செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே - கவிஞர் இரா இரவி
செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே!
- கவிஞர் இரா. இரவி
*****
கிரேக்கம் இலத்தீன் அரபு சீனம் எபிரேயம்
பாரசீகம் உலக செம்மொழிகளில் சிகரம் தமிழ்!
செம்மொழிக்கான தகுதிகள் உள்ள மொழி தமிழ்
செம்மையாக நிலைத்து நிற்கும் தமிழ்மொழி
தனித்து இயங்கும் தன்மை உள்ள மொழி தமிழ்
தரணியில் பிறந்த முதல்மொழி தமிழ்
மொழிகளில் சிறந்த மொழி தமிழ் என்பதை
முன்மொழிந்து வருகின்றனர் மொழி ஆய்வாளர்கள்
இலக்கியம் இலக்கணம் உள்ள இனிய மொழி
எண்ணிலடங்கா கவிதைகள் உள்ள மொழி தமிழ்
என்று தோன்றியது என்று இயம்ப முடியாத
என்றோ தோன்றிய மூத்த மொழி தமிழ்
பன்மொழி அறிஞன் மகாகவி பாரதி பாடினான்
பாரினில் உள்ள மொழிகளில் இனிமை தமிழ் என்று
பேச்சுவழக்கில் இல்லாத சமஸ்கிருதத்தை
செம்மொழி தான் என்று கோடிகள் விரையம்
உண்மைச் செம்மொழியான தமிழ்மொழிக்கு
உணர்வுடன் செலவு செய்ய முன்வருவதில்லை
தமிழின் புகழை மேடையில் புகழ்வார்கள்
தமிழுக்கு நிதி ஒதுக்கிட மனமில்லை ஒன்றிய அரசுக்கு
தமிழ்மொழி உச்சரிக்காத நாடில்லை உலகில்
தரணிஎங்கும் பரவி ஒலிக்கும் மொழி தமிழ்
சிறிதும் ஐயம் கொள்ள வேண்டவே வேண்டாம்
செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே!