நாளை முதல் குடிக்க மாட்டேன்

நாளை முதல் குடிக்க மாட்டேன்.
--------------------------------- 27 / 12 / 2023

"இங்க பாருயா...இப்படியே நீ குடிச்சிக்கிட்டு இருந்தேன்னா பாரு...நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..."
"ஐயே...என்னத்த செஞ்சி கிழிச்சிரப் போற. பழைய துணியக்கூட கிழிக்க முடியாது...."
"தோ பாருயா. இப்படியே செஞ்சிகிட்டு இருந்த நான் எங்க...." அவ வார்த்தையை முடிக்கல. அதற்குள்
" எங்கம்மா வூட்டுக்கு போப்போறேன்.. அதுதானே. எத்தனை தடவதான் அதே டயலாக்கு. கேட்டு கேட்டு எனக்கு சலிச்சே போயிடிச்சு. ஒன்னு டயலாக்க மாத்து. இல்ல முகபாவத்தையாவது மாத்து. ரெடியா வச்சிருப்பியே....எங்க ஒன் பையி. கெளம்பு...கெளம்பு...நான் வேண்ணா போயி ஆட்டோ கூட்டியாரட்டா...?"
" ச்சே...என்ன மனுஷயான் நீ..? இந்த கருமத்தை தலையை சுத்தி போட்டுடுயான்னு எத்தனவாட்டிதான் சொல்றது. மனுஷனா இருந்தா கொஞ்சமாவது ரோஷம் இருக்கணும். மானம்... மரியாதைன்னு பயமாவது இருக்கணும். எதுவும் இல்லாம...இப்படி சொரணை கேட்டு போயி .. தெரியாமத்தான் கேட்கிறேன். ஏன்யா...தெனம் உப்பு போட்டுத்தான் சாப்பிடற.....?
" ஆங்...நீ சமைக்கறதானே நான் சாப்பிடறேன். உப்பு போட்டுத்தான சமைக்கிற?. தண்ணியடிச்சிட்டா என் நாக்குக்கு ருசி ஒன்னும் தெரியறதில்ல...ஊறுகால மட்டும் கொஞ்சம் உப்பு இருக்குன்னு நெனைக்கிறேன்..."
" இந்த லொள்ளுக்கு ஒன்னும் கொறச்சலில்லே. பொண்டாட்டியா எனக்கு ஒரு கொறையும் வச்சதில்ல. இந்த சனியன குடிச்சி..குடிச்சி உடமப கெடுத்துக்காதேன்னு சொல்ல வந்தா...டாகடர் கூட ஒவ்வொரு தடவையும் சொல்றார். கொஞ்சமாவது கேட்கணும். பெரிய ராமாயணம் பேச வந்துட்ட..."
" ஏய் செல்லம்....கோவத்துல கூட நீ எவ்வளவு அழகா இருக்கிற தெரியுமா? என் ராசாத்தி...எங்க ஒன் மூக்க கொஞ்சம் வெட...வெட ...ஆங்...ஆங்...அதான். அதேதான். ஒலக மக்களே ...என் பொண்டாட்டி மூக்கப் போல யாருக்காவது இருக்கா? இல்ல அவளப்போல மூக்க வெடக்கத்தான் முடியுமா....?"
" ச்சே...விடுயா. நான் என்ன சொல்றேன். நீ என்ன சொல்ற? தண்ணியடிச்சிட்டா கண்ணதாசன்னு நெனப்பு..."
" கண்ணதாசன் என்னடி? கண்ணதாசன். அவனுக்கு பாட்டன்...பூட்டன் எல்லாம் நான்தான். ஏன்?தண்ணியடிச்சிட்டா ஒவ்வொருத்தனும் கண்ணதாசன்தான்டி."
" ச்சே....வாய பொத்து. நல்லதண்ணி ஊத்தி வாய கழுவு. அவரெங்க...நீயெங்கே? ஒரு வார்த்தைய ஒழுங்கா பேச துப்பில்ல. கண்ணதாசனாம். கண்ணதாசன்...அவர் கால் தூசுக்கு சமமாயிடுவியா நீ...? சும்மா வாய கிண்டாத. நான் சொல்றத கொஞ்சம் கேளு..."
