மிகவும் சுலபமான குடும்பக் கட்டுப்பாடு

""" மிகவும் சுலபமான குடும்பக் கட்டுப்பாடு! """

சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா.

ஆப்பிரிக்கா. ஆமஃஜான் காடு. ஒரு நதிக்கரை ஓரமாக இருந்த ஒரு சிறிய குக் குக் குக்கிராமத்தில் ஊர்க்கூட்டம். மாட்டிவிகளின் கொலபாயோ கிராமம். ஊர் மைதானம். ஷிக்காரி தொப்பி அரை டவுசர் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டம். அவர்கள் எல்லாரும் சொல்லிவைத்த மாதிரி, ஒரு அர்ரதல் ஜீப்பின் பின்பக்கத்தில் அமைத்திருந்த டீக்கடை பெஞ்ச் மேடையில் "கட்டியிருக்கும் இந்த நார்க்கயிறு தாங்குமா?" என்று அங்கேயே பார்த்துக் கொண்டு அச்சத்துடன் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களை விட அந்த ஜீப் டிரைவருக்கு ஒரு பெரிய அச்சம். முதலில் அந்த டீக்கடை பெஞ்ச் மேடை தாங்குமா என்று! "ஹெல்த் கேர் அண்ட் ஃபாமிலி ப்ளானிங் கொம்யூன்" சீ ஈ ஓ ஒரு "ஞொண ஞொண" மைக்கைக் ஒரு கையில் பிடித்தபடி மறுகையால் ஜீப் கூரையைப் பிடித்தபடி பேசிக் கொண்டிருந்தார். அந்த எஃப் எம் மைக்கின் ஆண்டென்னா ஒயரைத் தன் தலைத் தொப்பியில் முடிந்திருந்தார். அப்படிச் செய்தால்தால் மைக் கொஞ்சமாகவாவது சத்தம் கொடுத்தது!! அவருக்கு அருகில் நின்ற சிப்பாயின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு துருப்பிடித்த ஆம்ப்ளிஃபயரும் அந்த மைக்கும் சேர்ந்து அப்படி ஒன்றும் பிரம்மாதமாக ஒலிபெருக்குச் செய்யவில்லை. ஆனாலும் மைக்கைக் கையில் பிடித்தால்தான் ஒரு ஆம்ப்ளிஃபயர் துணைக்கு இருந்தால்தான் ஒரு கர்ராம் புர்ராம் என்று கொரகொரக்கும் ஸ்பீக்கர் இருந்தால் தான் அவருக்குப் பேச வரும் என்பதாக இருந்தது!! ஜீப்பின் மேடைக்குச் சற்றுத் தூரத்தில் அவர்களுடைய பாதுகாவலிற்காக வந்திருந்த காவலர்கள் இரண்டு வான்களில் காத்திருந்தார்கள்.

முன்னால் ஏழெட்டு டஜன் இருந்த மாட்டிவி இன மக்கள் கூட்டம். வழக்கமாகவே கடுகடு முகத்துடன் எப்போதும் போருக்குத் தயாராக விர்ரென்றும் விண்ணென்றும் இருக்கும் அவர்களின் ஆண்கள் வரிசைகட்டி நின்றார்கள். எல்லாரும் முகத்திலும் நெஞ்சிலும் முதுகிலும் வண்ண வண்ணப் பட்டைகள் அடித்துக் கொண்டு, பின்னால்கணுக்கால் வரை நீண்டு தொங்கும் இறகுகளால் ஆன தலைக் கவச்சத்தையும் இடையில் சங்கிலிகளால் ஆன அரைப் பாவாடையும் தோளில் ஒரு ஏக்கரா அளவிலான கேடயத்தையும் பூண்டிருந்தார்கள். எல்லார் இடுப்பிலும் நம் ஊர்ச் சோழ மன்னனின் நான்கடி நீள உடைவாள் மாதிரியான பட்டாக்கத்தி வாளும் குத்தீட்டியும் தொங்கின. திண்ணென்ற மார்பில் பட்டைபட்டையாகத் தகட்டுக் கவச்சமும் வேறு! இந்தத் தோளில் ஒரு ஆறடி நீள சினுக்கு ஈட்டியும் இடுப்பில் ஐந்தாறு குறுவாட்களும் ஒரு குழாய் வில்லும் இருந்தன. அவர்களைப் பார்த்தால் ஊர்க்கூட்டத்திற்கு வந்த மாதிரித் தெரியவில்லை. பக்கத்து நாட்டு வம்பேசி இன மக்களுடன் தினத்திற்கு இரண்டு மூன்று சண்டை நடக்குமில்லையா? அதற்கு வந்தமாதிரித்தான் தெரிந்தது. அதிகாரிகளுக்கும் அவர்கள் எப்போது தாக்கத் தொடங்குவார்களோ என்று தொடை நடுங்கிக் கொண்டிருந்தது. வான்களில் இருந்த துப்பாக்கிக் காவலர்கள் யாரும் அப்படி ஒரு தாக்குதல் நடந்தால் அதிகாரிகளின் பக்கமாக இருப்பார்கள் என்று தோன்றவில்லை! அவர்கள் மாட்டிவிப் படைவீர்ர்களைப் பார்க்குப் போதெல்லாம் இடுப்பில் துண்டைக் கட்டிக் கொள்ளாத குறை!! அவர்களின் கைகளில் இருந்த துப்பாக்கிகள் (துப்பாக்கிகள்தானா? வாங்கிப் பார்க்கவேண்டும்!) அவர்களுக்கு ஒரு ஆயுதமாகவே நினைவில் இல்லை போலும்!

