அந்திப் பந்தல் 5

அந்திப் பந்தல்-5
.......................

தாத்தன் வந்த சுவடு தெரியாமல் வந்து நிற்க கதையின்று மீண்டவளாய்ப் புன்னகைப் பூவொன்றைப் பூத்தவளாய் நின்றிருந்தாள்.

வந்தவர் கையலம்புவதற்காய் ஆற்றில் இறங்க தானும் அவருடன் ஆற்று நீரில் கால் படர்ந்தாள். சில்லென்ற குளிர்நீர் தரும் ஸ்பரிசம் மனம் வரை புத்தூக்கம் கொடுக்க கதை தந்த சோர்வு நீங்கப் பெற்றவளாய் அவருடனேயே மறு கரையேறி முன் பரந்து விரிந்து கிடந்த அசையும் பச்சை நெல்நாற்று சதுர வரவைகளாலான வயல்வெளியை தென்றல் தழுவ ரசித்து நின்றாள்.

சூரியன் மேற்கில் தஞ்சம் புகுந்து தன் ஒளியின் தீவிரத்தை அங்கு நிலைநாட்டிக் கொண்டிருந்தான். நாற்றிலிருந்த கண்கள் மெல்ல நேர் நோக்கி நிலைத்தன. மேற்கின் தொலைவில் அவள் கண்ட காட்சி; அடர்தென்னை மரங்கள் சூழ செந்தகர முகப்புக் கூரையுடைய ஒரு சிறு குடில் சூரிய கதிரின் வெளிப்பில் மின்னியவாறு நின்றிருக்கக் கண்ட அவள் கண்ணும் மனதும் ஸ்தம்பித்து நின்றது ஒரு கணம்!

“இது காத்தமுத்துவின் குடில் மாதிரி இருக்கே...!”

மனதும் உடலும் அனிச்சையாகச் செயல்பட...

“ அம்மப்பா...! வரம்பில் கொஞ்சத் தூரம் ஓடீற்று வாறன்.”
என்று சொல்லி அனுமதிக்கு காத்திராமல் வளி கிழித்து வரப்பில் ஓடத் தயாரானாள்.

வரப்பில் ஓடுவது ஒன்றும் அவளுக்குப் புதிதல்ல. வயலில் விதைப்புக் காலங்களில் நெல் மணிகளை பொறுக்க வரும் கிளிக்கூட்டங்களை விரட்டுவது அவளுக்குப் பிடித்தமான வேலைகளிலொன்று; காலையும் மாலையும் தாத்தனை ஆற்றுமேட்டில் நிற்கச் சொல்லிவிட்டு வரப்பில் அவள் ஒடிக் கொண்டிருப்பாள். அவள் காற்றடங்கள் தரும் வேக அதிர்வில் நெல்மணிகளைப் பொறுக்கிக் கொண்டிருக்கும் கிளிக்கூட்டம் சடுதியாய் மேலெழும். வரப்பில் அவள் ஓடுவாள் இருபக்க வயல்களிலிருந்தும் பச்சைக் கிளிக் கூட்டம் விமான அசைவு போன்று மேலெழும். நடுவில் இவளும் கைகள் விரித்து அவற்றின் கதியில் பறந்து கொண்டிருப்பாள். இதனாலேயே பறப்பும் பறவைகளும் அவளுக்கு என்றும் நேசிப்பிற்குரியவை ஆகின. காலை, மாலை இரு வேளைகளிலும் பறப்பு அவள் விதைப்புக்கால விருப்பாகியது.

இன்றைய அவள் பறப்பு இதுநாள் வரை அவள் கண்டிராத வேகத்தை மிஞ்சியிருந்தது. மனம் முழுவதும் காத்தமுத்துவின் குடிலைப் பார்க்கும் ஆர்வம் மேலிட்டுக் கிடந்தது. அங்கு செல்வதே தன் கதையின் தீர்வாக அவள் சிறு மனது எண்ணித் திளைத்தது. வரப்பில் சிறு சறுகலின்றி அவள் ஓடிக் கொண்டிருந்தாள். வரப்போர நீர்மையில் செழித்து வளர்ந்த நீலப்பூச்செடிகள் அவள் கெண்டைக் கால் தழுவி அவள் வேகத்தின் வலிக்கு இதம் சேர்த்தன. ஆனாலும் அன்று அவற்றை நிதானித்து ரசிக்கும் நிலையில் அவளில்லை. ஓடிக் கொண்டேயிருந்தாள். அவள் இலக்கும் தொடுவானம் போல் நகர்ந்து கொண்டே சென்றது.

சூரியன் சற்று மங்கத் தொடங்கினான். அவள் வரப்பும் கூட இருளில் மங்கத் தொடங்கியிருந்தது. குடிலின் முகப்பில் ஒளிர்ந்த சூரியனையும் காணவில்லை. அவள் முகம் போல் அகமும் வாடத் தொடங்கியது. கால்கள் இடறின. சற்று ஆசுவாசப்படுத்த எண்ணி முழங்கால்களில் கைகளையூன்றிக் குனிந்தவண்ணம் வந்த வழி நோக்கினாள்.
மனம் பதைத்தது. எங்கும் இருளின் ஆரம்பச்சுவடு படரத்தொடங்கியிருந்தது வந்த வரப்பும் மங்கலாகியது. அப்போதுதான் அவள் உணர்ந்தாள். தான் தாத்தனிடமிருந்து வெகு தூரம் வந்து விட்டதை.
“கடவுளே! இருட்டில் எப்பிடி நான் அம்மப்பாவிடம் போய்ச் சேருவேன்...?”அழுகையாய் வந்தது அவளுக்கு.
காத்தமுத்து குடிலென நினைத்த இலக்குக்கும் அவளால் போக முடியவில்லை. தாத்தனிடம் போகும் பாதையும் இருள் சூழ்ந்து கிடக்கின்றது. இடையில் அவள்.

நர்த்தனி

பின் வரும்...

எழுதியவர் : நர்த்தனி (14-Mar-24, 11:07 pm)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 41

மேலே