மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி

மூவாத் தமிழ்

- கவிஞர் இரா. இரவி

*****

உலகின் முதல்மொழி தமிழ்மொழி
உலகின் முதல் மனிதன் தமிழன்!

உலகிற்கு உரைக்க உரைப்போம்
உலகமும் இன்று வழிமொழிந்துள்ளது!

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
மூத்தமொழி என்றபோது நம்பாதவர்கள்!

அமெரிக்காவின் மொழியியல் ஆய்வாளர்கள்
அடித்துச்சொல்கின்றனர் தமிழே முதன்மொழி!

பழைமைக்கு பழைமையாய் புதுமைக்கு புதுமையாய்
பைந்தமிழே நிலைத்து நிற்கிறது பாரினில்!

தமிழ் எங்கள் தாய்மொழி மட்டுமல்ல
தரணியில் உள்ள மொழிகளின் தாயும் தமிழே!

ஆங்கிலம் உள்பட பல மொழிகளில்
அற்புதத் தமிழ்ச்சொற்கள் உள்ளதாக உரைக்கின்றனர்!

தமிழக்கு பின்வந்த பல மொழிகள்
தமிழ்போல நிலைக்கவில்லை நிற்கவில்லை!

பேச்சில் இருக்கும் எழுத்தில் இருக்காது
பலமொழிகள் எழுத்து இருக்கும் பேச்சு இருக்காது!

ஒப்பற்ற தமிழ்மொழி பேச்சு, எழுத்தில்
உலகம் முழுவதும் நிலைத்து உள்ளது!

கணினியில் இணையத்தில் நிற்கும் தமிழ்
கணித்தமிழ் மாநாடுகள் கண்ட தமிழ்!

ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இணையத்தில்
அழகுதமிழே முன்னணியில் நிற்கின்றது!

தமிழின் பெருமையை உலகம் அறிந்தது
தமிழன்தான் இன்னும் அறிய மறுக்கிறான்!

உலகம் முழுவதும் ஒலிக்கும் மொழி தமிழ்
உலகில் தமிழ் ஒலிக்காத நாடில்லை உண்மை!

பல்லாயிரம் வயதாகியும் இளமையாகத் தமிழ்
பல நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும் தமிழ்!

மொழிக்காக சங்கம் அமைத்தது தமிழ்
முதன்முதலில் சங்கம் சமைத்தது தமிழ்!

நான்கு சங்கம் கண்ட நல்ல தமிழ்
நானிலம் போற்றும் கற்கண்டுத் தமிழ்!

செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே
செம்மொழியின் தகுதிகளை பெற்றிட்ட தமிழ்!

செந்தமிழ், தீந்தமிழ், தேன்தமிழ், வண்டமிழ்
சீர்தமிழ், தனித்தமிழ், அன்னைத்தமிழ், அமுததமிழ்!

பழந்தமிழ், வாய்மைத் தமிழ், தங்கத்தமிழ்
பசுந்தமிழ், பக்தித்தமிழ், மறைதமிழ், தெள்ளுதமிழ்!

தமிழின் வகைகளே பட்டியலில் அடங்காது
தமிழே முதல் மனிதன் பேசிய மொழி!

கீழடி நமக்கு உரைப்பது மூவாத் தமிழ்
கீழடி உணர்த்துவது மூத்தகுடி தமிழ்க்குடி!

குடிமக்களும் எழுத்தறிவோடு வாழ்ந்த கீழடி
கடவுள் மதம் இல்லாதது மூவாத்தமிழ்!

இயற்கையை மட்டும் வணங்கியவன் தமிழன்
இனிய அறுவடைத் திருநாள் கொண்டாடிய தமிழன்!

உலகின் முதல்மொழி மூத்தமொழி தமிழ்
உணருங்கள் தமிழர்களே தமிழின் சிறப்பை!

நுனிநாக்கு ஆங்கிலம் பேசுவது பெருமையன்று
நல்லதமிழில் நாளும் பேசி மகிழ்வோம்!

வணிக நிறுவனங்களில் தமிழ் இடம் பெற வேண்டும்
வணிகர்களே தண்டத்தொகை கட்டும்முன் பயன்படுத்துங்கள்!

தமிங்கில உரையாடலுக்கு முடிவு கட்டுவோம்
தமிங்கிலத்தால் தமிழ் சிதைவதை உணருங்கள்!

தேசப்பிதா தமிழனாக பிறக்க வேண்டும் என்றார்
தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்வோம்!

தமிழை அழியாமல் காப்பது தமிழர் கடமை
தமிழை எங்கும் ஒலித்திட ஏற்பாடு செய்வோம்!

கருவறையிலும் உயர்நீதிமன்றத்திலும் நமது
கன்னித்தமிழ் ஒலிக்க ஆவண செய்வோம்!

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (16-Feb-24, 6:40 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 79

மேலே