எதற்காகத் தங்களை உட்கார்த்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியாமல் "எஞ்சிவனே! - அந்த ஊர்ச்சாமி பெயரெல்லாம் எனக்குத் தெரியாதில்லையா? அதுதான் "சிவன்!" - என்று மற்ற கிழவாடிகளும் பெண்களும் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார்கள். கிழவாடிகள் என்று சத்தமாகச் சொல்லி விடாதீர்கள்! உடனே "கொமொலோஸ்! கொமொலோஸ்" என்று கத்தியபடி உங்களை "ஒண்டிக்கு ஒண்டி சாகும்வரை மற்போர்" என்று மணல் குழிக்குள் இழுத்துப் போய் விடுவார்கள்!! அதுவும் அவர்களின் மனைவிமார் காதலிமார் குழாம் எல்லாம் சுற்றிலும் இருக்கும் போது அப்படியெல்லாம் கிழவாடிப் பட்டத்தைத் தரவே கூடாது!! இரண்டாக மூன்றாக முறித்துப் போட்டு விடுவார்கள் உங்களை!

நம் ஊர்க்கிழவாடிகள் மாதிரி முப்பது நாற்பது வயதிற்குள்ளேயே லொடக்கு விழுந்த கச்சல் உடம்புடனும் மூட்டுவலி முழங்காலுடனும் சர்க்கரை, உப்பு, புளி, பீப்பீ, அல்லர்ஜி என்று ஒரு மளிகைக்கடையே இருக்கும் உடம்புமாக, எங்கு வந்தாலும் டபக்கென்று உட்கார்ந்து கொண்டும் கிடைத்த போதெல்லாம் டீ டம்ளரைச் சுற்றிச் சுற்றி ஆட்டி, மூக்கையும் வாயையும் சேர்த்து அழுத்தி வைத்து உறிஞ்சிக் கொண்டும் இருக்கும் கிழவாடிகள் இல்லை அவர்கள்! எல்லாம் செஞ்சுரி நாட்அவுட்! இப்போதும் ரிசெர்வ் ஆர்மிதான்! விட்டால் இப்போதும் கூட ரோஹிட் அல்லது கோலி மாதிரி டி20 யில் செஞ்சுரி எந்தப் பிட்சிலும் அடிப்பார்கள்!!. முறம் முறமாகக் கைகளும் தூண் கால்களுமாக அவர்கள் குத்துக்கால் இட்டு உட்கார்ந்திருக்கும் போதே இரண்டரை அடி உயரத்திற்கு இருந்தார்கள். ஒரு கிழவாடிக்குக் கூட புருவத்திலோ தாடையிலோ மீசையிலோ அல்லது தலையிலோ ஒரு பூனைமுடி கூட நரைக்கவில்லை!! கடிகார ஸ்பிரிங் மாதிரித் தலைமுழுவதும் சுருண்டிருக்கும் ஒன்றை இழுத்துப் பிடித்தால் குறைந்தது இரண்டடிக்கு வரும்! அவ்வளவு ஆரோக்கியமாக உறுதியான முடி!! நம் ஊர் ஹேர் ஆயில் கம்பேனிக்காரன்கள் பார்த்தால் அப்படியே தங்கள் டீ வீ விளம்பரத்தில், "நரைமுடி கருக்கும் சுரைக்காய்த் தைலம்" என்றோ, "என்னுடைய கருகரு முடியின் ஒரே இரகசிய்ம், இந்த கடுவாக் குரங்கு நரைமுடித் தைலம் தான்!" என்றோ அபத்தமாகத் தலையைத் தலையை ஆட்டி நடிக்கவைத்து விடுவான்கள்! கிழவாடிகளைக் கேட்டீர்களானால், "நான் பிறந்தான் பிறவியில் தலைமுடிக்கு எண்ணெய் எல்லாம் வைத்ததே கிடையாது! என் வீட்டிலும் யாருக்கும் அந்த மாதிரித் தலைக்கு எண்ணெய் வைக்கும் கெட்ட பழக்கம் எல்லாம் கிடையவே கிடையாது!" என்று உங்கள் முதுகில் அறைந்து சொல்வார்கள்!!

