கல்லிற்குள் அமுதம் - ஒன்பது மணி நேர வேலை

""" கல்லிற்குள் அமுதம் - ஒன்பது மணி நேர வேலை """
சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா.

(கதை மாந்தர்கள் அதிகமாக மலையாள மொழி பேசுவதாக இருப்பதால் இயல்பாக மலையாள மொழிச் சொற்களும் அவை இருப்பதால் ஆங்கில மொழிச் சொற்களும் பயன்படுத்தப் பட்டுள்ளன. இயந்திரவியல் மற்றும் விமானபடையுடன் தொடர்புடைய ஆங்கிலத் தொழில் நுட்பச் சொற்களும் அதிகமாக உள்ளன. தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலம் பொதிந்த மண்ப்பிரவாள நடை என்றும் கொள்ளலாம்!)


சுப்பிரமணி புதிதாகப் படையில், விமானப் படையில், சேர்ந்திருக்கிறான். ஆறேழு மாத காலம் ஆகிறது. தனது சுறுசுறுப்பாலும் மிகுந்த பணிவாலும், முன்பின் அவன் அறிந்திறாத புதிய வேலைகளில் கூட அவன் காட்டும் துணிச்சலாலும் அவன் தனது மேலதிகாரி ஜக்ஜித் சிங்ஜியிடம் நல்ல பெயர் எடுத்திருந்தான். எஞ்சினீரிங் படித்த பட்டதாரி ஆதலால் ஆஃபீஸர்ஸ் க்ரேடில் சேர்ந்த அவனை அதற்குள் ஏர்க்ராஃப்ட் கேர் அண்டு மெய்ண்டனன்ஸில் தூக்கிப் போட்டு விட்டார்கள். ஒர்க் ஷாப்பில் அலுப்பில்லாமல் வேலை செய்கிறான். சொன்ன வேலையைச் சொன்னபடிக்கு மேல் ஐந்தாறு படிகள் அதிக அளவில் செய்வது அவன் வழக்கம்.

அன்றும் அவன் ஒர்க் ஷாப்பில் நுழைந்தவுடன் ஜக்ஜித் சிங்ஜி அவனைக் கூப்பிட்டு, "சுப்ரூ! இன்று உனக்கு ஃபிஃப்த் ஃப்ளோரில் வேலை. போய் சீஃபிடம் ஜாப் கார்டை வாங்கிக் கொண்டு ஒர்க் ஷாப்பிற்குப் போ" என்றார். சுப்பிரமணிய சிவன் அவரது பஞ்சாபி நாக்கில் சிக்கிச் "சுப்ரூ" ஆகி விட்டது. யாராவது தமிழராக இருந்திருந்தால் அது நிச்சயமாகச் "சுப்புடு" ஆகியிருக்கும்! அல்லது "சுப்புணி" ஆகியிருக்கும்!

போனான். சீஃப் நாராயணன் குட்டிதான் அன்று இருந்தார். "இவருக்கு உலகில் கவலைப்படுவதற்கு ஒரு புழுக்குஞ்சுச் சமாச்சாரம் கூட இருக்காதோ?" என்று சுப்ரூ அடிக்கடி வியப்பது உண்டு. கார்கில் போரின் போது மிக்கில் இருந்தபடி பாக்கிஸ்தான் எல்லைக்கும் அப்பால் பறந்தபோது கூடச் சிரித்தபடி மாதுரியின் "தம்ப்ரான் தொடுத்தது மலரம்பு! - - தம்ப்ராட்டி பிடிச்சது பூக்கொம்பு! - - " என்று பாடியபடி மிஸ்ஸைல் அடித்தார் என்று எல்லாரும் மெஸ்ஸில் அவரை அடிக்கடி சீண்டுவதைப் பார்த்திருக்கிறான். அப்படி ஒரு சிரித்த முகம் நாராயணன் குட்டி சாருக்கு! எந்நேரமும் ஜேசுதாஸின் ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டு விமான எஞ்சின்களின் பிராணனை வாங்கிக் கொண்டு - - இல்லை இல்லை - - கொடுத்துக் கொண்டு இருப்பார்! அதாவது பிராணான் போன எஞ்சினகளுக்கு மீண்டும் புதுப் பிராணன் கொடுத்துக் கொண்டிருப்பார்.

"சுப்ரூ! குட் மோணிங் மோனே! வரின்னு" என்றவர், "இதெ, நிண்டெ ஜோப் கார்டாண!" என்று ஒரு ஜாப் கார்டில் அவனது அன்றைய வேலைகளை வரிவரியாக அச்சடித்திருந்தவற்றை ஒருமுறை சரிபார்த்து விட்டுக் கன்ஃபர்மேஷன் சீல் வைத்துக் கொடுத்தார். அவர் அப்போது பாடிக் கொண்டிருந்த "என்டெ மனத்தொரு பொன்னூஞ்ஞாலு பொன்னூஞ்ஞாலு - - - " பாடலை அவனும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, சீழ்க்கையில் பாடியபடி உல்லாசமாக ஃபிஃப்த் ஃப்ளோருக்கு ஏறிப்போனான். லிஃப்ட் பாக்ஸிற்கும் போகாமல், படிகளிலும் ஏறாமல் ஸ்டிர்ரப் விஞ்சில் ஒருகாலை வைத்துக் கொண்டு விர்ரென்று மேலேபோனான். கார்த்தியாயினி அருள்! அவளை அப்புறமாகப் பார்க்கலாம்!
ஃப்ளோரில் ஒரு அகலமான டெட்ஸ்டாப்பர் லிஃப்ட்டில் அசையாமல் மாட்டப்பட்ட ஒரு டக்கோட்டா தேமே என்று நின்றிருந்தது, சர்வீஸிற்காக.

