ஏய் வண்டிக்காரா
**********************
சுத்தி கரிப்பாளர் சுற்றா திருந்துவிடக்
கத்திக் கதறுதே காற்று
*
காற்றுவழி துர்நாற்றம் கட்டுக் கடங்காமல்
கூற்றுவனைக் காட்டுவதோ கூறு
*
கூறவழி வைக்காமல் கூடுகின்றக் குப்பையது
நாறவிடா தாக்கணுமே நாடு
*
நாட்டுமக்கள் வாழ்வின் நலன்கருதிக் குப்பையினைக்
கேட்டுவாங்கின் வாராதே கேடு
*
கேடுவரக் காரணமாய்க் கேட்பாரு மில்லாமல்
வீடுநாறச் செய்வதுவே வேம்பு
*
வேம்பாய் கசக்கவே வீட்டில் முடங்கிடும்
பாம்பெனும் குப்பைப் பயம்
*
பயந்துநாம் வாழப் பழகிட வேண்டி
உயர்வதோ குப்பையின் ஊறு
*
ஊறிழைக்கும் குப்பைவண்டி ஊருக்கு வாராதே
நாறிநிற்கும் நாட்கள் நரகு
*
நரகத்து வாழ்வே நகரத்து வாழ்வாய்
வரமான சூழல் வதை
*
வதையற்று வாழும் வகைக்குப்பை வண்டி
நிதம்வர வேண்டுமொரு சுத்து
*
மெய்யன் நடராஜ்