அவர்களின் காதில் மலைத்தேனிக் கூட்டம் ஏதாவது அலுக்கம் பட்டதும் உறுமுவது மாதிரி ஜீப்பில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த அந்த "ஞொண ஞொண" என்னவென்று அவர்களுக்கும் சுத்தமாகத் தெரியவில்லை!

அந்த மக்களுக்கு ஒரு பிரச்சினை. அதற்காகத்தான் அவர்களூடைய ச்சீஃப் ஓடியானோ ஜருமாட்டி போன வாரம் "ஹெல்த் கேர் அண்ட் ஃபாமிலி ப்ளானிங் கொம்யூன்" இற்கு யானை மேல் பயணம் சென்று பேசி வந்திருந்தார். அரசு ஆணைப்படி அந்த நாட்டு மக்கள் தொகைக் கட்டுபாட்டுத் திட்டம் வெகு தீவிரமாக அமலாக்கப்பட்டுக் கொண்டிருந்தது அப்போது. ஆனால் அந்த ஊரிலும் வேறு சில ஊர்களிலும் அந்தத் திட்டம் பெண்களால் கிடப்பிப் போடப்பட்டு விட்டதால் மக்கள் தொகை அவர்களுடைய சொற்ப வருமான எல்லைகளையெல்லாம் தாண்டி வெகுதூரம் போய் விட்டது. எங்கு எப்போது பார்த்தாலும் குஞ்சுகளும் குட்டிகளும் குளுவான்களுமாக மொலு மொலுவென்று சீரான வயதுகளில் குழந்தைகள் திரிந்தன! எந்தத் தாயைப் பார்த்தாலும் கனத்துச் சரிந்த வயிற்றுடனும் இடுப்பில் ஒரு பாலூட்டிக்கொண்டிருக்கும் குழந்தையுடனும் அவள் பாவாடையைப் பிடித்தபடி ஐந்தாறு குளுவான்களுடனும் நின்றார்கள்!! இருபத்திரண்டு வயதிற்குள் அத்தனை!

ச்சீஃப் ஓடியானோ ஜருமாட்டிக்கே அந்தப் புறத்தில் பத்துப் பன்னிரண்டு மனைவிமார்களும் அப்புறமாக இந்தப் புறத்தில் கொஞ்சம் காதலிமார்களும் அப்புறமும் நடுப்புறத்தில் புலிக்கு மாலை டிபனாகிப் போன ஆண்பிள்ளைகளின் மனைவிமார்களும் பெண்களும் இருந்தார்கள்! முதல் மனைவியின் முதல் பெண் குழந்தைக்கு இப்போது ஆறு குழந்தைகள் இருக்கின்றன! மருமகன் மாட்டிவித் தலைமைத் தளபதி! அந்தக் கொலபாயோ கிராமத்தின் மொத்த மக்கட்தொகையில் பாதி ஜருமாட்டியினுடையதுதான்!!

ஊர் மக்களின் மொத்த வருவாய் வாரத்திற்கு ஐந்து வேளைச் சாப்பாட்டிற்கே போதவில்லை. ச்சீஃப் ஓடியானோ ஜருமாட்டி என்ன செய்தும், ஊர்க்கூட்டம் எல்லாம் போட்டுக் கட்டுப்பாடுகளும் மிரட்டல்களும் விடுத்தும் கூடக் கூட்டம் குறைவது மாதிரித் தெரியவில்லை. ஏனென்றால் அவர் சொன்ன கட்டுப்பாடுகள் எல்லாம் மற்றவர்களுக்கு மட்டும்தான் என்று அமைந்து விட்டதுதான் சோகம்! அவைகளைத் அவரும் கடைப் பிடிப்பதற்காகவும் அவை இருக்கும் என்பதை அவருக்குச் சொல்பவர்கள் தம் மனைவியரையும் பெண்களையும் அவருக்குத் தந்து விட்டுப் புலிக்கோ முதலைக்கோ ஈவினிங் டிபனாக வேண்டியதுதான்!!

கட்டுப்படுத்த முடியாத தங்கள் வட்டார மக்கள் தொகைப் பெருக்கத்தைப் பற்றி அரசிடம் சொல்லி நிறைய ஆலோசனை கேட்டு வந்திருந்தார் தான் இந்த மாதிரி அந்தரங்கமான விஷயங்களை அத்தனை மக்களுக்கும் சொல்லி விளங்கவைப்பதை விட ஒரு அயலாள் வந்து அதைச் செய்தால் கொஞ்சமாவது காதில் நுழைந்து விடும் என்று நினைத்தார். அதற்குத்தான் கூட்டம். வழக்கமாக யாராவது ஒரு பூதாகரமான உடலுடன் அதைவிடப் பூதாகரமாக மேக்கப் செட்டப்புடன் ஒரு மாந்திரீகப் பூசாரிதான் இதற்கெல்லாம் இரவு முழுக்கக் குடித்துக் கோழி ஆடு எல்லாம் கடித்துக் கூத்தாடி வழிமுறைகளை அவரே செய்து காட்டுவார்!! இப்போது ஏனோ அரசு அதிகாரிகளைக் கூட்டி வந்திருக்கிறார். தனது அந்தப் புறக்கூட்டம் இந்தப் புறக்கூட்டம், நடுப்புறக் கூட்டம் எல்லாம் அதிகாரிக்கு இன்னும் தெரிந்திருக்க நியாயம் இல்லை என்று நம்பினார் அவர்!