டெல்லான் சங்க்மா இரண்டு மில்லிமீட்டர் சிரிப்புடன் விஞ்ச்சை இயக்கினான். "அஸ்ஸாம் சிறுத்தை" என்று பெயரெடுத்திருக்கும் இவன், விஞ்ச் செக்ஷன் முழுவதையும் கட்டி மேய்க்கும் ஒரு சகல கலா வல்லவன். இரண்டு கை இரண்டு கால் என்று ஐந்து விஞ்ச்களை இயக்கிச் சக்கையாக வேலை வாங்குவான். அங்கிருக்கும் ஆண்களில் ஃப்ளோர் படிகளையும் லிஃப்டையும் ஏறெடுத்துக்கூடப் பார்க்காத ஒரு ஜீவன் இந்த சங்க்மாதான். "விர் விர்" என்று எப்போதும் ஸ்டிர்ரப் ரோப் விஞ்சில்தான் போவான் வருவான்.அதிலும் கூடக் கடைசி ஆறேழு அடியிலேயே கீழே குதித்துவிடுவான்.

விமானப் படை ஒர்க் ஷாப் என்றால் ஏதோ பெத்தப்பம்பட்டி சங்கரு பவர் ஸ்ப்ரேயர் மொப்பெட் பைக் ஆம்னிபஸ் ஒர்க் ஷாப் மாதிரி நினைத்துக் கொள்ளக் கூடாது! பெயர்தான் ஒர்க் ஷாப் என்பதே தவிர அது ஒரு முழு இண்டஸ்ட்ரியல் எஞ்சினீரிங் காம்ப்ளெக்ஸ். ஒரு முழு நகரமே அங்கிருந்தது. ரயில்வே யார்டு, லாஜிஸ்டிக்ஸ் யார்டு, ஸ்டோரேஜ் காம்பௌன்டு, ஏர்க்ராஃப்ட்ஸ் வரவும் போகவும் சின்னதாக ரன்வே, ஜெட் டெஸ்ட் க்ரௌண்டு, முடமான ஏர்க்ராஃப்ட்ஸை இழுத்து வர ராட்சச ட்ராலி ட்ராக், ஜெட் ஏர்க்ராஃப்ட் லாஞ்சிங் காட்டப்பல்ட், லாண்டிங் க்ராஃப்ட் அர்ரஸ்ட் கேபிள் விஞ்ச், வெர்ட்டிகல் டேக் ஆஃப் டெஸ்ட் பாட், ஹெலிபாட் என்று ஒரு விமானப் படைத் தளமே அங்கிருந்தது. ராக்கெட் லாஞ்ச்சிங் பாட் ஒன்றுதான் அங்கில்லை. தும்பாவிற்குப் போய் விட்டது. போதாக்குறைக்கு ஐமப்து மீட்டர அகலத்தில் டிங்கிகளையும் கனாய்களையும் மோபோக்களையும் ஹோவர்க்ராஃப்ட்களையும் பரிசோதிக்கவென்று இரண்டு கால்வாய் நீர் வழிகளும் கூட இருந்தன. எல்லாவற்றையும் மறைப்பதற்கும், நாய்ஸ்
ஃபில்ட்டரிங்கிறகும் டிகார்பனைஸிங்கிற்கும் என்று ஆயிரக்கணக்கான மரங்களும் கண்ட இடத்தில் கண்ட மேனிக்குக் கட்டடங்களும் டவர்களும் இறைந்திருந்தன. ஒர்க் ஷாப் என்று அடக்க ஒடுக்கமான மடிசார் புடவைக்கட்டு மாதிரி ஒரு சிக்கனமான பெயர், அவ்வளவுதான்!

சி ஏ டி டிபார்ட்மென்டே ஆறேழு மாடிக்கு இருக்கும்! கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும். இண்டக்ஷன் ஃபர்னஸ் பாரல் வரை, லாசர் கட்டர் முதல் எந்த மெஷின் வேண்டும் என்றாலும் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். சி ஏ டிக்குள் போய் கம்ப்யூட்டரில் நமக்கு வேண்டியதை டிசைச் செய்து முடித்து, நேராக 3டி ப்ரிண்டரில் ஒரு ப்ரொட்டோடைப் மோல்ட் செய்து பார்த்துவிட்டு ஃபௌண்டரி மோல்டிங்கில் பதிவு செய்தால் அடுத்த இரண்டு மணியில் அந்தப் பொருள் நமது மேஜையில் இருக்கும்! சர்தார் பட்டேல் கால ஆவ்ரோவில் இருந்து இன்றைய ராஜ்நாத் சிங் ஜியின் தேஜஸ் வரை எதையும் உடனுக்குடன் சரி செய்து "கன் கண்டிஷனில்" கொண்டுவந்து நிறுத்துவார்கள்!!

