பிறருக்கு நல்லது செய்தால் நமக்கு நல்லது நடக்குமா
ஓரளவுக்கு நான் கொஞ்சம் நல்லவன்தான் என்று நம்புகிறேன். இதற்கான சில காரணங்கள்:
1. நான் முப்பத்திஅஞ்சு வருடங்களாக ஒரே மனைவியுடன் வாழ்ந்து வருகிறேன்.
2. எனக்கு இரண்டு மகன்கள். அவர்கள் இருவரையும் நான் 'நீ இந்த படிப்பு தான் படிக்கவேண்டும், இந்த தொழில்தான் செய்யவேண்டும்' என்று ஒரு தடவை கூட கட்டளை இட்டதில்லை.
3. என் தாய்க்கு அவளது கடைசி காலம்வரை பண உதவி செய்துவந்தேன்
4. கல்யாணம் செய்துகொள்ளாமல் வாழும் என் தம்பிக்கு மாதாமாதம் பண உதவி செய்து வருகிறேன்.
5. என்னுடைய ஒரு உறவினருக்கு மாதாமாதம் ஒரு தொகை அனுப்பி
அவரது மகளின் பட்டபடிப்புக்கும் ஓவ்வொரு செமெஸ்டருக்கு பணமும் கட்டி வருகிறேன்.
6.ஒரு உறவினருக்கு அவரது வியாபாரத்திற்காக அதிக அளவில் (என் பொருளாதார தரத்தை கொண்டு நோக்குகையில்) பணம் கொடுத்து உதவி வருகிறேன். அவர் என்ன வியாபாரம் செய்கிறார் என்றுகூட இன்றுவரை எனக்கு தெரியாது. அதில் அவருக்கு லாபமா நஷ்டமா என்பதும் எனக்கு சரியாக தெரியாது. ஆனால் நான் கொடுத்த பணத்தில் ஒரு தம்பிடி கூட இதுவரை எனக்கு அவரிடமிருந்து கிடைக்கவில்லை.
7. உதவும் கரங்கள், அனாதைகள் இல்லம் போன்ற அமைப்புகளுக்கு என்னால் முடிந்த நன்கொடையை (பணம் மற்றும் பொருள்) அளித்து வருகிறேன்.
ஒரு பரந்த இதயமும், இரண்டு கருணை விழிகளும், மூன்று கலைகளும் (நகைச்சுவை, பாடுவது, எழுதுவது) இணைந்து, ஒவ்வொரு விரலிலும் ஐந்து விரல்கள் கொண்டு, ஆறறிவு பெற்ற நான் மேலே கூறிய ஏழு செயல்களால் இந்த உலகத்தில் எட்டு திக்குகளிலும் உள்ள நல்ல மனிதர்களில் நவரத்தினம் போன்ற ஒருவனாக இருக்கிறேன் தானே?
நான் அப்படிப்பட்ட நல்ல மனிதன் இல்லை என்பதற்கு நீங்கள் பத்து காரணங்கள் சொன்னாலும் நான் ஏற்கப்போவதில்லை.
எனது இளமை காலங்களில் ஒன்றும் பெரிதாக நினைவு கூறும்படி ஒன்றும் நிகழவில்லை. பிறரிடம் பழகுவதில் நாட்டம் இல்லை (20 %) தைரியமும் துணிவும் மிக குறைவு (30 %) விளையாட்டில் அவ்வளவு ஆர்வம் இல்லை (40 %), வீட்டிற்கு ஒத்தாசை செய்வதில் ஓரளவுக்கு (50 %), படிப்பில் சுமார் (60 %). காரியங்கள் செய்வதில் அதிக திறமை இல்லை (70%). தனிமையாக இருப்பதில் அதிக ஆனந்தம் (80 %), நகைச்சுவை உணர்வு ரொம்ப ரொம்ப அதிகம் (90 %).
பள்ளி கல்லூரி பருவத்தில் எனக்கு ஆருயிர் நண்பர்கள் இரண்டு பேர். இப்போது எனக்குள்ள ஆருயிர் நண்பர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 1000 பேர்கள். இன்னும் நான் கூறி முடிக்கவில்லை. இந்த 1000 இலிருந்து ஒரு 1000 ஐ கழித்து விடுங்கள். மிச்சம் இருப்பது தான் இன்றைய என்னுடைய ஆருயிர் நண்பர்களின் எண்ணிக்கை.
நான் முப்பத்திஐந்து வருடங்கள் பணிபுரிந்த மத்திய அரசாங்க நிறுவனத்தில் நான் ஒன்றும் பெரிதாக அரிதாக, மிக்க திறமையாக எதையும் செய்யவில்லை. ஆனால் நேர்மை நாணயம் என்ற எனது இரு கண்களைப்போன்ற கொள்கைகளிலிருந்து ஒருபோதும் தவறியது இல்லை. ஒரு தம்பிடி கூட லஞ்சம் வாங்கவில்லை தான், ஆயினும் மாநில அரசு அலுவலங்களில் எனது வாகன லைசென்ஸ், வண்டி எண் புதுப்பித்தல் போன்றவற்றுக்காக லஞ்சம் கொடுத்தேன் என்பது வேதனைக்குரிய விஷயமே. எனக்கு நண்பர்கள் இல்லை அதே நேரத்தில் பகைவர்களும் இல்லை. நான் பகைவர்களாக கருதும் இரண்டு மனித வகுப்புகள் லஞ்சம் வாங்குபவர்கள், கஞ்சக்கருமிகள்.