குடும்பக் கட்டுப்பாடு பற்றிச் செயல்முறை விளக்கம் தருவதற்காகக் கூட்டப் பட்ட கூட்டம் அது. பல்வேறு குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை ஒவ்வொன்றாக அந்த சீ ஈ ஓ மாதிரிகளுடன் செய்து காட்டிக்கொண்டிருந்தார். ஆனால், குழந்தை என்பது ஆண்டவன் தரும் கொடை என்றும் அதில் தங்களுடைய பங்கு அவற்றைப் பெற்றுக் கொள்வது மட்டும்தான் என்றும் நம்பும் அவர்களுக்கு அவையெல்லாம் இப்படி வெட்ட வெளியில் பட்டப் பகலில் பேசப்படுவது மிகவும் கூச்சமாகவும் தெய்வக் குற்றமாகவும் தெரிந்தது. கோபத்துடன் கருத்த முகத்துடன் எல்லாரும் சீஃப் ஜருமாட்டிக்காகப் பொறுத்துக் கொண்டிருந்தார்கள்.

"காதலிற்கு வுழிவிட்டுக் கருவறையைச் சாத்தி வைப்போம்"என்று பாடி வைக்கப் பாரதிதாசனெல்லாம் அங்கில்லை! இருந்தாலும் பிடித்துப் பிரித்துப் புலிக்கு இரையாயப் போட்டு விடுவார்கள்! அந்தப் பயத்தால்தான் காவல் படையும் கூட வந்திருந்தது. அவர்களுக்கும், அதெல்லாம் இப்படி வெட்ட வெளியில் பட்டப் பகலில் பேசப்படுவதும் மிகவும் கூச்சமாகவும் தெய்வக் குற்றமாகவும் தான் தெரிந்தது! அரசின் ஆணைக்குப் பயந்து காவலிற்கு வந்திருந்தார்கள். அவர்களும் மாட்டிவி இனம்தானே?

எல்லா முறைகளையும் பெரிய பெரிய படங்களுடன் விளக்கிக் காட்டினார் சீ ஈ ஓ. மின்சாரம் இல்லாததால் வீடியொ அல்லது 16 எம் எம் எல்லாம் ஒன்றும் இல்லை. ஆண்களே பக்கவாட்டுப் பார்வைதான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பெண்கள் தங்களுக்குள் காதைக் கடித்துக் கொண்டு, கமுக்கமாகத் தத்தம் கணவர்மார்களை கொஞ்சம் கூச்சத்துடனும் நிறைய இளக்காரத்துடனும் கீழ்ப்பார்வையாகப் பார்த்தபடி சைட் அடித்துக் கொண்டிருந்தார்கள். திண்டியான கருங்காலி உடல்களுடன் படைவரிசையில் நின்றிருந்த உயர உயரமான இளவட்டங்கள் படையில் நின்றதால் கீழ்த்தாடைகளை இறுக்கிக் கொண்டு சமாளித்துக் கொண்டிருந்தார்கள்! படுக்கையறைக் குடிலிற்குள் பார்க்க வேண்டிய இதையெல்லாம் இந்த அதிகாரி முட்டாள்கள் எதற்கு இங்கு செய்து கொண்டிருக்கிறான்கள் என்று எரிச்சலுடன் சண்டை நிலுவையில்தான் நின்றார்கள்!! "கொமொலோஸ்" என்று ஒரு தாக்குதல் முழக்கம் மட்டும் கேட்கவேண்டியதுதான் பாக்கி!

