சிந்தித்து முடிவெடு

சிந்தித்து முடிவெடு
26 / 03 / 2024

அழுகையில் தொடங்கி
அழுகையில் முடியும் - இந்த
அவல வாழ்வினில்
ஒரு முறையேனும்
மனம் விட்டு
சிரித்திருக்கிறாயா?
எண்ணிப்பார்.
பிறந்தவுடன்
பாலுக்கு அழுகை
கொஞ்சம் வளர்ந்தவுடன்
பள்ளிக்கு செல்ல அழுகை
பள்ளியில் மதிப்பெண்
குறைந்தால் அழுகை
பள்ளி முடித்து
கல்லூரியில் சேர அழுகை
பருவம் வந்ததும்
காதலிலும் அழுகை
காதலித்து கைப்பிடித்த
வாழ்விலும் அழுகை
வாழ்வின் அடுத்தபடி
மழலை செல்வத்துக்கு அழுகை
மழலை வளர்ந்து
மங்கை ஆனதும் அவள்
எதிர்காலம் நினைத்து
மனம் நடுங்க அழுகை
மங்கைக்கு நல்ல
மாங்கல்யம் அமைய அழுகை
மங்கை தாய்மை
அடைந்தால் சந்தோஷ அழுகை
பேரக்குழந்தை எட்டி உதைத்தால்
பெருகி வழிந்தோடுமே அழுகை
வயதான பின் பிள்ளைகளால்
கைவிடப்பட்டு
முதியோர் இல்லத்தின்
மூலையில் முடங்கிப் போகும்
முக்கல் முனகல் அழுகை
ஆக வாழ்வின்
ஒவ்வொரு அடியிலும்
ஒவ்வொரு நொடியிலும்
அழுகை...அழுகை....
அழுகை மறந்து
அகம் மகிழ
சிரிக்க மறந்தாயே
முகம் மலர
சிரிக்க மறுத்தாயே
அழு...அழு...
அழுகை நம்மோடு பிறந்தது
நம்மோடு தொடர்வது...
அழுவதும் சிரிப்பதும்
நம்மால் மட்டும்
செய்ய முடிவது.
இரண்டும் நம்
கை வசம் இருப்பது.
சிந்தித்து முடிவெடு
சிரிப்பதா? அழுவதா?

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (27-Mar-24, 5:30 am)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : sinthithu Mudivedu
பார்வை : 202

மேலே