"மோனே! எந்நு வல்லிய ஜோப் எங்ஙன இரிக்கணம்னாலம் ஞங்கள் ஒர்க் ஷோப்பில பரஞ்ஞால் மதி!" என்று நாராயணன் கையிலிருக்கும் ட்ரிப்பிள் ராட்செட்டால் அப்போதைக்குப் பக்கத்தில் எது இருந்தாலும் அதை அடித்துச் சொல்வார்!! காஸ் வெல்டர் டார்ச் கையில் இருக்கும் போது யாராவது இடக்கு மடக்காய்க் கேட்டுவிட்டால் "புர் - ர் - ர் - ர்" என்று உறுமும் அதை ஆட்டி ஆட்டிப் பெருமையுடம் சத்தமாகச் சொல்வார்.

சுப்ரூ, தன் ஜோப் கார்டில் நாராயணன் - இந்த நாராயணனுடன் பழகிப் பழகி, "ஜோப்' என்றுதான் எழுத வருகிறது! -குறித்துக் கொடுத்திருந்த வேலைகளை ஒவ்வொன்றாக முடித்து வைத்து, உடனுக்குடன் சீஃப் செல்லைக் கூப்பிட்டுச் சொல்லி ஜோப் கம்ப்ளீஷன் ஸ்டாம்ப் வாங்கி வைத்துக் கொண்டான்.ஒன்றிற்கொன்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் மொண மொணவென்று முப்பத்தொன்பது வேலைகள்! அப்பப்போது டீ - சவுண்டப்பன் கடை "ட்ரிப் டீ" அல்ல, முடீஸ்! - உறிஞ்சிக் கொண்டு சுறுசுறுப்பு ஏற்றிக் கொண்டு மதிய உணவு வரை ஓயாமல் டிங்க்கரிங், மெஷினிங், வெல்டிங், கட்டிங், ட்ரில்லிங் என்று டேபிள் டேபிளாக ஆடி ஓடினான்.

ஜோப் கார்டின் அந்தப் பக்கத்தில் கடைசி வேலை - " ரிமூவ் ஓல்டு எஞ்சின்" என்று இருந்தது. "இதென்னடா வம்பு? இந்த டக்கோட்டாவின் எஞ்சினைக் கழற்றி மாற்றுவதா? நான் ஒருவனாகவா? ஏன் இன்று இப்படி ஒரு கடினமான அசைன்மென்ட்டை நாராயணன் சார் போட்டிருக்கிறார்? கூட ஒத்தாசைக்கு ஒரு புழுக்குட்டி கூட இல்லையே! சரி அவர் சொன்னால் சொன்னதுதான்! நமக்கு என்ன? ஏதாவது முக்கியனான காரணம் இருக்கும். ஆட்கள் இல்லாவிட்டால் என்ன? அதுதான் இத்தனை விஞ்ச், லிஃப்ட், கிரேன் எல்லாம் இருக்கிறதே! விஞ்ச்காரன் டெல்லான் சங்க்மா இருந்தால் போதும்!" என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டு சுப்ரூ சங்க்மாவைக் கூப்பிட்டு விஞ்ச்சைத் தயாராக
வைக்கச் சொல்லி வைத்தான்.

பின்பு, நிதானமாக ஒவ்வொரு நட்டாக போல்ட்டாக வாஷராரக் கழற்றி, ஷாக் ஸ்ட்ரெயின் ரிலீஃப்களை நீக்கி, டேக் போட்டு அதனதன் ட்ரேயில் வரிசைப் படுத்தி வைத்துக் கொண்டான். க்ராஃப்ட்டின் எலெக்ட்ரிக்கல் லேஅவுட் ஸ்கீமாட்டிக் பார்த்து ஒவ்வொன்றாகத் தனியாக லாக் என்ட்ரி போட்டு வைத்தான். ஃப்ளூயிட் சிஸ்டம் ஸ்கீமாட்டிக்கில் ஒவ்வொன்றாக மிகக் கவனமாகப் பார்த்துப் பிரித்து ரி-அஸெம்ப்ளி டேபிள் எழுதி வைத்தான். இது இங்கு மிக மிகக் கட்டாயம். ஜோப் லாக் புக்கில் ஒவ்வொன்றையும் என்ட்ரி போட்டாக வேண்டும். வேலை முடியும் வரை ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு எண்ட்ரி. வேலை முடிவடைவதற்கு முன்னால், தானே இடைவிட்டுச் செய்வதாக இருந்தாலும்
தன்னால் முடியாமல் போய் அடுத்த ஆள் செய்வதாக இருந்தாலும் இது ஒரு சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

