முன்னிரவு 6
முன்னிரவு 6
…………………
இருள் சூழ்ந்த தன்னுலகை கைகளினால் துழாவிய படி அவள் நின்றிருந்தாள்.
அவளது மலைப்பு எதுவென்றால்; இன்னும் தான் ஆதாரம் பற்றி நிற்கின்றேனா இல்லை மிதக்கின்றேனா என்பதுதான்.
கும்மிருட்டில் இரவுப் பூச்சிகளினதும் வண்டினங்களினதும் இரைச்சல் கேட்கத் தொடங்கின.
நொடிகள் நகரத் தொடங்கின.
நகர நகர… அவை பேரிரைச்சல் ஆகியதை உணர்ந்தாள். இடையிடையே தவளைகளின் பாய்ச்சல் சத்தம் ‘கிளக் கிளக்’க்கென. ஓரடி கூட நகர விருப்பின்றி மிரண்டு நின்றிருந்தாள்.
‘எதற்காக இத்தனை தூரம் வந்தேன்….?’
‘புத்தகத்திலுள்ள கதையை எதற்கு நிஜத்தில் தேட முயற்சித்தேன்?’
‘கண்ணுக்கெட்டிய சித்திரமான அக்குடிலையும் மணல் மேட்டிலிருந்த தென்னை மரங்களையும் எதற்காக காத்தமுத்துவின் குடிலுடன் ஒப்பிட்டேன்? ‘
‘அது எப்படிச் சாத்தியமாகும்! ‘
என்ற கேள்விகள் தலைக்குள் குடையத் தொடங்கின.
தன்னுடைய கதை பித்து எத்தகைய மாயையைத் தன்முன் விரித்து விட்டிருக்கின்றது என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள்.
அடர் இருளைத் தொடர்ந்து பார்க்கப் பார்க்க கண்களிலேதோ புலப்படுவது போலவே இருந்தது, ஆனாலும் எதுவும் உணர்வுக்கு எட்டவில்லை!
அண்ணார்ந்து வான் பார்க்கத் தொடங்கினாள்.
கணங்கள் கரைந்து கொண்டே இருந்தன….
நீள் வானில் நிலவு முகம் காட்டத் தொடங்கியது.
நிம்மதிப் பெருமூச்சொன்று அவளிடம் வெளிப்பட்டது.
திடீர் ‘பளீர்’ சிறுவெளிச்சங்கள் மெல்லக் கண் வெட்டின.
மெல்ல மெல்ல வெள்ளி முளைக்கத்
தொடங்கியது.
இருள் சிறிது சிறிதாக விலகத் தொடங்கியதும் பாதங்கள் இயங்குசக்தி பெற்றதாய் உணரத் தொடங்கினாள்.
வரப்பினருகேயிருந்த மலர்களைக் குனிந்து மெல்ல வருடத் தொடங்கினாள், அதன் இதம் சற்று தென்பைத் தர வந்தவழி நோக்கித் தளர்வுடன் நடக்கத் தொடங்கினாள்.
வயலினுள் சலசலக்கும் நீர்ச்சத்தம் கூடக் கேட்கும் அளவு மனது சற்று நிர்மலமாகிவிட்டதை உணர்ந்தாள்.
மெல்ல வரப்பிலோட முனைந்தாள்.
வரப்பினோர நீலப் பூக்கள் மீண்டும் இதமாய்க் கெண்டைக்கால் தழுவத் தொடங்கின.
இதுவரை நிலவொளியில் வரப்பிலோடி அவள் முன்னர் அனுபவித்திராத அனுபவம் ஒன்றை அம்முன்னிரவு அவளுக்கு வழங்கிக் கொண்டிருந்தது.
காற்றின் திசைக்ககேற்ப நாற்றுகள் நிலவொளியில் பொன் வர்ணச்சாயலில் நடமிட்டுக் கொண்டிருந்தன. ஓட்டத்தின் வேகம்குறைத்து நிதானித்துக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தாள்.
சீரான வேகத்தில் ஓடும் குதிரை வனப்பு தனக்கு வந்து விட்டதாகவே அவள் உணர்ந்தாள். அதன் அடையாளமாக ஒரு களிப் புன்னகை.