சீ ஈ ஓ, கடைசியில் "இது மிகவும் எளிதான மிக மிகச் சுருக்கமான கருத்தடுப்பு முறை. அரசிடமிருந்து இலவசமாகவே உங்களுக்கு எப்போதும் இது கிடைக்கும்! இதை ஆண்கள் மட்டுமே பயன்படுத்தினால் போதும். பெண்களுக்கு எந்தச் சிரமமும் இல்லை. அவர்கள் வழக்கம் போலவே இருக்கலாம். எல்லா வேலைகளையும் தடங்கல் இன்றிச் செய்யலாம் " என்று சொல்லிவிட்டு ஒரு கைநிறைய ஆணுறைப் பாக்கெட்டுகளை எடுத்து மேடைமேல் போட்டார். ஆண்களை ஒவ்வொருவராக அழைத்து ஆளுக்கு ஐந்தாறு உறைகளைத் தந்தார். அவர்களுக்கு அது ஏதோ ச்சூயிங் கம் பாக்கெட், கஞ்சாப் பாக்கெட், உள்ளூர் எல்லுவாட்டிப் பாக்கெட் மாதிரித்தான் தெரிந்தது! சற்று நேரத்தில் ஒன்றும் சொல்லாவிட்டால் அவற்றைப் பிரித்து எடுத்து வாயில் போட்டு மென்று விடுவார்கள் போல இருந்தது!!

ஏழெட்டுக் பாக்கெட்டுகளை எடுத்துப் பிரித்த சீ ஈ ஓ, அதை ஆண்கள் சிலரிடம் கொடுத்துப் பார்க்கச் சொன்னார். பிரானா மீன் பாதிரி இருந்த அதை இரண்டு விரல்களால் பிடித்துக் கண்களுக்கு நேராக உயர்த்திப் பார்த்த அவர்கள், அவற்றை அப்படியே வாய்க்குள் விடப் போகும் சமயத்தில், "அய்யய்யோ அது தின்பதற்கில்லை! கொஞ்சம் பொறுங்கள்" என்று சொல்லிவிட்டு, ஒன்றை எடுத்து நீளமாக விரித்துக் காட்டினார். அவர்களுக்கு அது கர்ராவி மான் குடல் மாதிரித் தெரிந்தது! அரைத்துப் பொடித்த ஆண் மசாய்க் கிடாக் கறியையும் லச்சிக்காய்ப் பொடியையும் - நம்மூர்க் கோங்குரா மாதிரி, வானம் பார்த்த மிளகாய் மாதிரி, தீக்கக்கும் ஒருவகைக் காரக்காய் அது! நுனி நாக்கால் தொட்டால் உச்சந்தலை முடி ஒரு அடிக்கு விரைத்து நிற்கும் - அதில் அடைத்து நிறைத்து எருமை நெய்யில் அப்படியே பொரித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால் வாயில் தானாக ஜொள்ளு ஒழுகியது!!

சீ ஈ ஓ, "இதை உடலுறவின் போது ஆண் தனது உறுப்பில் மேலாகச் சொருகிக் கொள்ள வேண்டும். மிகவும் சன்னமாக மென்மையாக உறுத்தாததாக இருக்கும். உடலுறவு முடிந்தபின் அப்படியே இழுத்து உருவி எரிந்து விடலாம்! மிகவும் சுகாதாரமானது. பாதுகாப்பானது. இதைப் போட்டுக் கொண்டால் பெண்ணிற்குக் கருக்கூடாது. குழந்தை பிறக்காது. இதில் தெய்வக் குற்றம் எல்லாம் சிறிதும் இல்லை. இதைப் பயன்படுத்துவதில் எந்தப் பாவமும் இல்லை. குழந்தை என்றாவது பெற்றுக் கொள்ளத் தோன்றினால் இதைப் போடாமல் விட்டு விட்டால் போதும்! மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது மட்டும் போட்டுக்கொள்ள வேண்டும். மற்ற நேரங்களில் போட்டுக் கொள்ளக் கூடாது" என்று அழுத்தி அழுத்தி விளக்கிச் சொன்னார்.

அத்தனை ஆண்களுடைய கண்களிலும் அவ்வளவிற்கு மகிழ்ச்சி! குழந்தையைக் கொல்லாமல் குழந்தையே உருவாகாமல் நிறுத்திக் கொள்ள இப்படி ஒரு மந்திர மான் குடல் இருப்பது ஆச்சரியமாக இருந்தது. எண்ணற்ற குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு உணவு தேடும் அவலமும் தம் பெண்களுக்கு ஒவ்வொரு பத்துப் பன்னிரண்டு மாதமும் பிரசவம் பார்க்க நேரும் சிரமமும் இல்லாமல் செய்யும் இந்த மான் குடலை ஒரு கடவுள் பரிசாகவே நினைத்தார்கள். பெண்களின் முகத்தில் கூடச் சற்று வெளிச்சமும் மகிழ்ச்சியும் கோடி காட்டின! முட்டையிடும் கோழிக்குத்தானே அந்த வேலையின் வலியும் ரோதனையும் தெரியும்?

தொடர்ந்த சீ ஈ ஓ, ஆணுறையை எப்படி எங்கு போட்டுக் கொள்வது என்பதை விளக்க, ஒரு வாழைத் தண்டைக் கொண்டுவரச் சொல்லி அதன் மீதாக அந்த உறையை உருட்டி விரித்துப் போட்டுக் காட்டினார். சில ஆண்களை அழைத்து அதே மாதிரித் தண்டுகளைக் கொடுத்து அவர்களையும் செய்து பார்க்கச் சொன்னார்.
ஒவ்வொருவராக வந்து செய்து பார்த்துக் கொண்டார்கள் எல்லா ஆண்களும்.

