மனப்பொருத்தம்

மேகத்தால் மறைத்தாலும் வெண்ணிலாவே - உன்
தேகமது தெரிகிறதே வெண்ணிலாவே
மாதத்தில் ஓர்நாள்தான் வெண்ணிலாவே - நீ
மாயமாய் மறைவதென்ன வெண்ணிலாவே
வெட்கத்தால் மறைந்தாயோ வெண்ணிலாவே - மீண்டும்
பக்கத்தில் வந்ததென்ன வெண்ணிலாவே
இருப்பவர்க்கும் இல்லார்க்கும் வெண்ணிலாவே - நீ
இன்னொளியைத் தருகின்றாய் வெண்ணிலாவே
நல்லவர்க்கும் தீயவர்க்கும் வெண்ணிலாவே - நீ
நன்முத்தாய் விளங்குகின்றாய் வெண்ணிலாவே

நீல நதியினிலே வெண்ணிலாவே - நீ
நீந்தும் அழகென்ன வெண்ணிலாவே
மலரிதழின் பனித்துளியில் வெண்ணிலாவே - நீ
மாணிக்கமாய் ஜொலிப்பதென்ன வெண்ணிலாவே
மாண்புமிக்க உன்னழகில் வெண்ணிலாவே - தினம்
மயங்கியது எந்தன்சிந்தை வெண்ணிலாவே
பிள்ளைப்பருவம்முதல் வெண்ணிலாவே - நான்
உன்னை அழைக்கின்றேன் வெண்ணிலாவே
வருவது எப்போது வெண்ணிலாவே - அன்பு
முத்தம் தருவதும் எப்போது வெண்ணிலாவே

மங்கையவளின் கண்களும் வெண்ணிலாவே - மதியுன்
பிறை வடிவமாம் வெண்ணிலாவே
மாதிவளின் முகத்தை வெண்ணிலாவே - கவிகள்
மதிமுகம் என்கிறார்கள் வெண்ணிலாவே
மதிகெட்டவளின் முகங்கண்டு வெண்ணிலாவே - நான்
மயங்குவேனோ உன்னைத்தவிர வெண்ணிலாவே
கவலையுற்ற நேரமெல்லாம் வெண்ணிலாவே - உன்
கலையழகை ரசிக்கின்றேன் வெண்ணிலாவே
என்மனம்போல் தூய்மையாக வெண்ணிலாவே - நீயும்
இருப்பதென்ன வெள்ளையாக வெண்ணிலாவே
சரியான மனப்பொருத்தம் வெண்ணிலாவே - என்னை
கல்யாணம் கொள்வாயா வெண்ணிலாவே!
- வெ.பசுபதி ரங்கன்

எழுதியவர் : -- வெ.பசுபதி ரங்கன் (20-Mar-24, 6:49 pm)
சேர்த்தது : vpasupathi rengan
பார்வை : 111

மேலே