நதி
****
நதியில்லா ஊரில் நமக்காக வென்று
புதினங்கள் ஒன்றுமில்லைப் போ
*
போகின்ற போக்கில் புனலமு தூட்டியே
சாகின்ற வேர்மீட்கும் சாது
*
சாதுவெனப் பாயுநதி சாக்கடை யாகிட
தீதுற செய்யா திரு
*
திரும்பும் திசையோடும் தீர்த்தநதி தானும்
விரும்புவழி யோட விடு
*
விடுதலை வாதிபோல் வேகமொடு பாயும்
நெடுநாள் பயணியாய் நீர்.
*
நீரோட விட்டு நிலமிதி லெங்கெங்கும்
வேரோட வைக்கும் வியப்பு
*
வியப்புறு வண்ணம் விரையும் நதிக்கு
மயங்கிட வைக்கும் மனசு
*
மனசில்லா மாந்தர் மணலள்ளிக் கொன்றும்
வனப்பூட்ட ஓடும் வரம்
*
வரமாகத் தன்னை வழங்குதற் காக
கரம்நீட்டச் சொல்லும் கொடை
*
கொடைவள்ளல் தானும் குடிக்கின்ற நீரை
நடைபோட்டு ஈயும் நதி
*
மெய்யன் நடராஜ்