அங்கிருந்த ஆண்கள் அத்தனை பேருக்கும் அளவற்ற திருப்தி! "அட! அட!! இவ்வளவிற்கு இது சுலபபானதா? அற்புதமான மான் குடல்தான் இது! மான்களும் இத்தனை கூட்டம் இங்கிருந்திருக்கின்றன; மானாவாரியாக வாழைமரங்களும் புதர் புதராக வளர்ந்து விளைந்து கிடக்கின்றன! முட்டாள்பயல் மக்களான நமக்கு இது இதுநாள் வரை கொஞ்சமும் தெரியவில்லையே! நம் பூசாயார் எல்லாம் அறிந்த கடவுள்! அவருக்கும் கூட இது தெரியவில்லையே! தெரிந்திருக்கும்; ஆனால் ஆள் கூட்டம் வேண்டும் என்று சொல்லாமல் மறைத்திருப்பார்! கொம்யூன் மருத்துவச்சி இல்லியாயியும் எதையும் சொல்லவில்லை பார்!" என்று மகிழ்ந்து போனார்கள் எல்லாரும்!

ச்சீஃப் ஓடியானோ ஜருமாட்டி ஓடிப் போய் சீ ஈ ஓ வை அப்படியே தூக்கித் தலைக்கு மேல் சுழற்றினார். டவுன்கார ஆளின் வற்றல் வதக்கல் நோஞ்சான் உடம்புடன் இருந்த அவர், ஜருமாட்டியின் கைகளில் ஒரு பொம்மையைப் போலத்தான் கைகால்களை உதைத்துக் கொண்டு இருந்தார்! தன்னை எங்காவது வீசி விடுவாரோ என்று பயந்துபோய் அழும் நிலைக்கு வந்து விட்டார்!! அவரை இறக்கிவிட்டு மீண்டும் தன்னோடு சேர்த்து இறுக்க்க்க்கி அணைத்துக் கொண்டு குதித்துக் குதித்து ஆட்டம் போட்டார்! சீ ஈ ஓ வின் நாக்கு ஒரு அடிக்கு வெளியில் வந்து விட்டது! எங்கெங்கோ கண்ட மேனிக்கு வலித்தது! நறநற என்று எங்கெல்லாமோ சத்தம் கேட்டது! எலும்புகளோ என்னவோ!! ஒரு பீப்பாய் வாளி நிறையக் கள்ளை எடுத்து அப்படியே சீ ஈ ஓவின் தலைவழியாகக் கொட்டினார். தாம் கழுத்தில் போட்டிருந்த புலிப்பல் புலிநக மாலைகளை எல்லாம் கழற்றி அவருக்குப் போட்டார்! இறகுத் தலைக்கவச்சம் ஒன்றைத் தூக்கி அவரது தலையில் வைத்து அழுத்திக் கட்டினார்! சீ ஈ ஓ அதிலேயே புதையுண்டு போனார்! ச்சீஃப் ஒடியானோ ஜருமாட்டிக்குக் கட்டுக்கடங்காத மகிழ்ச்சி!

கூட்டம் முடிந்தது. சீ ஈ ஓ விற்குப் பரம திருப்தி! ஒன்றிரண்டு இங்க்ரிமெண்ட்டும் ஒரு ப்ரொமோஷனும் மனக் கண்ணில் மின்னின! தலையும் பதவியும் தப்பியது!
புலிக்கு இரையாக்கப் படாமல் எல்லா அதிகாரிகளும் காவலர்களும் முழுதாக இருந்தார்கள்!
எல்லாருக்கும் திகட்டத் திகட்ட மிகப் பெரிய விருந்து நடந்தது. கள்ளும் உள்ளூர்ச் சாராயமும் அதிகாரிகள் கொண்டு வந்திருந்த டெக்வில்லாக்களும் வழிந்து ஓடின. எல்லாரும் ஆடு ஆடென்று தாட்டி தாட்டியான ஆட்டக்கார்ப் பெண்களுடன் பேயாட்டம் ஆடியபின் விடிந்த பிறகுதான் விட்டார்கள் மக்கள்! எல்லாருக்கும் தூக்கத்திற்குப் பதிலாக முழுப் போதை!! அங்கங்கே சுருண்டும் மல்லாந்தும் குப்புறவும் ஆண்பெண் வித்தியாசம் இல்லாமல் கண்ட மேனிக்கு இறைந்து கிடந்தார்கள். ஏதேனும் மிருகங்கள் வந்திருந்தால் இலவச விருந்து கிடைத்திருக்கும்!

