மகளின் பாசம்
என்ன தவம் செய்தேனோ
என் தந்தை முகம் காண
எழு வரம் வாங்க வேண்டும்
எட்டு முத்தம் நீ கொடுக்க
சோறு ஊட்டும் வேளை நானோ
சோகத்தோடு மறுத்துவிட
சோழ நாட்டு அரசி நானே
சொல்லி நீயும் ஊட்டி விட்டாய்
பள்ளி நானும் போகமாட்டேன்
பயத்துடனே நிற்க்கையிலே
பாதி நேரம் விடுப்பெடுத்து
பக்கத்திலே அமர்ந்திருந்தாய்
திருவிழாவில் பொம்மை வேண்டும்
திரும்பி திரும்பி பார்க்கையிலே
கடை முழுதும் அள்ளி வந்து
கள்ளமின்றி சிரித்துப் போனாய்
மின்னல் வெட்டும் வேளை நானோ
மிரட்சியோடு நிற்க்கையிலே
மின்மினி ஓர் பூச்சி காட்டி
மின்னல் பயம் போக்கிவிட்டாய்
வயது வந்த போது நானும்
வாட்டத்தோடு அமர்கையிலே
வாழ்க்கையிலோர் பகுதி என்று
வாழ்க்கைப் பாடம் நடத்திவிட்டாய்
இப்படியோர் அன்பு காட்ட
இவ்வுலகில் யாருமில்லை
இஸ்ரோவின் ராக்கெட் ஒன்று
தேடிப்பார்த்து சொல்லியது
அடுத்தப் பிறவி உண்டு என்றால்
ஆண்டவனைக் கேட்க வேண்டும்
ஆரிராரோ உனக்கு பாட
அன்னையாய் நான் மாறவேண்டும்