" சொல்லுங்க மகாராணி..."என்று கையிரண்டையும் வாய் மேல் வைத்து பொத்திக்கொண்டு அவள் முன் உட்கார்ந்தான். இல்லையில்லை உட்கார்ந்தார் ராமசாமி. ஆம். அவருக்கு சுமார் ஐம்பது ஐம்பத்தைந்து வயதிருக்கும். காதோரத்தில் வெள்ளை முடி தலைகாட்டத் துவங்கி இருக்கிறது. அவரும் அவர் மனைவி ராஜலக்ஷ்மியும்...ஜாடிக்கேத்த மூடி...மூடிக்கேத்த ஜாடி. அவ்வளவு அன்னோன்னியம்.. அவ்வளவு அன்பு. இரண்டு பேரும் கருப்புதான்.ஆனா அவங்க ஜோடியா வரும்போது அவ்வளவு அழகா இருக்கும். அழகுன்னா அழகு.அவ்வளவு அழகு. ஊர் கண்ணே பட்டுடும். படிப்புதான் ஒரு கொறையே தவிர. சொத்து பத்துக்கெல்லாம் கொறச்சலே இல்ல. ஏகப்பட்ட நெலம்..வீடு..தோப்பு தொரவுன்னு...ஏழேழு தலைமுறைக்கும் ஒக்காந்து சாப்பிடலாம். இந்த ஒரு கெட்ட பழக்கத்தை தவிர ..மற்றபடி மனுஷன். சொக்கத் தங்கம்னா சொக்கத்தங்கம். புள்ளைங்க ரெண்டு பேர்.நல்ல வேலை. அவங்க ரெண்டுபேருக்கும் இந்த பழக்கம் தொத்திக்கவில்லை. சரி. கதைக்கு வருவோம்.
" ஏன்யா..சாமி புண்ணியத்துல....படிப்பறிவு இல்லையினாலும் நமக்கு ஒரு கொறையுமில்ல. நீ போயி ஒருத்தண்ட கைகட்டி வேல செய்னும்டு தலையில எழுதி வைக்கல. நீ ஆயிரம் பேருக்கு வேலைபோட்டுத்தர வசதி கொட்டிக்கிடக்குது. இந்தப் பாழாப்போன குடிய மட்டும் விட்டுட்டேன்யா.குடிய குடிச்சி நம்ம குடிய ஏன் கெடுக்கிற?..."
" த பாரு புள்ள. நானும் உட்டுடுனும் உட்டுடுனும்தான் தெனமும் நெனக்கிறேன். இந்த சனியன்தான் என்னை உடமாட்டேங்கிது. செல்லம்..ஒம்மேல சத்தியமா சொல்றேன். நாளை முதல் குடிக்க மாட்டேன்...." என்று சொல்லிவிட்டு ' நாளை முதல் குடிக்க மாட்டேன்.சத்தியமடி தங்கம். இன்னைக்கி ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்' என்று சத்தம் போட்டு பாடத் துவங்கினார் ராமசாமி.
" இப்படியே பாடிகிட்டு இரு. ஒருநா இல்லைனா ஒருநா நான் மண்ணெண்ணெய் ஊத்திக்கிட்டு கொளித்திக்கப்போறேன். நா செத்தாதான் இதுக்கு ஒரு முடிவு வரும்...." அவள் சொன்னது அவர் காதில் விழுந்ததோ இல்லையோ... ' முதல் வாழ்வு வாழ ஒரு வீடு...மறு வாழ்வு வாழ மறு வீடு...'என்று உச்ச ஸ்தாதியில் பாடிக்கொண்டு போனார்.
விடிந்தது. இன்று அவர்களுக்கு திருமண நாள். மகன்கள் விமர்சியாக கொண்டாடினார்கள். ஊரே திரண்டு வாழ்த்திவிட்டும்,வாழ்த்துப்பெற்றும் போனார்கள். மாலை நெருங்கியது. ராமசாமியும், ராஜலக்ஷ்மியும் தனியானார்கள். மெதுவாக ஆரம்பித்தார் ராமசாமி.." செல்லம்..இன்னக்கி நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நமக்கு கல்யாணம் முடிஞ்சி முப்பது வருஷம் ஓடிடிச்சி. புள்ளைங்களும் இப்படி தடபுடலா கொண்டடாடிட்டாங்க. மனசு நெறைஞ்சி இருக்கு. நீ கோச்சுக்கிலனா இன்னைக்கு மட்டும் கொஞ்சம் குடிச்சிக்கிறேனே..." என்று கொஞ்சும் குரலில் கெஞ்சினார்.
