மனமே மனமே

பிடிவாதம் பிடிக்கும் பாழும் மனமே
எதிர்வாதம் செய்து ஏய்க்கும் மனமே
முடிவில்லாமல் தினம் அலையும் மனமே
பிடிசாம்பலாய் போவதுதான் இறுதியில் நிஜமே

ஆடும்வரை ஆடி எனை அலைக்கழித்த மனமே
ஆடியஆட்டம் எனை அழித்ததுதான் நிஜமே
சிலசமயம் உன்குடுமி என்கையில் - அந்தோ
பலசமயம் என்வாழ்வோ உன் கையில்

குரங்காய் தாவுவதும் உன்குணமே - மகுடி
பாம்பாய் மயக்குவதும் உன் இயல்பே
தேனாய் இனிப்பதுவும் உன் சிறப்பே - கருந்
தேளாய் கொட்டுவதும் உன் பிறப்பே

கடல் அலையாய் எனைநீ சின்னாபின்னமாக்கினாய்
மடல் விரிந்து சிலசமயம் மலராய் மலர்ந்தாய்
குடல் புழுவாய் உள்ளிருந்து எனை குடைந்தாய்
உடல் சுருங்கி பலசமயம் ஓட்டுக்குள் மறைந்தாய்

மனமே மனமே..உன்னை புரிந்துகொள்ள ஜென்மம் ஒன்று போதாது
மனமே மனமே உன்னை வெல்ல படைகள் நூறு பத்தாது
பணமே பணமே கொட்டிக்கொடுத்தாலும் உன்னை ஏய்க்க முடியாது
குணமேகுணமே மாற்றம் அதில் வந்தால்தான் நீதெளிவாய் நிதமே

உயிரோடு இருக்கும்வரை ஆட்டுவித்த மனமே
உயிர் இருக்கும்வரைதான் உன்னாட்டம் தினமே
உன் உயிர் என்கையில் அறிவாய் மனமே
என்னுயிர் போனபின் உன்மரணம் அக்கணமே

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (28-Sep-23, 8:06 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : maname maname
பார்வை : 145

மேலே