ஒரு விபத்திற்குப் பின்னால்
பிரேதம் சுமந்து
ஆம்புலன்ஸ் புறப்பட்டதும்
தூக்கிவீசப்பட்டதற்கு
போக்குவரத்துப் புலனாய்வால்
பூசப்படும் காரணம்
அதிவேகம் என்பதாகயிருக்கும்!
உடற்கூராய்வு
உள்ளுக்குள் நிகழ்ந்துகொண்டிருக்க
மார்ச்சுவரி வாசலில்
ரத்த சொந்தங்களின் மாரடிப்பு
இழப்பின் வலியை
ஈரேழுலோகம் சேர்க்கும்!
காயமுற்ற பாகங்களின்
பட்டியலுடன்
உடற் கூராய்வு அறிக்கையில்
அறையப்பட்டிருக்கும்
இறப்பின் காரணம்
கல்லையும் மணலாக்கும்.
சரக்கடிச்சிருந்தானா?
ஹெல்மெட் போடலையா?
ஓவர் ஸ்பீடா?
ராங் சைடு ஓவர்டேக்கா?
வாய்க்கரிசி வாய்கள்
வம்பளந்துகொண்டிருக்கும்.
முதல் தகவல் அறிக்கையில்
இடம்பெறாத
உண்மைக் காரணமோ
அதே ஊழல் குழிகளில்
உயிர்த்திருக்கும் – அடுத்த
உயிரை இடம்பெயர்த்த!