பச்சை மண்ணு

*****************
முடிந்தவரைத் தன்பேரை முன்நிறுத்தப் பார்ப்பார்
முழங்குகின்ற வார்த்தைகளில் முழுப்பொய்யை வார்ப்பார்
இடிவிழுந்த மரப்பூவில் எழில்மாலைக் கோப்பார்
இரவின்மேல் பனித்துளியை இட்டதுதா னென்பார்
வடிந்துவிட்ட வெள்ளத்தில் வள்ளங்கள் ஓட்டி
வகைவகையாய் உதவியதில் வள்ளல்தா னென்பார்
கடிந்துநிற்கும் கேட்போரைக் கண்ணெடுத்தும் பாரார்
கதைமுடிக்கச் சொன்னாலும் காதெடுத்துக் கேளார்.
*
அடுத்தவரின் நேரத்தை அபகரிக்கச் செய்யும்
அடுக்கடுக்காய் பொய்களினால் அரங்கமழை பெய்யும்
எடுத்ததற்கும் குறைகுற்றம் ஏதேனும் நெய்யும்
இருப்போரின் செவியுணர்வை எரிச்சலிட்டுக் கொய்யும்
தடுப்பதற்கு ஆளிலையேல் தன்போக்கில் வையும்
தரங்கெட்டப் பேச்சாலே தலைகுனிய வைக்கும்
கடுப்பூட்டும் பேச்சாளர் களைக்கண்டு விட்டால்
கலையரங்கு கொலையரங்காய் கண்முன்னா கிடுதே
*
ஒலிவாங்கிக் கிடைத்திட்டால் உருட்டுகின்ற மன்னர்
உவமானம் காட்டுவதன் அவமானச் சின்னம்
புலிபோல உறுமிவிட்டுப் புறப்பட்டுப் போகும்
புயலென்று தனக்குத்தான் புகழ்சூடும் இன்னல்
கலியாணக் கச்சேரி கண்காட்சி முன்றில்
கட்டாயப் பேச்சாளக் கற்றிற்ற மின்னல்
எலிபோல வீட்டுக்குள் இல்லாளின் முன்பு
எதிர்வார்த்தைப் பேசாத இவர்பச்சை மண்ணே!
*
19-02-2024

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (19-Feb-24, 1:47 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 89

மேலே