" தோ..பாருங்க...நல்லநாளும் அதுவுமா வாய கெளறாதீங்க..அப்புறம் நான் சொன்னபடி நடந்துருவேன். அப்புறம் என்ன கோச்சுக்காதீங்க."
" சரி வுடு...நான் வெளியில போயிட்டு வரேன்." என்று வெளியில் சென்றுவிட்டார்.
மணி ஏழு ஆயிற்று. வீட்டு வாசப்படியில் உட்கார்ந்திருந்தாள் ராஜலக்ஷ்மி. நேரம் ஆக...ஆக..அவள் கோபமும் ஏறிக்கொண்டே போயிற்று. நல்லநாளும் அதுவுமா இந்த மனுஷன காணோமே... மறுபடியும் குடிச்சிட்டாரா என்ன? அப்படி குடிச்சிட்டு மட்டும் வரட்டும்.அவரா ...நானா. ஒரு கை பாத்துட வேண்டியதுதான். ஒரு முடிவோடும் உறுதியோடும் ரோடையே பாத்துக்கொண்டிருதாள்.
நாலு பேர் கைத்தாங்கலாக... போதையோடிருந்த ராமசாமியை கொண்டுவந்தார்கள்.
" என்னங்ணா இது. இன்னைக்கும் இப்படியா? என்று வயதில் மூத்தவர்களை பார்த்து கேட்டாள்.
சிறு வயதுள்ளவர்களைப் பார்த்து " ஏண்டா என் வைத்தெரிச்சலை கொட்டிக்கிறீங்க? " இதுக்கெல்லாம் ஒரே வழி நாம சொன்னதை செஞ்சிர வேண்டியதுதான் என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள். வந்தவர்கள் அவரை சோபாவில் உட்கார வைத்துவிட்டு போய்விட்டார்கள்..
" ராசலக்ஷுமி...என் ராசுக்குட்டி எங்கடி போன? இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நம்ம கல்யாண நாள் வேற. இன்னைக்கு ஒருநாள் பொறுத்துக்கடி...நாளையிலிருந்து சத்தியமா குடிக்க மாட்டேன். "நாளை முதல் குடிக்க மாட்டேன். சத்தியமடி தங்கம். இன்னைக்கி ராத்திரிக்கு தூங்கவேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்" உளரலாய் பாட ஆரம்பித்தார். இடுப்பிலிருந்து பாட்டிலை எடுத்து டீபாய் மேல் வைத்து....மூடியை திறக்க ஆரம்பித்தார்.
" தோ பார்யா. நல்லா பாத்துக்க. நான் மண்ணெண்ணெய் ஊத்திக்கிட்டு கொளுத்திக்கப் போறேன். கல்யாண நாளும் அதுவுமா காலையில தாலி. மாலையிலே கருமாதி. நீ ரொம்ப கொடுத்து வெச்சவன்யா. பொண்டாட்டி சாவுறத கண் குளிர பாருயா. யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம். நானும் புண்ணியம் செஞ்சு வந்திருக்கேன். புருஷன் முன்னாடி இப்படி சாவுறது பத்தினியாலதான் முடியும். அத நிரூபிப்பதற்கு எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்தியே...." என்று ஹாலுக்கு ரூமுக்கு இடையிலிருந்த கண்ணாடி கதவை சாத்தி தாழ்பாள் போட்டாள்.
