கல்யாணம்

*************
காதலொடு இல்லறம் காணுதற்கு சாட்சியாய்
போதலிந்த கல்யாணப் பூட்டு
*
வேலியெனக் காக்கவரும் வேந்தவன் கைக்கோக்க
தாலியிடும் வைபோகம் தான்
*
இருகுடும்பம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யும்
திருமணமோர் தெய்வீகத் தேர்
*
பிரிந்துநிற்கும் சொந்தத்தை
பேரன்பால் சேர்க்கும்
நரித்தனமே வைக்கும் நலுங்கு
*
அரிச்சுவடிக் காதல் அடிப்படையை நீட்டி
விரிவாக்கும் ஒப்பந்த வேட்டு
*
மூன்று முடிச்சிட்டு முன்னெடுக்கும் இல்வாழ்வை
சான்று பகரும் சடங்கு
*
ஆண்டு அனுபவித்து ஆலமர மாவதற்கே
தூண்டும் திருமணமோர் தூண்
*
கட்டிக் கரும்பெனக் கட்டிக் கடித்தார்க்குத்
தொட்டில் இனிப்பூட்டும் தோப்பு
*
அன்பை பறிமாறும் அந்தரங் கத்திற்கு
முன்போர் அடையாள முத்து
*
அகமொன்று வாரை அடையாளங் காட்டி
இகம்வாழச் செய்யும் இலக்கு
*
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (26-Mar-24, 2:48 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 70

மேலே