தொண்டைக்குக் கீழே போன பின்னால்
""" தொண்டைக்குக் கீழே போன பின்னால்! """
சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா.
( இக்கதை கடந்த 1970 களில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த ஒரு பெரும்புகழ் பெற்ற சொற்பொழிவாளர், சமயச் சொற்பொழிவாளர் சொன்ன உண்மைக் கருத்தின் அடிப்படையில் உருவான கதை. அவர் ஒரு முறை, அசைவ உணவு சமைக்கும் வீடுகளில் அதற்காகத் தனிச் சமையல் அறை, தனிப் பாத்திரங்கள், தனிக் கருவிகள், தனி அடுப்பு என்று வைத்திருப்பதைத் கிண்டலாகக் குறிப்பிட்டு, "தொண்டைக்குழிக்குக் கீழே போனபின் அவை என்ன சைவ உணவு அசைவ உணவு என்று பிரிந்தா இரண்டு இரைப் பைகளில் விழுகின்றன? தொண்டைக்குக் கீழே போனபின் சைவமாவது அசைவமாவது எல் - ல் - ல் - லாம் - - -, ஹி - ஹி - ஹி!"" என்று சிரித்தார். கிருஷ்ண புராணச் சொற்பொழிவில் அது ஒரு தேவையற்ற அவதூறு)..
**********************************************************************************************
திருமண மண்டபம்.
முகூர்த்தமும் விருந்தும் முடிந்தபின் ஒரு புகழ்பெற்ற பேச்சாளரின் சொற்பொழிவு.
திருமணம் முடிந்தும் உண்ட மயக்கத்தில் இருந்தும் கூட அவ்வளவு பேரும் மண்டபத்தில் இருந்தார்கள் என்பதே அவரது புகழைக் காட்டியது. ஒரு மூன்றே முக்கால் மணி நேரம் தொடர்ந்து பேசினார். குறிப்பிட்ட தலைப்பில் இல்லாமல் பொதுவான வாழ்வியல் தகவல்களை வைத்து அவர் விளக்கமாகப் பேசினார். மணமக்களுக்கான அறவுரையாக அது இருந்தது. பேச்சில் அவ்வப்போது அவையினரின் நீண்ட கைதட்டல் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தது. சொற்பொழிவினிடையில் ஒரு இடத்தில் அவருக்கு அப்போது சாப்பிட்ட விருந்து நினைவில் வந்தது. அதைப் பிடித்துக் கொண்டார். அன்றைய மதிய விருந்து மிகவும் அமர்க்களமாக ஐம்பது அறுபது வகைகளுடன் மிகவும் அருமையானதாக இருந்தது. இனிப்புக்களும் காரவகைகளும் காய்கறிப் பொரியல்களும் குழம்புகளுமாக பலாப்பழப் பாயசம், பலாகொட்டைப்பக்கோடா வரை ஒரு உண்மையான "கல்யாண சமையல் சாதம்!" அவரே அதை ஒரு பிடி, மூக்குவரை பிடித்திருந்தார்! அவ்வளவிற்கு ஒரு அருமையான விருந்துணவுத் தொகுப்பு!!
உணவுப் பொருட்களைப் பற்றிப் பேசிய அவர், பேச்சின் நடுவில், "நாம் உணவிற்கு, அதுவும் இன்றைய விருந்து மாதிரியான பெரிய உணவிற்கு, அதற்கு உண்மையாகவே உண்டான, தரப்படவேண்டிய மதிப்பை விடவும் தேவையே இல்லாமல் மிக மிக உயர்வான மதிப்பீடுதந்து வைத்திருக்கிறோம். இது ஒரு போலித்தனமான ஆணவம். மனமுதிர்ச்சி இல்லாத ஆடம்பரம்! இன்றைய விருந்து உணவைக் கவனித்திருப்பீர்கள் இல்லையா?" இனிப்புக்களில் எட்டு வகை, காரங்களில் பத்து வகை, ஒன்பது வகைப் பொரியல்கள், நான்கு குழம்புகள், ஐந்து ஊறுகாய் வகைகள், வடகம் அப்பளம் வற்றல் ஆறு வகை, சாதம் ஏழு வகை, பாயசம் மூன்று வகை அப்புறம் என்னென்னவோ வகை வகையான புதிய புதிய உணவுகள் முழுதும் நினைவில் இல்லை. சமையல் கலைஞர்களையும் திருமண வீட்டாரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்! உண்மையாகவே கேரளத்தின் ஒண விருந்து ஆகிய சதயம் இதுதான்!" என்று வாய் குளிரக் குளிரப் பாராட்டினார்.
