நம்மைத் தொடரும் நிழல்கள்

நிழல் உண்மை அல்ல –ஆனால்
நடந்தால் பின் தொடரும்- சில நேரம்
வழிநடத்தும் உன்னையும் –பல நேரம்
பக்கத் துணையாகிப் பாதுகாக்கும் !
உன்னிலே தன்னையும் ஒழித்துக் கொள்ளும்.
விழுந்தால் உன்னோடு அதுவும் வீழ்ந்து விடும்.

எல்லாப் பொருளுக்கும் நிழல் உண்டு-ஆனால்
என்றும் நிலைப்பதல்ல அதனின் தொண்டு !

அற்ற குளத்து அருநீர் பறவை போல் இல்லாமல்
உற்றவன் போல் உன்னோடு உடனிருக்கும்…

காதலைப் பதப்படுத்தி
நினைவு எனும் நிழலாக்கி
நெஞ்சத்தில் நிறுத்தி வைக்கும்
காதலி பிரிந்தாலும் –இந்த
நிழல் மட்டும் நிலையாக நின்றிருக்கும்..
சில நேரங்களில் கூர்கொண்ட கத்தியென
கிழித்து விடும் நெஞ்சத்தை… அங்கே
வாழ வைப்பதும் நிழல்தான்
வீழ வைப்பதும் நிழல்தான்….

ஒளியினால் பிறக்கும்
ஒளிபோயின் இறக்கும்
வழி காட்டிச் சென்றால் சிறக்கும்-கொடும்
வழி நடந்தால் உன்னையே பழிக்கும்…

விழிப்பாய் மானுடா _உன்
மொழி காக்கப் புறப்படு…..
மொழியின் பின்னால்
நிழலெனத் தொடர்ந்திடு
மொழியது வீழ்ந்தால்
வீழ்வதும் நீதானே………

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (8-Apr-24, 6:10 pm)
பார்வை : 81

மேலே