இப்படி லொங்கு லொங்கு என்று தபாலாபீஸ் வரவு செலவுப்பேரேடுக் கணக்கு மாதிரி பள்லிச் சத்துணவுக் கணக்கு மாதிரி நொய் நொய் என்று எழுதா விட்டால், அப்புறம் ஏதாவது உதிரிப் பாகம் காணாமல் போய் ஒவ்வொரு வொர்க் ஷாப்பாக ஏறி இறங்க வேண்டும், ஒவ்வொரு ஃபோர்மன் ஃபோர்மனாகத் தாடைக்கு லோஷன் போட்டுக் கெஞ்ச வேண்டி வந்து விடும்! ஜோப் லாக் புக் எண்ட்ரி இருந்தால் அவர்கள் யாரும் பேச்சு மூச்சுக் காட்டாமல் காணாமல் போன உதிரிப்பாகத்தை ஸ்பேர் ஸ்டாக்கில் இருந்து எடுத்துக் கொடுத்து அல்லது தயாரித்துக் கொடுத்து விடுவார்கள். பெரும்பாலும் ஏதாவது காணாமல் போனால், திருச்சி சோரி பஜார் மாதிரி நேராகப் போய்ப் பார்த்தால் நிச்சயமாக அங்குதான் இருக்கும்.

இந்த எழுத்து வேலைக்கு என்றே புதிதாக வந்திருக்கும் "ரெக்ரூட் பெண் குட்டி" யாரையாவது டெர்மினலில் உட்கார வைப்பார் நாராயணன். எழுத வேண்டியதில்லை. இவன் சொல்லச் சொல்ல அவள் டெர்மினலில் எண்ட்ரி போட்டுக் கொண்டு வருவாள். அவளும் முழுதாக டைப் செய்ய மாட்டாள், கீபோர்டில் கோடு கீயைத் தட்டினால் போதும், கம்ப்யூட்டர் மாங்கு மாங்கு என்று எழுதி வைத்து விடும். படித்துப் பார்த்துவிட்டு "ஓக்கே" மீது ஒரு "க்ளிக்" போட்டால் போதும்.

கார்த்தியாயினி என்றொரு இரிஞ்ஞாலக்குடா தேவதை! அவ்வளவு அழகும் நளினமும் அவளிடம் ஒளிவீசும்!! மலையாளக் குண்டு முகவெட்டு இல்லாமல் திருத்தமான தீர்க்கமான முகமும் அளவான நெடுநெடுவென்ற உடலுடன் வெள்ளை யூனிஃபோர்மில் நிமிர்ந்து டக்டகென்று அவள் நடப்பது கம்பீரமாக இருக்கும். தனது அகன்ற கண்களை இன்னும் விரித்து உங்கள் முகத்திற்கு நேராக உறுத்துப் பார்த்தாள் என்றால் இரண்டு லேசர் கட்டர் கன்கள் - கண்கள்!! - அப்படியே துளைத்துக் கொண்டு மனதில் இறங்கிக் கொள்ளும். நீட்டாகப் பல தண்டுகளாக உங்கள் மனம் கிடக்கும்!!

அவள் உறவினர் பலரும் ஏர்ஃபோர்ஸ் அல்லது நேவியில் அல்லது ஆர்மியில் என்று நமது ராஜபாளையத்துக்காரர்கள் மாதிரி, பஞ்சாப்காரர்கள் மாதிரி, மூலைக்கு மூலை நிறைந்திருப்பார்கள். ஒன்றும் கிடைக்காவிட்டால் கடைசிக்கு ஊர்க்காவல் படையிலாவது ரெட் கிராஸ் ஸ்கௌட்டாகவாவது இருப்பார்கள். விடுப்பில் இவள் போகும் போது அழைத்துக் செல்ல ஆறேழு கார்கள் அடித்துக் பிடித்துக் கொண்டு வந்து விடும். முத்தச்சன், முத்தம்மை, அத்தை என்று பெரியவர்களும் அட்டன், சேட்டன், அம்மாவன் என்று சிறியவர்களுமாக ஒரு பட்டாலியன் அல்லது ஸ்க்வாட்ரன் ஆட்கள் வந்து விடுவார்கள்! நாராயணன் குட்டி இந்தக் கூட்டத்தை அப்படியே மொத்தமாகக் கட்டிக்கொள்வார்!!

கொஞ்சம் தாட்டி பூட்டியான நாராயணன் குட்டி சார்,இன்னும் முன்று சுற்றுத் தாட்டி அதிகமாகி விடுவார்! தமது கமலீய கேரளச் சேட்டன்மார் கூட்டத்தைக் கண்டு அவ்வளவிற்கு மகிழ்ச்சி!! மெஸ் கலகலத்துப் போகும்!!

