எண்பதை பதினெட்டு வருத்துமா
இருபதுகளின் திருமணங்கள் அறுபதுகளின் கல்யாணங்கள் பல கண்டதுண்டு. கண்டு, வாழ்த்தி, உண்டு மகிழ்ந்தது உண்டு. ஆனால் எண்பதாம் கல்யாணம் (சதாபிஷேகம்) காண்பது என்பது பொதுவாக அனைவருக்குமே மிகவும் குறைவுதான். இதற்கு முக்கிய காரணங்கள் மூன்றை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். முதலாவதாக, திருமணமாகி என்பது வயது வரை வாழும் ஆண்கள் மற்றவர்களை காட்டிலும் குறைவு. இரண்டாவதாக, இந்த வயோதிக காலத்தில் நோய் நொடியின்றி இருப்பவர்களும் மிக குறைவு. நோயின் தாக்கம் அதிகம் இருப்பவர்கள் இப்படிப்பட்ட சடங்குகளை செய்து கொள்வதில் ஆர்வம் காட்டமாட்டார்கள். மூன்றாவதாக, எண்பதாம் கல்யாணம் செய்யவேண்டும் எனில் ஓரளவுக்கு செலவு ஆகும். தக்க பொருளாதார சூழ்நிலை இல்லை எனில் இதை ஓரளவுக்கு விமரிசையாக செய்துகொள்ள முடியாது. வீட்டு வரையில் செய்துகொள்வது என்பது வேறு.
இன்று நான் ஒரு எண்பதாம் கல்யாண வைபோகத்திற்கு சென்று வந்தேன். இளம் வயது தம்பதியினரின் திருமணம் போலவே சிறப்பாக இந்த கல்யாணம் நடைபெற்றது. நேற்றைய தினம் சில வைதீக காரியங்களை செய்து வந்தவர்களுக்கு நல்ல ருசியான உணவு படைத்தனர். இன்று காலை சதாபிஷேகம் செய்து கொண்ட தம்பதியினர் காலை ஏழு மணியிலிருந்து சடங்குகள் செய்வதில் ஈடுபட்டிருந்தனர். இருவரையும் சேர்த்து நாற்காலிகளில் அமரவைத்து, குடம்குடமாக தலையில் தண்ணீரை கொட்டி குளிப்பாட்டினர்கள். ஒரு பக்கம் நாதஸ்வர ஓசை ஒலித்தவண்ணமே இருந்தது. அதன் பிறகு இருவரும் ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்தனர். அவர்களை திருமண மண்டபத்திற்கு வெளியே அழைத்து சென்று சில சடங்குகள் செய்து மீண்டும் உள்ளே கூட்டி வந்தனர்.
மேடையில் இந்த தம்பதியினர் கம்பீரமாக புத்தாடை தரித்துக்கொண்டு, மாலை அணிந்துகொண்டு அமர்ந்தனர். பின்னர் இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். அதன் பிறகு வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர இசையில் என்பது வயது வாலிபர் அவரது மனைவி கழுத்தில் மூன்றாம் முறையாக தாலியை காட்டினார். முதன் முறை அவர் தாலி காட்டியது நாற்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன்பு. இரண்டாவது முறை இருபத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்பு. இன்று மூன்றாவது முறையாக தாலி கட்டினார். இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவெனில், இந்த நல்ல மனிதர், இந்த மூன்று தாலிகளையும் வெவ்வேறு பெண்ணின் கழுத்துகளில் காட்டாமல், ஒரே பெண்ணின் கழுத்தில் கட்டினார்.
நான் நினைத்து பார்க்கிறேன். மேலை நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் திருமணமான ஒரு தெம்பதி ஐந்து பத்து ஆண்டுகள் சேர்ந்து வாழ்வதே பெரிய விஷயம். ஆனால் நம் நாட்டிலோ ஐம்பது வருடங்களாக ஒரு தம்பதியினர் இல்லற வாழ்வில் இணைந்து வாழ்வதை பார்க்கையில் கொஞ்சம் ஆச்சரியமாகத்தானே இருக்கிறது.
என்பது வயது மணமகன், எழுபத்திஐந்து வயது மணமகள் இருவரும் இன்னும் பல்லாண்டுகள் உடல்நலத்துடன் அமைதி கலந்த மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்திவிட்டு வந்த நான், இன்று சில நிமிடங்கள் சோகமாகவே இருந்தேன். காரணம், இந்த தம்பதியினருக்கு பிறந்த இரு பிள்ளைகள் இருவர். மகள் மணமாகி ஓரளவுக்கு சிறப்பாக வாழ்ந்து வருகிறாள். ஆனால் மகன்.......எண்பதை காணும் இந்த இனிய தம்பதியின் மகன்........மகன்.......ஆருயிர் மகன் இன்று உலகில் இல்லை. பதினெட்டு வயது இளம் வாலிபனாக இருந்தபோது இவர்களது அன்பு மகன் இந்த உலகை விட்டுப்பிரிந்தான். புத்திர சோகம் பொல்லாதது. இந்த துயர சம்பவம் நடந்து முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இவர்களது உற்றார் உறவினர், நண்பர்கள் பலர் வந்து இந்த தம்பதிகளை வாழ்த்திவிட்டு, இவர்களின் ஆசிர்வாதங்களை பெற்று, அறுசுவை விருந்தினை சுவைத்த அந்த வேளையில், இந்த தம்பதிகளின் கண்ணிலிருந்து, பிறருக்கு தெரியாமல், என்னைப்போன்ற சிலரது கண்களுக்கு மட்டுமே அவ்வப்போது தெரிந்த கண்ணீர் சொட்டுகள், வெயில் காரணமாகவும், அங்கிருந்த மின் விசிறிகளின் காரணமாகவும், அந்த தம்பதிகளின் ஒரே புதல்வி கையில் இருந்த கைக்குட்டையால் வேர்வையை துடைக்கும் பாவனையாலும் அந்தந்த கணத்திலேயே காய்ந்துவிட்டன. ஆனாலும், இந்த தம்பதிகளின் மனதில் இவர்களின் துயரக்கண்ணீர், எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் கங்கையை, யமுனையை காவிரியை போல வற்றாமல் பாய்ந்து, இந்த முதிர்ந்த, தளர்ந்த உள்ளங்களில் பாய்ந்து தாக்காமலிருக்குமா?