வருமான வரி விஷயத்தில் ஒரு போதும் என் வருமானத்தை மறைத்ததில்லை. வருமான வரி ஏய்ப்பு செய்ததில்லை. என் நிறம் கொஞ்சம் கருப்பு, என்றாலும் கருப்பு பணம் சம்பாதித்ததில்லை. என்னை பொறுத்தவரை ஒரு நேர்மையான இந்திய குடிமகனாகத்தான் இருந்து வருகிறேன்.
நான் ஒரு நடுத்தரவர்க்க குடும்பத்தை சேர்ந்தவன்தான். உதவி (பணம் பொருள்) செய்வதற்கு நான் அஞ்சமாட்டேன். ஆனால், கேளிக்கை, டாம்பீகம், அடிக்கடி சுற்றுலா செல்லுதல், வார கடைசியில் நண்பர்களுடன் பார்ட்டி, டிரஸ், இதையெல்லாம் நாங்கள் அதிகமாகவே தவிர்த்ததால்தான் இப்போது எங்களால் சுய கவுரவுத்துடன் வாழ முடிகிறது. ஏன், சிறுக சிறுக சேமித்ததால்தான், பலர்க்கு அவர்களது இடையூறுகளை துடைக்க, பணம் கொடுத்து உதவ முடிகிறது. இதுவரையில் எனக்கு வாழ்க்கையில் பசிக்கொடுமை வந்ததில்லை. இனி வரும் காலங்களிலும் வராது எனும் நம்பிக்கை உண்டு. ஜீவகாருண்யம் மற்றும் கொல்லாமை என்கிற வள்ளலாரின் நெறிமுறையை பின்பற்றி வாழ்பவன் நான். "முடிந்தால் உதவு இல்லையேல் விலகு" இதுதான் எனது வாழ்க்கை நியதி.
நான் தற்புகழ்ச்சி கொள்வதாக தயவு செய்து நினைக்கவேண்டாம். என்னைப்பற்றிய சில உண்மைகளை, என் வாழ்வதில் நடப்பவைகளை பொது மக்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் எனும் ஆர்வமும் ஆதங்கமும் இருந்ததால்தான் இவற்றை இங்கு பதிவு செய்தேன்.
யார் எனக்கு உதவினாலும் உதவாமல் போனாலும், யார் என்னை கண்டு கொண்டாலும், கண்டு கொள்ளாவிட்டாலும், யார் என்னை மதித்தாலும் மதிக்காவிட்டாலும் எனக்கு இன்றுவரை நெருங்கிய நண்பர்களையும் விட என்னை விட்டு விலகாமல் அதிக அன்புடன் பாசத்துடன் இருக்கும் இரு வலிமையானதூண்கள் என் மனைவி, என் நகைச்சுவை உணர்வு.
நான் மக்கள் விரும்பும் பாடகனாக வேண்டும் என்று கனவு கண்டேன். இன்னும் கண்டுகொண்டுதான் இருக்கிறேன்.
நான் ஒரு நல்ல கவிஞனாக இருக்கவேண்டும் என்று ஆசை பட்டேன். இன்னும் பட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.
நான் நல்ல ஒரு எழுத்தாளனாக வரவேண்டும் என்றுதான் மனக்கோட்டை கட்டிக்கொண்டிருந்தேன். சரியான கான்க்ரீட் மிக்சர் கிடைக்காததால் கோட்டையை கட்டுவதில் கோட்டை விட்டுக்கொண்டே இருக்கிறேன்.
அன்புடன் இருந்தால் அமைதி. நான் அன்புடன்தான் வாழ்கிறேன். ஆனாலும் அமைதி கொஞ்சம் தட்டுப்பாடாகவே இருக்கிறது. அமைதி கொள்வதில் சிரமம் எவ்வளவு இருப்பினும் ஒன்றை மட்டும் நான் தெரிந்துகொண்டேன். அன்புடன் இருப்பின் அதுவே உண்மையான அமைதி. பிறருக்கு உதவும் நல்லெண்ணம் இருப்பின் அதுவே மெய்யான ஆனந்தம்.
“உமது புல்லரிக்கும் வசனங்களை கொஞ்சம் நிறுத்திக்கொண்டு, போய் வேறு ஏதாவது உருப்படியான வேலை இருந்தா பாருங்கய்யா” என்று உங்களில் பலர் முனகுவது எனக்கு கேட்கிறது. போய், வேறு ஏதாவது வேலை இருக்கிறதா என்று பார்க்கிறேன். அதைவிட பெரிய வேலை எனக்கு என்ன இங்கே.