கார்த்தியாயினி அவ்வளவு நளினத்தில் மென்மையில் இருந்தும் கூட மிகவும் உடல் வலிமையுடையவள்; தைரியமானவள். உண்மையில் ஒரு ஏர்க்ராஃப்ட் எஞ்சின் எலெக்ட்ரிக்கல் ஸிஸ்டத்தையே கரைக்காமல் குடித்து விட்டு எம் ஐ டி மெடலிஸ்ட் ஆக வந்தவள். மெக்கானிக்கல் ஃப்ளோரில் சர்வ அநாயாசமாக மெஷின் டூல்ஸ் எடுத்துக் கையாள்பவள். புத்தம் புது ரெக்ரூட்டாக இருந்தாலும் எஞ்சின் சர்வீஸிங் செய்யும் போது கூப்பிட்டதும் வந்து உதவுவாள். சுப்ரூவை மிகவும் பிடிக்கும். ஜோப் லாக் என்ட்ரி போடும் போது அவன் தர வரும் படபடவென்று வரும் கோடுகளை அவனை விடவும் வேகமாகப் போட்டு விட்டு அவனையும் அவன் கைலாவகத்தையும் ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருப்பாள். ப்ரிண்டர் ஃபுட் பெடல்களையும் கீபோர்டையும் ஒரு தேர்ந்த பரத நர்த்தகி மாதிரி அவள்
கால் கைகளால் கம்ப்யூட்டர் டெர்மினலில் வேலை வாங்குவாள். அவன் லாக் கோடு தருவதிலும் அவற்றை ஒரு பிட் விடாமல் என்ட்ரி செய்வதிலும் இருவருக்கும் இடையில் தில்லானா மோகனாம்பாள் ஷண்முக சுந்தரம் இருவரும் கோவிலில் தில்லானாப் போட்டி போட்டது போல ஒரு மறைமுகமான பந்தயம் நடக்கும்!! ஒவ்வொரு சமயத்தில் சுப்ரூவிற்கு அவள் ஒரு விஜில்லென்ஸ் ஆளோ என்று சந்தேகம் வந்து விடும்.

ஒருமுறை, கார்த்தியாயினியே, அவனை, "சுப்ரூ ஸாரே!" என்று கூப்பிட்டு, "எப்போதாவது உங்களுக்கும் பசி எடுக்குமா? இப்படி ஒரு விநாடி கூட ஓய்வில்லாமல் ஒரு ஹ்யூமனொய்டு ரோபோ மாதிரி எப்படி வேலை செய்ய முடிகிறது உங்களால்? ஒருநாளைக்கு நாராயணன் சாரிடம் சொல்லி உங்கள் உடமபைப் பிரித்துப் பார்க்கச் சொல்ல வேண்டும்! உள்ளுக்கும் எலும்புகளுக்கும் சதைகளுக்கும் இரத்தத்திற்கும் பதிலாக கியர்களும் லீவர்களும் ஹைட்ராலிக் ராடுகளும் ஃப்ளூயிட்டும் இருக்குமோ என்னவோ! முதுகில் ஸ்பைடர் மேன் லாசரஸ் மாதிரி இரண்டு மூன்று ந்யூரோ டெண்டக்கிள்ஸ் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்! உண்மையாகச் சொல்கிறேன் சுப்ரூ ஸார்! உங்கள் வேலை வேகமும் சுத்தமும் சுறுசுறுப்பும் மனித சக்தி எல்லைக்கு மீறியவை! எங்கள் முத்தச்சனிடம் சொன்னபோது அவரும்
இதையேதான் சொன்னார்! உங்கள் கைகளுக்கு பகவதி மணிக்கயிறு கட்டி விடச் சொன்னார்!" என்று புகழ்ந்திருக்கிறாள்!

கார்த்தியாயினிதான் முதன்முதலில் ஸ்டிர்ரப் ரோப் விஞ்சில் அந்த ஆறேழு ஃப்ளோர்களையும் ஏறி இறங்கி வந்தவள். ஆண்களே கொஞ்சம் நடுங்கும் அந்த ரோப் விஞ்ச், ஒற்றை ஸ்டிர்ரப்புடன் தொங்கு கைப்பிடியுடன் இருக்கும். பக்கெட் எல்லாம் கிடையாது. நிமிடத்திற்கு ஆறேழு ஃப்ளோர் என்று ரோப்பில் பறக்கும். கைவலுவும் மனவலுவும் இளக்கம் இல்லாத வயிறும் உள்ளவர்கள் மேலும் கீழும் போய்வரலாம். ஜிவ்வென்று மேலெழும்போது வயிறு தானாக **** போய்விடும்! வெர்ட்டிக்கல் டேக் ஆஃப் ஏர்க்ராஃப்டில் நடப்பது போல! "சுப்ரூ சாரே! இந்த ஸ்டிர்ரப் ரோப் பாருங்கள் சார்! சினிமாவில் ஜிவ்வென்று ஹீரோயின் காற்றில் பறப்பது மாதிரி இல்லை? நான் ஹீரோயின் இல்லை, ஆனாலும் லொங்கு லொங்கு என்று யார் படிகளை எண்ணுவது? எனக்கு இதுதான் சரி! வாங்களேன் மேல் ஃப்ளோருக்குப் போகும்
போதெல்லாம் இதில்! இன்னொரு ஸ்டிர்ரப் மாட்டச் சொன்னால் ஆயிற்று. ஒந்நும் பேடிக்காண்டா! இரண்டு பேருமாக ஜிவ் - வ் - வ்!!" என்று அவனது தன்மானத்தைத் தூண்டி விட்டு அவனையும் ரோப் விஞ்ச்சில் ஏற்றினாள் ஒருநாள். அப்புறந்தான் தெரிந்தது சுப்ரூவிற்கு அவள் சொன்னது உண்மைதான் என்று! ஏழாவது முதலாவது ஃப்ளோர்களுக்கு இடையில், இரண்டொரு நிமிடப் பயணம்தான்! நாராயணனே, " மோளே! இதர சின்னக் குட்டிக்கின்னு இத்ர வளர தைர்யம் எங்கில், இதில் ஏற எனிக்குப் பேடியாகுன்னது!" என்று மனமாரப் பாராட்டி மகிழ்ந்தார்!

