின் பேச்சை உதாசீனப்படுத்தி விட்டு இந்த முடிவை எடுக்க வைத்து விட்டது. இதனால் பெரும் பொருட் செலவு, பண செலவு மிச்சப்பட்டு போயிருந்தாலும் மனசாட்சி அவனை குற்றம் சாட்டுவதை அவனால் இப்பொழுது சந்திக்கமுடியவில்லை.
நாற்காலியை வாசலில் போட்டு மெளனமாய் அது எப்பொழுதும் நின்று கொண்டிருந்த இடத்தை பார்த்து கொண்டிருக்கிறான். சூரியனின் கோப வெப்ப அலைகளை இதுவரை தாங்கிகொண்டிருந்த நண்பன் இல்லாததால் இவன் கால்பாதம் வரை அலைகள் வந்து விழுந்து தகித்து கொண்டிருக்கிறது. இவனது உள்ளத்தை போலவே.
அது நின்றிருந்த இடம் வெறுமையாய், பெரும் பள்ளமாய் காட்சி தருகிறது. அங்கங்கு அதனை வெட்டி வீழ்த்தியதால் ஏற்பட்ட சிதறல்கள் கிடக்கிறது. எவ்வளவுதான் பழகினாலும் நீ மனிதன் தானே எப்படியும் கடைசியில் உன் குணத்தை காட்டி விடுவதுதான் உன் இயல்பு ஆயிற்றே, குற்றம் சாட்டி பேசுவது போல் இருந்தது அப்பொழுது வீசிய வெப்ப காற்று.
காம்பவுண்ட் கேட் திறக்கும் சத்தம், பார்வை அங்கு திருப்புகிறான், மரசாமான்கள்
வாங்கி விற்கும் தரகர் வந்து கொண்டிருந்தார். நாம எதிர்பார்த்ததை விட நல்லா ஸ்ட்ராங்கா இருக்குதாம். கட்டில் பீரோ, கூட ஒரு நாற்காலியும்,மேசையும் செஞ்சுடலாமுன்னு சொல்றான் ஆசாரி. பெரிய செலவு இருக்காது, ஆசாரி கூலி மட்டும்தான்..
வேர் முட்டு கூட, கறிக்கடைக்காரன் வாங்கிட்டான். அதுலயும் உனக்கு வருமானம்தான். மிச்சத்தை விறகு கடைக்காரன் எடுத்துகிட்டான். சொல்லிக்கொண்டே திண்ணயில் உட்கார்ந்தவர் “அம்மணி சொம்புல தண்ணி கொண்டா” மனைவியிடம் சத்தமாய் சொன்னார்.
எப்படியோ இது வந்த பின்னால்தான் இந்த வீட்டில் பெண் பிறந்தாள் என்று பெருமையாக பேசிய அம்மாவும், அப்பாவும், கடைசியில் அவளது திருமணத்துக்காக இதனது உடலை வெட்டி கொடுத்து பெரும் செலவை தவிர்த்து விட்ட நிம்மதியில் அதனின் எச்ச சொச்சங்களாக உதிர்ந்த இலைகளும் சுள்ளிகளும் வாசல் முழுக்க இரைந்து கிடந்தது. நல்ல வேளை அம்மாவும், அப்பாவும் உலகில் இல்லை. இருந்திருந்தால் இதற்கு ஒப்பு கொண்டிருப்பார்களா?
இவனை குற்றம் சொல்லி என்ன செய்யமுடியும்? தாயும், தந்தையும் போன பின்னால் சகோதரியின் திருமணத்தை தன்னால் முடிந்த அளவுக்கு செலவு செய்து நடத்தும் இவனுக்கு, அதனுடன் முப்பது வருட நட்பாய் இருந்த அதுவும் உதவியிருக்கிறதே என்று மன சமாதானம் அடந்து கொள்வதுதான், இந்த குற்ற உணர்ச்சிக்கு ஒரே தீர்வு.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (20-Sep-23, 10:50 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : manasaatchi
பார்வை : 175

மேலே