" தோ பாரு ராசு... சும்மா மிரட்டாத. நீ ஒன்னும் சாக மாட்ட. என்னை தனியா விட்டுட்டு போயிடுவியா என்ன? விளையாட்டுக்குதான சொன்ன." போதையில் தடுமாறி கண்களை இடுக்கி பார்த்துக் கொண்டிருந்தார். உள்ளேயோ ராஜலக்ஷுமி உண்மையிலேயே மண்ணெண்ணெய் கேனை திறந்து மண்ணெண்ணையை தன் உடலெங்கும் ஊத்திக்கொண்டாள். தீக்குச்சியை உரசி ,எரிகின்ற தீக்குச்சியை கையில் வைத்து கொண்டு " நான் உசுரோட இருக்கற வரைக்கும் நீ திருந்த மாட்ட..நா போனாதான் என் அரும உனக்கு புரியும். நா போனதுக்கப்புறம் தெனம் இருபத்தி நாலு மணிநேரமும் குடிச்சிக்கிட்டே இரு. யாரு கேக்கப் போறா? குடியா குடி...நல்லா குடி...." என்று பத்த வைத்து கொண்டாள். குப்பென்று தீ குபு குபு என்று உடலெங்கும் பரவி, கட்டியிருந்த கல்யாண பட்டு சேலை உடம்போடு ஒட்டிக்கொண்டு எரிய தொடங்கியது. "ஐயோ...ஐயோ...இங்கும் அங்கும் ஓடத் தொடங்கினாள்.
வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ராமசாமிக்கு சத்தம் ஒன்றும் காதில் விழவில்லை. நெருப்பு எரிவது மட்டும் தெரிகிறது.. ஆனால் இருக்கும் இடத்தைவிட்டு அசையக் கூட முடியவில்லை. கண் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. ஆனால் ஒன்றும் மனதில் பதியவில்லை.
ராசு குட்டி....ராஜலக்ஷ்மி வாடி. வெளையாண்டது போதும் வாடி. பசிக்குது. சோறு போடுடி. வாய் முணுமுணுத்து கொண்டே இருந்தது. போதையில் பார்வை நிலை குத்தி ஒரே இடத்தில் இருந்ததே தவிர ...வேறொன்றும் மனதில் ஒட்டவில்லை. "நாளை முதல் குடிக்க மாட்டேன். சத்தியமடி தங்கம். இன்னைக்கி ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்........" ஸ்லோ ஸ்பீட்ல.... லோ வாய்ஸ்ல பாடிகிட்டே ...எரிவது மனைவி என்று உணராமல் தரையில் விழுந்து கிடந்தார்.
காலை விடிந்தது. போதை தெளிந்தது. தலையை பிடித்து கொண்டு விழித்து பார்த்தார். ஊரே கூடியிருந்தது. எங்கேடா ராசு? எங்க போயிட்டா? கோச்சிக்கிட்டு அவ அம்மா வூட்டுக்கு போயிட்டாளா? என்று பாதி குளரலும் பாதி தெளிவாகவும் கேட்டார். அப்பத்தான் கரிக்கட்டையாய் ராஜலட்சுமியை ஸ்டெச்சரில் அவர் முன்பு தூக்கி வந்தார்கள். அதை பார்த்து பயந்து சற்று பின் வாங்கி யாரடா இது? ...."ஐயோ நம்ம அம்மாப்பா. குடிக்காதீங்க...குடிக்காதீங்க எத்தனை தடவ சொல்லி இருப்பாங்க. எத்தனை சண்டை இதுனால வந்திருக்கும். கடைசியில கல்யாண நாளிலேயே அவங்கள கொன்னுட்டீங்களே அப்பா..."என்று மகன்கள் கத்திய போதுதான் போதை முழுவதும் இறங்கி எதார்த்த உலகிற்கு வந்தார். வாயடைத்து கூனி குறுகி ஒரு மூலையில் முடங்கிப் போனார். வாய் மட்டும் " போதை வந்த போது புத்தியில்லையே... புத்தி வந்த போது நண்பர் ..இல்லையில்லை மனைவி இல்லையே ...." முணுமுணுத்து கொண்டே இருந்தது..
அதற்கப்புறம் நான் கேள்வி பட்டது.. குற்றம் மனசாட்சியை குத்த.... துக்கம் தாளாமல்... தூக்கம் வராமல்..மேலும் மேலும் குடித்து குடித்து கொஞ்ச நாளிலேயே அவரும் போய் சேர்ந்து விட்டார்.
கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு. தண்ணியடிப்பவனுக்கு தண்ணியால்தான் சாவு.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (28-Dec-23, 5:28 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 109

மேலே