சுப்ரூ அடிக்கடி அவளது தோள்களைப் பார்த்து ஆச்சரியப் படுவான். அவற்றின் அழகிற்காக எல்லாம் ஒன்றும் இல்லை. அவளுக்கு ஏதாவது வெள்ளைநிற இறக்கைகள் தோள்களில் இருக்கின்றனவா என்று பார்ப்பான்!! அவளைப் பார்த்தால் அத்தனை மென்மைக்கும் நளினத்திற்கும் தேவதைத் தனத்திற்கும் அவள் ஒரு மனிதப் பெண் என்ற நம்பிக்கையைத் தருவதில்லை!! நமது ஏர்ஃபோர்ஸ்காரர்கள் எப்படித்தான் இப்படித் தெள்ளிப் பொறுக்கி வைரங்களால் ஆன ஆட்களைப் பிடிக்கிறார்களோ! இன்று ஏனோ அவளையும் காணவில்லை."இன்று ஏன் வரவில்லை அவள்?" சுப்ரூவிற்குச் சந்தேகம்.
"பறந்து போய் விட்டாளோ என்னவோ, தேவருலகத்திற்கு!" என்று!

ஒருவழியாக அவனும் சங்க்மாவுமாக நான்கைந்து செய்ன் புல்லி விஞ்ச் வைத்து - இதற்கு இங்கு மின்சார விஞ்ச்களை நமபவே மாட்டார்கள்! நான்காவது பெட் போல்ட் கழற்றி விஞ்சை மாட்டியதும் மின்சாரம் போய்விடும்! அப்புறம் அந்த ஏர்க்ராஃப்ட் பறந்த மாதிரித்தான்! - எஞ்சினை அல்லேக்காகத் தூக்கித் தொங்கவிட்டு விட்டு சுப்ரூ ஜோப் கார்டு என்ட்ரியை முடித்து வைத்தான். கடைசியில் இருந்த ஜோப் கம்ப்ளீஷன் ஸ்டாம்பை சீஃப் ஆஃபீஸில் சொல்லி வாங்கி வைத்து விட்டு, "உஸ் - ஸ் - ஸ் - ஸ்! அப்ப் - - பாடா! யாராவது இப்போது வந்து முதுகு பிடித்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!!" என்று வாய் விட்டுக் சொல்லிக் கொண்டு தன்னிச்சையாக டெர்மினல் நாற்காலியைப் பார்த்தான். நல்லவேளை அங்கு இல்லை! கார்த்தியாயினி இதையெல்லாம் கேட்டால் அப்படியே வாடி வதங்கிக் போய்விடுவாள்!
இல்லாவிட்டால், அவள் கை வலிமையை ரோப் விஞ்சில் இருந்து தெரிந்து கொண்டது கன்னத்தில் பரிசோதனைக்கு ஆளாக நேரிடுமோ என்னவோ!!

தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டும் அவ்வப்போது "அச்சா! - - அச்சா!" என்றும் பாராட்டிக் கொண்டும் இருந்த நாராயணன் குட்டி அவனது அக்ஷர சுத்தமான துல்லியமான வேலைகளைப் பார்த்து விட்டுக் கடைசியில் "அடெ எண்டெ தம்ப்ரானே! ஈயாளு சுப்ரு எந்நா ஒர்யு குட்டிச் சாத்தானாண?" என்று வாய்விட்டுச் சத்தமாகச் சொல்லி விட்டுக் கிளம்பினார். "எனிக்கு இவிடெ ஃப்ளோர்லயெ லஞ்சு வேணம்!" என்று இண்ட்டர்கோமில் பதிந்து விட்டு "ஏய்! சுப்ரூஊ - ஊ! லஞ்சு இவிடயே வரின்னு! நிங்ஙள்க்கும் வேணமொ?" என்று அவனுக்கும் இன்னொரு தடவை பதிந்து வைத்தார்.

