சொல்லி வைத்தாற் போல்

தரகர் தாத்தாவின்
தகவலுக்குப் பின்
பரபரப்பின் விரல்கள் வீட்டைப்
பற்றிக்கொள்வதும்...

அழகிய சின்னவளுக்கு
அடிபோடலாம் என
பஞ்சாரத்துக்குள் அவள்
பதுக்கப்படுவதும்...

முரட்டுத் தம்பியின்
முற்போக்குவாதங்கள்
மூளைச்சலவையில்
முக்கியெடுக்கப்படுவதும்....

வேலைகள் பலவுடன்
வேண்டுதல்களையும் சேர்த்து
அடுப்பறையில் அம்மா
அவிந்துகொண்டிருப்பதும்...

ஒப்பனையோடும்
ஒய்யாரக் கற்பனையோடும்
பார்வை ஈக்களுக்கு - நான்
பலகாரமாயாவதும்....

வரதட்சணைப் பட்டியலை
வந்தவர்கள் வாசிக்க
குற்றவுணர்வில் அப்பா
குறிப்பாலுணர்த்துவதும்...

“சம்மதமென்றால்
சொல்லி அனுப்புங்கள்”
நறுக்கென அவர்கள்
நடையைக்கட்டுவதும்....

நிகழ்ந்துவிடுகிறது
ஒவ்வொரு முறையும்
சொல்லி வைத்தாற் போல்!

எழுதியவர் : ஜ. கோபிநாத் (25-Mar-24, 5:43 pm)
சேர்த்தது : Gopinath J
பார்வை : 56

மேலே