தொலைவு அண்மிக்க அண்மிக்க எதிர்ப்புற வீடுகளிலிருந்து விளக்கொளிகள் புலப்படத் தொடங்கின. மனது நிறையத் தொடங்கியது அவளுக்கு இருப்பை நெருங்கி விட்டாளென.
வாய்க்காலின் அணைக்கட்டு கண்ணுக் கெட்டியது.
‘ அப்பாடி! வந்து சேந்திற்றன்…!’
வேகம் குறைத்து மெல்ல அணைக்கட்டிலேறி எதிர்ப்பக்கம் பார்த்தாள்.
அம்மப்பா சிந்தனை மிதப்போடு சிற்றாறின் மறுபக்கத்தில் நின்றிருந்தார்.
“ அம்…ம..ப்…பா…! என்று கீச்சிட்டபடி ஆற்றில் தொப்பெனக் குதித்து குளிர் சில்லிட இடை வரை நனைந்த சட்டையையும் பொருட்படுத்தாது தாவியோடி அவரை அணைத்துக் கொண்டாள்.
உடல் மட்டும் குளிரிலும் அவள் கண்ட புதிய அனுபவத்திலும் நடுங்கிக் கொண்டிருந்தது.
“எங்கே போனாய் இவ்வளவு நேரம்…!’ தலை வருடிய படியே கேட்டார்.
‘துலைஞ்சு போனன் எண்டு நினைச்சன்… ஆனா…வந்து சேந்திற்றன்…’
‘நீ எப்பிடி துலைஞ்சு போவாய்…? வந்திருவாய் எண்டு எனக்குத் தெரியும்.’ என்றார்.
“எப்பிடித் தெரியும் உங்களுக்கு… ‘என்று கண்கள் விரியக் கேட்டாள்.
சிரித்துக் கொண்டே சொன்னார்….
‘இருட்டு உனக்குப் புதிசு… வரம்பு உனக்குப் பழசு…’
கலகலவெனச் சிரித்தாள்.
‘சரி… வா போவம்…’
அவர் கை பற்றிக் கிளம்பத் தயாரானாள். சில அடிகள் நகர்ந்தவள். என்ன நினைத்தாளோ வந்தவழி பின்னோக்கிப்பார்த்தாள்.
இரவின் கண்களில் தொலைவில் அந்தத் தென்னை மரங்களும் குடிலும் மங்கலாய் இப்பவும் அவளுக்குத் தெரிந்தது.
ஏதோ பொறி தட்டியவளாய்…
‘இருங்க வாறான்…!’ என்றாள்
ஆற்றின் அருகே சற்று நகர்ந்து,
அந்தியில் தான் நிறைத்த சிரட்டை நீர் நிலவினொளியில் பளபளப்பதைக் கண்டாள்.
பக்கம் சென்றாள் … இப்பவும் சிறுமீன்கள் சிறு வால்களசைத்து வலம் வருவதைக் கண்டதும் அகம் மிகமகிழ்ந்தாள்.
மெதுவாக சிந்தாது சிதறாது சிரட்டையைக் கையிலேந்தி மீண்டும் ஆற்றிலிறங்கிக் கவிழ்த்தாள். சலசலக்கும் நீரில் சிறுவால்களசைத்து அவை நீந்துவதைக் கண்ணாரக் கண்டு விட்டுக் காத்திருந்த அம்மப்பா கைபிடித்துத் துள்ளலுடன் வீடு நோக்கி நடந்தாள்.
அன்றிரவு தூக்கத்தில் ஆழ்ந்த கனவொன்றை அவள் கண்டு கொண்டிருந்தாள்.
அதில்…
காத்தமுத்து தன் மனைவி மக்களுடன்
நிலவொளியில் தன் குடிலருகே தென்னைமர மணற்பரப்பில் சிரித்து மகிழ்ந்திருக்கின்றான்.
நிம்மதி ஒளிக்கீற்று அவள் முகத்தில் படர்ந்திருந்து.
நர்த்தனி
🍀