இவனது ஒர்க் ஷோப்பிற்குள் வந்தவர், "சுப்ரூ! இதி எந்த? ஓல் எஞ்சினயே விஞ்ச்கில போட்டிருக்குன்னு?
ரெப்லேஸ்மெண்டாண?" என்று கேட்டார்."யெஸ் சார்! எந்த எஞ்சின் ரிப்லேஸ்மெண்டிற்கு வருகிறது என்று தெரியவில்லை! இன்னும் எனக்கு டெலிவரி செக் ஷன் ஆட்கள் க்ளியரன்ஸ் தரவில்லை!" என்றான்.

"சுப்ரு1 ஜோப் கார்டு எவிட? தரின்னு! க்ளோஸ் செய்யான் ஞான்!" என்றார்.
அவருக்குத் தருவதற்கு ஜோப் கார்டை எடுத்துவன், மறுபக்கத்தை அப்போதுதான் பார்த்தான்.
அதில், முதல்வரியிலேயே, "ஆயில் ஃபில்ட்டர் அண்ட் ரெப்லேஸ் வித் நியூ "எஸ் எஸ் டி எம் 2309 ஃபில்ட்டர்" என்று துவங்கி, மேற்கொண்டு ஒரு பத்துப் பதினைந்து வேலைகளை என்ட்டர் செய்திருந்தது சீஃப் ஆஃபீஸ்! அதாவது, முன்பக்கத்தில் கடைசி வேலையான "ரிமூவ் ஒல்டு எஞ்சின்" என்பதன் தொடர்ச்சிதான்," - - - ஆயில் ஃபில்ட்டர் அண்டு ரெப்லேஸ் வித் நியூ "எஸ் எஸ் டி எம் 2309 ஃபில்ட்டர்" என்பது! அதை அவன் கவனக்குறைவால் பார்க்கவே இல்லை! முன்பக்கத்தில் இடம் போதாமல் பின்பக்கத்தில் தொடர்ந்திருந்தார்கள் சீஃப் ஆஃபீஸில்! வழக்கமாக இன்னொரு அடிஷனல் கார்டில்தான் தருவார்கள். இரண்டு பக்கங்களிலும் ப்ரிண்ட் செய்யக்கூடாது என்று விதி இருக்கிறது. தன் மடிசஞ்சித்தனமான கவனக்குறைவான வேலைக் குறையை நினைத்து அதன் கடூரமான
பின்விளைவுகளை நினைத்து உறைந்து போனான் சுப்ரூ! "ஏர்க்ராஃப்ட் சபாட்டாஜ்" என்று கல்வெட்டு வைத்துக் கில்லட்டினின் படுக்கவைத்து விடுவார்கள்!! எல்லா சர்ட்டிபிக்கெட்ஸிலும் செதுக்கித் தந்து விடுவார்கள். "ஹிட்மேன்" படத்தில் பிடரியில் பார் கோடு பச்சை குத்துவது மாதிரி செய்யாததுதான் குறை! இண்டஸ்ட்ரியில் எங்கும் வேறு வேலை எதற்கும் போக முடியாது! கோர்ட் மார்ஷல் பரவாயில்லை என்று ஆகிவிடும்!

நாராயணன் குட்டியின் முகத்தைப் பார்த்தபடியே அப்படியே ஜோப் கார்டைப் பிடித்தபடி கீழே "தொப்"பென்று உட்கார்ந்தான்! தலை பின்பக்கமாகப் போய் வாட்டர் கூலரில் பலமாக இடித்தது. அரைமயக்க முகத்தில் ஐஸ் வாட்டர் விழுந்தது.
பதறிப் போன நாராயணன், "எந்நு மோனே? மயக்கமாண? இத்ர லேட்டாயி லஞ்சு எடுக்கானில்ல? அதெ இப்பிடி ஆயி!" என்று அருகில் அமர்ந்து அவன் முகத்தில் தண்ணீரை அடித்தார்!
சுப்ரூவிற்கு அவர் ஜோப் கார்டைப் பார்த்தார் என்றால் முகத்தில் எதை அடிப்பார், என்ன செய்வார் என்று கற்பனை செய்யக்கூடத் தென்பு இல்லை அப்போது!
சவத்தைக் போல வெளிறிப் போய் உட்கார்ந்திருந்தான்.