அப்புறம், அவர், தொடர்ந்து, "நான் சொல்ல வந்தது இதுதான், ஒரு மாபெரும் மனோதத்துவக் கருத்து நம் நம்பிகைகளும் போலித்தனங்களும் நீங்க உதவும் இது. இத்தனை வகைவகையான உணவுப்பொருட்கள் எல்லாம் தொட்டுத் தொட்டுச் சமைக்கும் போதும், பாத்திரங்களில் இருக்கும் போதும் இலைகளில் பரிமாறப் படும்போதும், நாம் "முறைப்படி வரிசைப்படி கலந்து" எடுத்து வாயில் இடும் வரையும் தானே வகை தொகை எல்லாம்? வாயிலிட்டு மென்று விழுங்கி விட்டால் அப்புறம்? தொண்டைக்குக் கீழே போனதும் அது என்னவாகிறது என்பதை ஒரு நிமிட நேரத்திற்குக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!" என்று நிறுத்தி இடைவெளி விட்டார்.
எல்லாரும் நினைத்தார்கள். முக்கால்வாசிப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் உடனடியாகக் குமட்டியது. அந்தச் சொற்பொழிவாளர் சொன்னதன் தீவிரம் அபோதும் சரியாகப் புரியவில்லை பலருக்கு. புரிந்த சிலரும் கமுக்கமாக இருந்து கொண்டார்கள். பின்னர் பேச்சாளர் சொன்னார். "அத்தனை கை உணவுப் பொருட்களும் தொண்டைக்குக் கீழே போனவுடன் அவற்றின் தனித்தன்மை அடியோடு சிதைக்கப் பட்டு, ஒன்றாக, கவனியுங்கள், "ஒன்றாக" ச் சேர்க்கப்பட்டுக் கூழாக அரைக்க்ப் படுகின்றன இல்லையா? நீங்கள் சமைத்த பரிமாறிய வகை தொகைகள் எல்லாம் எங்கே? நீங்கள் உண்ட உணவுப்பொருட்கள் அனைத்தும் கரைந்து உருக்குலைந்து அங்கிருந்து மலக்குடல் வரை "மலத்தை நோக்கிய பயணம்" ஒன்றைத் துவங்குகின்றன இல்லையா? உண்மைதானே? தொண்டைக்குழிக்குக் கீழே போனபின்னால் உணவில் வகையாவது தொகையாவது தொக்காவது!" என்று முடித்தார். இருக்கைகளில் நெளிந்து கொண்டிருந்த யாரும் கைதட்டவில்லை. எல்லாருக்கும் வயிற்றைப் புரட்டியது.
அவர்கள் எல்லாருக்கும் முகத்தில் எதையோ வழித்து அடித்த மாதிரி ஒரு அருவருப்பு! மதியம் ஏண்டா அவற்றை உண்டோம் என்று ஆகி விட்டது! திருமண வீட்டாருக்கும் சமையல் கலைஞர்களுக்கும் சொல்லி மாளாத அவமானம். இவரை ஏண்டா அழைத்துப் பேச விட்டோம் என்றாகி விட்டது. நிறையப் பேர் அப்படியே கமுக்கமாக நழுவிப் போய்ப் புறவடையில் வாயில் விரலை விட்டு வாந்தியும் எடுத்து விட்டார்கள். ஒரு அற்புதமான சதய விருந்தை இப்படியா அவுவருக்க்ச் செய்வது என்று அவர்மேல் கோபம். மனோ தத்துவமாவது மண்ணாங்கட்டியாவது!
மாலை வந்து விட்டது. அங்கிருந்த யாருக்கும் மாலைப் பலகாரங்களைச் சாப்பிடும் மனநிலை இல்லை! குடிப்பதற்காகத் தயாராகக் காத்திருந்த பலவிதப் பழச்சாறுகளும் பாயசங்களும் மிளகுச் சாறுகளும் கேட்பாரின்றி உட்கார்ந்திருந்தன! சமையல்காரர்களே பரிசாரகர்களுடன் சோகமாக நின்று என்ன செய்வது என்று விழித்துக் கொண்டிருந்தார்கள் விதம் விதமான பலகாரங்களையும் பானங்களையும் உறவினருக்குப் பரிமாறலாமா வேண்டாமா என்று தெரியாத குழப்பம். சங்கடம்..
