கடல்நீலப் பூவிழியாள் தன்னுடன் கைகோர்த்து
பா:--
கடலலைகள் தன்னில் கவிதைபாடும் தென்றல்
தொடுவான ஆதவனைத் தொட்டிடும் நீலம்
கடல்நீலப் பூவிழியாள் தன்னுடன்கை கோர்த்து
நடந்தமாலை தன்நினைவில் நான்
=============================================================
யாப்புக் குறிப்புகள் ---பயிவோருக்குப் பயன் தரலாம்
----இது ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
ஒரே அடி எதுகை அமைந்திருப்பதால் ஒரு விகற்பம் என்பர்
அடி எதுகை --கட தொடு கட நட --எதுகைக்கு இரண்டாம் எழுத்து
மோனை 1 3 ஆம் சீரில் க க , தொ தொ , க த , ந நா . ஒன்று மூன்றாம் சீர்
மோனையை பொழிப்பு மோனை என்பர்
மோனைக்கு முதலெழுத்து
எண்வகை மோனைகள் உண்டு குறைந்தது பொழிப்பு மோனை
அமைய எழுதுவது மோனைத் தொடை சிறப்பு தரும் பாவிற்கு
என்பது தொன்னூல் வழக்கம்
இப்பாவில் 1 மற்றும் 3 ஆம் அடிகளில் முற்று இன மோனையும்
அமைந்திருப்பதை கவனிக்கவும்
அடியின் அனைத்துச் சீர்களில் மோனை அமைவது முற்று
மோனையாகும்
ஓசை :
வெண்பாவின் ஓசை செப்பல் ஓசை --செப்புதல் சொல்லுதல்
போன்ற இயல்பான ஓசை
தளைகளால் அறியப்படுவது ஓசை
ஒரு சீருடன் மற்றொரு சீரைக் கட்டுவது தளை
இங்கே வெண்பாவிற்குரிய இயற்சீர் வெண்சீர் வெண்டளைகள்
விரவி வந்ததால் இப்பா ஒழுகிசைச் செப்பல் ஓசை கொண்ட
ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
மா முன் நிரை ---இயற்சீர் வெண்டளை
காய் விளம் முன் நேர் --வெண்சீர் வெண்டளை