ஜோப் கார்டை க்ளோஸ் செய்யப் போனவர் அதன் பின்பக்கத்தைப் பார்த்து விட்டு சுப்ரூவின் சவக்களை வழியும் முகத்தைப் பார்த்தார். நடந்தது அனைத்தும் எழுத்தெழுத்தாக அவருக்குப் புரிய,
" பேடிக்காண்டா மோனே! ஞான் இரிக்கு!" என்றார், ஜோப் கார்டை எடுத்து ட்ராஃப்ட் பென்னால் "ரிமூவ் ஒல்டு எஞ்சின்" என்ற வரியில் ஒரு முற்றுப் புள்ளியை வைத்தார். கார்டின் பின்பக்கத்தில் "ஆயில் ஃபில்ட்டர் அண்டு ரெப்லேஸ் வித் நியூ "எஸ் எஸ் டி. எம். 2309 ஃபில்ட்டர்" என்றிருந்த வரி புதிய வேலை ஆகிவிட்டது! அதை அவனுக்கும் காட்டியவர், விர்ரென்று விஞ்ச்சில் மேலே வந்த கார்த்தியாயினி இறங்குவதற்குள், முன்னெச்சரிக்கையாக அதை அப்படியே ஸ்மெல்ட்டரின் பர்னரில் போட்டு விட்டு, சீஃப் ஆஃபீஸைக் கூப்பிட்டு, "டக்கோட்டா எஸ் எக்ஸ் டீ 846 க்ராஃப்டுக்குன்னு எஞ்சின் செக்கப் ஜோப் கார்டு ட்யூப்ளிக்கெட் ஒந்நு வேணம்! ஓல்டு கார்டு ஆக்ஸிடெண்டல் டாமேஜ் ஆயி!" என்று சொல்லிப் பதிவு செய்தார்.

ட்யூப்ளிக்கெட் ஜோப் கார்டுடன் வந்த கார்த்தியாயினி அதை நாராயணனிடம் கொடுத்து விட்டு, "சாரே! என்னெ ஷமிக்கணம். சுப்ரூவிற்கான இன்றைய ஜோப் டைரி ஃபைலைப் புதியாதாகத் தயாரித்து வைத்திருக்கிறேன். கவனக்குறைவால் பழைய ஜோப் டைரி ஃபைல் கரப்ட் ஆகிவிட்டது சாரே!" என்றவள், சுப்ரூவைத் தன் லேசர் கன் கண்களால் உற்றுப் பார்த்து விட்டு அடக்கமாகச் சிரித்தாள்! ட்யூப்ளிக்கெட் ஜோப் கார்டில் முதல் பக்கத்தில் கடைசி வரியில், "- - - எஞ்சின்" என்ற இடத்தில் முற்றுப் புள்ளி இருந்தது!! நாராயணன் இருப்பதால் தனக்கு விசாரணை எல்லாம் வராது என்று அத்தனை தைரியம்!!

தனக்கும் மீறிய வேகத்தில் மிகவும் புத்திசாலித்தனத்துடன் நிலையையைச் சீராக்கி உதவிய கார்த்தியாயினியின் தோளில் தட்டிக்கொடுத்து, "மோளே! என்டெ பொன்னு மோளே! ஞான் - - ஞான்!" என்று குரல் தழையத் தடுமாறி விட்டுச் சமாளித்துக் கொண்டு, " கொரக்ட் மோளே! ஜோப் கார்டில் டபிள் சைடு ப்ரிண்டாண வளர மிஸ்ட்டேக்காண! ஒர்யு ஸிஸ்டம் என்கொயரி கம்ப்யூட்டர் ப்ரொக்ராம் மேலெ புக் செய்யாம்! நிண்டெ ப்ரில்லியன்ஸ்க்கு சல்யூட்!" என்று பலமாக ஃப்ளோர் அதிரச் சிரித்தார்!

சுப்ரூவிற்கு அப்போதுதான் மூச்சு சீரானது; பேய் வேக நாடி தணிந்தது; வியர்வை அடங்கி நிதானமடைந்தான். இரண்டு பேருடைய கைகளையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவர்களை அண்ணாந்து கண்ணீருடன் பார்த்தான். அவர்களும் மிகவும் பணிந்து குனிந்து தம் கைகளின் மீது அவன் மெதுவாக முத்தம் வைத்து நன்றி சொன்னதை ஏற்றுக் கொண்டனர். தலைக்கு வந்தது ட்யூப்ளிக்கெட் ஜோப் கார்டுடன் போயிற்று! கார்த்தியாயினி என்னும் தேவதை, தேவருலகத் தேவதையேதான்!

"லஞ்சு வந்நு மோனே! வரின்னு, ஊணு களிஞ்சு வரூ! மோளே! ஞங்கள்க்கு வருன்ன ரெண்டு லஞ்ச்லயெ மூண பேரும் ஷேர் செய்யாம்! எண்டெ ஸ்விஸ் வொய்ன் நிங்ஙள்க்கு கிஃபட்டாண!" என்று சுப்பிரமணியின் தோள்களைப் பிடித்துத் தூக்கி இறக்கி நிறுத்தினார்.
தமது ஃப்ளாஸ்க்கில் இருந்து ஒரு கப் சக்கப் பிரதமன் ஊற்றி அவனைக் குடிக்க வைத்தார். அமுதம்! தேவாமுதம்! கார்த்தியாயினிக்கு ஃப்ளாஸ்க்கில் இருந்ததை அப்படியே கொடுத்து விட்டார்!
அவரைப் பார்க்க நாராயண மூர்த்தியே விஸ்வரூப தரிசனம் தருவதைப் போல அவனுக்கு இருந்தது!!
- - - சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா.
21 டிசம்பர் 2023 செவ்வாய்க்கிழமை.

எழுதியவர் : சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா (22-Dec-23, 2:00 pm)
பார்வை : 71

மேலே