மாப்பிளை அப்போது விருந்து மண்டபத்திற்குள் தன் புது மனைவியுடன் நுழைந்தான். அவன் கையில் என்னவோ பெரிய உருண்டை இருந்தது. மனைவியின் கையிலும் பெரிய தாம்பாளத்தில் பல உருண்டைகள் இருந்தன. பேச்சாளர் அமர்ந்திருந்த மேசைக்கு வந்த அவர்கள், "ஐயா! இன்று நீங்கள் எங்களுக்கெல்லாம் உணவுப் பொருட்களின் மீது இதுவரை இருந்த ஒரு போலித்தனமான மாயையை அடியோடு ஒழித்து நல்வழிப்படுத்தி இருக்கிறீர்கள்! நீங்கள் ஒரு மகா மகான். மாபெரும் சித்தர்! உங்கள் கால்களைத் தொட்டு வணங்குகிறோம் ஐயா!" என்று சொல்லி வணங்கினார்கள்.
பின்னர், தாங்கள் கொண்டு வந்த உருண்டைகளை அவருக்கு ஒரு பெரிய தட்டில் தலைவாழை இலை வைத்துப் பரிமாரினார்கள். இலையில் வேறு எதுவும் இல்லை, தண்ணீர் கூட இல்லை. மணமகள் சொன்னாள், "ஐயா, இது உங்களுக்கு நாங்கள் சமைத்த மாலைச் சிற்றுண்டிகள், பாயசங்கள், பானங்கள், பழச்சாறுகள், தண்ணீர், உப்பு, வெற்றிலை பாக்குச் சுண்ணாம்பு எல்லாம் கலந்து பிசைந்த உருண்டைகள். வகை தொகையாகத் தயாரித்தாலும் அப்படிப் பிரித்துப் பிரித்து உண்ண வேண்டுமா என்ன? நீங்கள் சொன்னபடி இன்றே நாங்கள் எங்கள் புதுமண வாழ்க்கையில் சமையல் மீது இருந்த மோகத்தைத் துறந்து உணவு வகைகளை மதிப்பதை விட்டு நிற்கிறோம். மாயை விலகி விட்டது! இந்தாருங்கள். மனமார உண்ணுங்கள். இவற்றை உணவாகவும் நீங்கள் கொள்ள வேண்டியதில்லை. மலத்தை நோக்கிப் பயணமாகும் பொருள் என்று கொள்ளலாம். அல்லது ஒன்றாகக் கலக்கப் பட்டுவிட்டதால் மலமாகவே இவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்! நீங்கள் விளக்கியபடி, இவை எல்லாம் "தொண்டைக்குழிக்குக் கீழே போனபின் மலம்தானே?" என்று மிகுந்த பணிவுடன் சொல்லி வணங்கி நின்றார்கள் இருவரும்.
விருந்து மண்டபத்தில் இப்போது எழுந்த கைதட்டல் அரைமணி நேரத்திற்கு நீடித்தது! ஓங்கி ஓங்கிக் கைதட்டியும் தாம்பாளங்களைத் தட்டியும் மகிழ்ந்தவர்கள் அங்கிருந்த சமையல் கலைஞர்கள்தான்!! புது மாமனார்களும் மாமியார்களும் ஓடோடி வந்து தத்தம் வாரிசுகளைக் கட்டிப் பிடித்துக் கொண்டாடினார்கள்! பலபேரும் வந்து கையில் கிடைத்த பூ மாலைகளையும் துண்டுகளையும் சால்வைகளையும் மணமக்களுக்கு அணிவித்து ஆராவாரம் செய்தார்கள்! அந்த அரைகுறை "உணவுப் பொருள் ஞானி, மனோதத்துவ மேதைப் பேச்சாளர்" இருக்கையில் உறைந்து கிடந்தார். அத்தனை பேரும் ஆளுக்கு இரண்டு கல்லடி, செருப்படி தந்திருந்தாலும் கூட அந்த அளவிற்கு வலித்திருக்காது. மணமக்களின் சொல்லடி வதைத்தது அவரை. இலையில் நின்ற உருண்டைகள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தன! தடுமாறி எழுநதவர் கூசிக் குறுகி ஒரே ஓட்டமாக வெளியில் ஓடினார்.
- - - - சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா.
24 டிசம்பர் 2023 - ஞாயிற்றுக் கிழமை.