எது சொர்கம் எது நரகம்

ஒரு வேளை உணவுக்கு திண்டாடும் பிச்சைக்காரனுக்கு உணவு மட்டும் கிடைத்தால் அதுவே சொர்கம்!
ஒரு வேளை உணவு கிடைக்கும் ஒரு குடியானவனுக்கு இருவேளை உணவு கிடைத்திடில் அதுவே சொர்கம்!
இருவேளை உணவு கிடைத்து உடுக்க சரியான உடையின்றி திரியும் ஒரு கூலி வேலையாளுக்கு, உடுத்த இரண்டு ஜதை புதுத்துணிகள் இருப்பின் அதுவே சொர்கம்!
இருவேளை உணவு, உடை இருந்தும், தங்குவதற்கு சரியான இடமின்றி இருக்கும் ஒரு சித்தாளுக்கு பாதுகாப்பான ஒரு குடிசை சொர்கம்!
உயிர்வாழ உணவு, குறைந்த பட்ச உடை, குளிரில் வெயிலில் தப்பிக்க சிறிய இருப்பிடம் உள்ள ஒரு கைவண்டி வியாபாரிக்கு ஒரு பெட்டிக்கடை சொர்கம்!
சிறிய அளவில் விற்பனை இருந்தும் அதிக லாபம் கிடைக்காமல் இருக்கும் பெட்டிக்கடை வியாபாரிக்கு, ஒரு சராசரியான மளிகை கடை வைக்க வசதி கிடைத்தால் அது சொர்கம்!
மளிகை கடை வியாபாரிக்கு ஒரு சூப்பர்மார்கெட் நடத்திட வாய்ப்பு அமைந்தால் அதுவே சொர்கம்!
சூப்பர்மார்கெட் நன்றாக நடந்தாலும், இன்னும் அதிக அளவு பணமும் லாபமும் சம்பாதிக்க நினைக்கும் வியாபாரிக்கு ஒரு மாலின் (mall) உரிமையாளராக இருந்திடில் அது சொர்கம்!
மாலில் வியாபாரம் குறைந்து நஷ்டம் வருகையில், ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்தான் அவருக்கு சொர்கம்!
சூப்பர்மார்கெட் வியாபாரம் சரிந்து அதிலும் நஷ்டம் வருகையில் ஒரு பெரிய மளிகை கடை வியாபாரம் சொர்கம்!
மளிகை கடையிலும் நஷ்டம் என்றால் ஒரு காய்கறி கடை வைத்து லாபம் கிடைத்தால் அந்த வியாபாரிக்கு சொர்கம்!
காய்கறி வியாபாரமும் வற்றிப்போய் நஷ்டம் கையை கடிக்கும்போது, ஒரு பெட்டிக்கடை வைத்து சிறிதே லாபம் வந்தாலும் அது சொர்கம்!
பெட்டிக்கடையும் போண்டியாகி தவிக்கும்போது ஒரு அன்றாட கூலி தொழில் செய்து இரு வேளை வயிற்றுக்கு உண்பது சொர்க்கம்தான்!
அன்றாட கூலி வேலைகூட கிடைக்காதபோது, விவசாய நிலத்தில் வேர்வை சிந்தி உழைத்து, வேலை செய்து ஒரு வேளை சாப்பாடு கிடைத்தால் அதுவே சொர்கம்!
எந்த வேலையும் இல்லை, கையில் ஒரு சல்லி காசு கூட இல்லை எனும் தருவாயில் தன்மானத்தை கொன்றுவிட்டு, ஒரு பிச்சைக்காரனாக மாறி, வாரத்தில் இரண்டு மூன்று முறை பழைய உணவு கிடைக்கப்பெற்று, உயிரைப்போகாமல் காத்துக்கொள்வது சொர்க்கமா, நரகமா?

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (8-Apr-24, 2:45 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 69

மேலே