அதன் பிறகு, ஒரு பத்துமாதம் கழித்து அதே அதிகாரிகள் கூட்டம் களப்பணிக்கும் ஆய்விற்கும் மறுபரிசீலனைக்கும் வந்தது. அதே மாட்டிவி மக்கள் கூட்ட்மும். ஆனால் இப்போது ஒரு ஐந்து டஜன் அதிகமான அளவில்! "அதுவும் சரிதான். சென்ற ஆண்டில் உருவான குழந்தைகள்தானே! வரத்தானே செய்யும்?" என்று சமாதானம் சொன்னார் ஓடியானோ ஜருமாட்டி. அவருக்கே எங்கெங்கோ பல குடில்களில் ஏழெட்டுக் குஞ்சுகளும் குட்டிகளும் பிறந்திருப்பதாக மருத்துவச்சி இல்லிபாயி சொன்னதாக நினைவு!!

ஆனால் அதிகாரிகளும் ச்சீஃப் ஓடியானோ ஜருமாட்டியும் அதிர்ந்து போகும் அளவிற்குப் புதிய தாய்மார்கள்! பின்வரிசைகளில் இருந்தவர்கள் முன்னால் வர அப்படியே உறைந்து போனார் சீ ஈ ஓ! ஒருவர் கூடக் குறையவில்லை! உண்மையில் மக்கள் தொகைக் கணக்கும் தாய்மார்களின் கணக்கும் ஒன்றிற்கொன்று கழுதையைப் போல் உதைத்தன!! வருடாவருடம் இருக்கும் எண்ணிக்கையை விட மிகவும் அதிகம் இப்போது!

அதிகாரிகளுக்கும் ச்சீஃப் ஓடியானோ ஜருமாட்டிக்கும் விழி பிதுங்கி மயக்கம் வந்து விட்டது! "அடக் கடவுளே! ஆணுறைகள் ஒன்றும் கூட வேலையே செய்யவில்லையா என்ன? ஒருவேளை மிகவும் மெல்லியதாக அமைந்து விட்டனவோ? நிறைய ஓட்டைகள் விழுந்து விட்டனவோ அவற்றில்? இல்லை ஆண்களே அவற்றில் ஓட்டை செய்து விட்டார்களோ? இல்லை பெண்கள் இது பிடிக்காததால் சதி செய்து விட்டார்களோ?" என்று ஒரே குழப்பமும் அச்சமும்! "திட்டம் தோற்றதும் இல்லாமல் கருவுறுதல் வழக்கத்தை விட மிகவும் அதிகமாக அல்லவா இருக்கிறது இப்போது?" என்று பரபரத்தார்கள்.

உடனே ஆண்களையும் பெண்களையும் தீர விசாரித்துப் பார்த்தார்கள். ஒன்றும் விளங்கவில்லை. எல்லாரும், ஒரே குரலில், "நீங்கள் செய்து காட்டியபடியே தான் தினமும் ஆணுறையைத் தவறாமல் பயன்படுத்தி வருகிறோம். ஒன்றும் பிரயோஜனம் இல்லை! எங்களை மிகவும் ஏமாற்றி இருக்கிறீர்கள் நீங்கள் எல்லாரும்" என்று மிகவும் கோபப்பட்டார்கள்!
ஒருசேரப் பெண்களும் ஆண்களும் கால்களைத் தரையில் உதைக்கவும் சீ ஈ ஓ விற்கு ஒரு அடிக்குத் தூக்கிவாரிப் போட்டது! அரசு குடும்பக் கட்டுப்பாட்டுக் கொம்யூன் அதிகாரிகளுக்கும் ச்சீஃப் ஓடியானோ ஜருமாட்டிக்கும் புலிகளும் கறி அரைக்கும் ஜிரண்டிகளும் மனக்கண்ணில் வந்தன!"ஏதாவது தெய்வத்தின் சாபமோ என்னவோ!" என்றும் தோன்றியது அவர்களுக்கு!

