கனவருவி
***********
கனவெனு மருவியில் கவினுறக் குளித்திடக்
கவலையி னழுக்குகள் கரைந்திடு மன்றோ
மனமதி லிருக்கிற மறைமுகக் கறைகளை
மறைத்திடு மொருவழி மலர்ந்திடு மன்றோ
இனசனத் தவரொரு எழுகிற பகையினை
இலகுவி லழித்திட லெளிதுறு மன்றோ
உனக்கெனு மெனக்கெனு முடையைதை யடுத்தவர்
உரித்தெனப் பறித்திட லிலையதி லன்றோ
*
இலவச அருவியி லிருதயம் நனைந்திட
எதுவித இடர்களு மெழுவது மில்லை
பலர்வசம் பலதென பகலிலும் விழிவழி
படர்கிற கனவிது பரவச எல்லை
சலசல ஒலியலை சதிசொல விடுகிற
சடுகுடு வகற்றிய சமரச முல்லை
சிலரது இமைகளில் சிணுங்கிடு கிறநிலை
செதுக்கிடு மெனிலதிற் சிறந்தது தொல்லை
*
உறங்கிடும் பொழுதினில் உருகிடு மருவியில்
உயரிய கதைசொல உகந்தது வன்றோ
மறந்ததை நினைத்திட மறுத்திடும் வகையினில்
மலர்ந்திடும் கனவிது மதுரச மன்றோ
சிறந்தது வெனவிழிச் சிகரமும் தருகிற
சிலுசிலு வருவியில் சிலிர்ப்புற லொன்றே
பிறவியின் பயனெனப் படுமிதிற் குளித்திடப்
பிறந்திடு மமைதியைப் பெறுவது நன்றே!
*
மெய்யன் நடராஜ்