கடைசியில் நடுநடுங்கியபடியே சீ ஈ ஓ, "என்னதான் நடந்தது என்று நாம் எல்லாருமாக ஒவ்வொரு வீடாகப் போய்ப் பார்த்து வரலாமா?" என்று மிகவும் மெதுவாக முனகினார். மற்ற அதிகாரிகளும் அதற்கு ஒத்து ஊதி வைத்தார்கள். ச்சீஃப் தனது தாடையைச் சொரிந்தபடி மைதானத்தை இரண்டு மூன்று சுற்றுச் சுற்றி நடந்தார். தனது மூத்த மனைவியை அழைத்து என்னவோ காதில் ஓதினார். பெரிய மகனைக் கூப்பிட்டு, எங்கோயோ துரத்தினார். தனது முதல் மருமகன் படைத்தளபதியைக் கூப்பிட்டு அவனுடன் ஆறேழு வீரர்களையும் விரட்டினார். மகள்களில் நான்கைந்து பேரை அழைத்துத் தனது வீட்டிற்கு அனுப்பினார். கூட்டமும் சீ ஈ ஓ வும் திருதிருவென்று விழித்தபடி எல்லாவற்றையும் பார்த்தார்கள்! "என்னவோ நடக்கப் போகிறது! இன்று யாரெல்லாம் ஜிரண்டிக்குள் இறங்குவார்களோ!" என்று எல்லாரும் நடுங்கினார்கள்! ச்சீஃப் இல்லையா அவர்? ஒரு டவுன்கார ஆள் சொன்னதும் உடனே புறப்பட்டால் அது அவரது சீஃப்தனத்திற்கும் குடும்பத்திற்கும் தலைக்குனிவு இல்லையா? அதுதான் அப்படிக் காலம் கடத்தினார்! ஒருவழியாக எல்லாம் முடிந்து மருமகன் வந்து என்னவோ சொன்னதும், அவர், "சரி! சரி! அப்படியே செய்யலாம்! அதையும் பார்த்து விட்டு அப்புறமாக மற்றதைப் பார்க்கலாம்! வாருங்கள் போகலாம்" என்று எல்லா வீடுகளையும் பார்ப்பது என்றுமுடிவு செய்து புறப்பட்டார்கள்.

முதல் வீட்டில் இருந்த படுக்கும் குடிலில் நுழைந்ததும் கதவிற்கு அருகில் ஒரு கழுந்து நீண்ட ஆளுயர ஜாடி நின்றது. அதில் தண்ணீர் நிறைக்கப் பட்டுச் சில மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. நடுவில் ஒரு வாழைத் தண்டு நின்றிருந்தது. அதன் மீது அருமையாக உருட்டி விரிக்கப்பட்டிருந்தது ஒரு இளஞ்சிவப்பு ஆணுறை!! வீட்டின் தலைவர் ஒரு கதவில் இருந்து வெளி வந்தார். ஜருமாட்டி, "இதென்ன?" என்று கேட்க அவர் சீ ஈ ஓ வைக்காட்டி "இவன் அன்றைக்கு இந்த மாதிரித்தானே செய்து காட்டினான்? அதையேதான் நானும் செய்திருக்கிறேன். ஒரு உபயோகமும் இல்லை! தினமும் ஒரு வாழை மரம் வெட்டியதுதான் மிச்சம்!" என்றார்.

அடுத்த வீட்டில் நான்கு படுக்கைக் குடில் அறைகளையும் பாரவையிட்டார்கள். அந்த அத்துவான நேரத்திற்கும் மூன்று அறைகளின் கதவுகளில் மூன்று மூன்றூ பெரிய தாமரை மொட்டுகள் நீண்ட தண்டுகளுடன் கட்டப் பட்டிருந்தன. நான்கு அறைகளின் முன்னாலும் ஜாடிகள், தண்ணீர், மீன்கள், வாழைத் தண்டுகள் கிரமமாக இருந்தன. எல்லா வாழைத் தண்டுகளின் மீதும் அதே மாதிரி ஆணுறைகள்!! அடுத்தடுத்த வீடுகளிலும் சிறிதும் மாறாமல் அப்படியே! ஒரு பெரிய வாழைத் தோப்பே வெட்டப்பட்டிருக்கும் போலும்!!

ஒரு ஐம்பது வீடுகளைப் பார்த்து முடித்தபின் அதிகாரிகளுக்கும் சீ ஈ ஓவிற்கும் வெறுத்துப் போய் விட்டது! படுபாவிகள்! முட்டாள் பயல் மக்கள், பத்து மாதத்தில் பதினைந்து இருபதாயிரம் வாழைமரங்களை வெட்டி வைத்திருக்கிறான்களே! அந்த ஒரு வருடத்தில் அக்கம் பக்கத்தில் எந்தச் சண்டையும் போரும் இல்லாததால் எல்லாரும் மும்முரமாக 24 / 7 என்று இருந்தார்கள் போலும்!! அப்புறம் எங்கே மக்கள் தொகை கட்டுப்படும்? எங்காவது ஒரு முப்பது நாற்பது பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தால் ஊரே இரட்டிப்பாகி இருக்கும்!!

அந்தக் களேபரத்தில் நல்லவேளையாக ச்சீஃப் ஜருமாட்டி வீட்டிற்கு யாரும் போகத் துணியவில்லை!

ச்சீஃப் ஓடியானோ ஜருமாட்டி முகத்தில், சீ ஈ ஓ முகத்தில், சவக்களை! அப்புறம் செக்கு வழிய அசட்டுக்களை!!

- சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா.
24 டிசம்பர் 2023 - ஞாயிற்றுக் கிழமை.

எழுதியவர் : சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா (26-Dec-23, 2:20 pm)
பார்வை : 62

மேலே