காமெல்

பெண்களின் பின்புறத்தை பார்த்தே  (ஆடையால் மூடப்பட்டது) அவர்தம் குணாதிசயங்கள்,எதிர்காலத்தை எல்லாம் எப்படி என்னால் ஓரளவிற்கு மேலும் கூடுதலாக கணிக்க முடிகிறது?

இந்த மாதிரியான விசேஷ சக்தி வேறு யாருக்கும் உண்டா? இருக்குமா? என நான் எனக்குள் யோசித்து கொண்டிருக்கும்போது அவள் வந்தாள்.

என்னுடன் நெருங்கி பழகும் பலரிடம் இந்த கணிப்பு பலிப்பது இல்லை என்பதையும் இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும். ஆனாலும் ஆய்வுகள் தொடர்கின்றன.

வந்தவள் ஒரு காகிதத்தை நீட்டினாள்.

ஒரு சிசு கொலை செய்யப்பட்ட செய்தியை அடிப்படையாக கொண்ட வழக்கு பற்றிய தகவல்கள்...

ஒரு ஆண். ஒரு குழந்தை. தவழும் பருவத்தினது.

வீறிட்டு அழுகிறது. அந்த ஆண் முதலில் அந்த அழுகையின் தாக்கத்தில் துணுக்குறுகிறான்.

அவனால் அந்த அழுகைக்கு எந்த காரணமும் கண்டறிய முடியவில்லை.

குழந்தைகளுடன் கொள்ள வேண்டிய வாஞ்சையான உறவுகள் எதுவும் அவனுக்கு சித்தித்தது இல்லை.

குழந்தைகளுக்கும் அவனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

அவனது தொழிலில் குழந்தைகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. (கோவில் வாசலில் ஊதுபத்தி, திரி, எண்ணெய் வியாபாரம்)

இரைச்சல் மிக்க சந்தடிகளில் வாழவும், தொழில் செய்யவும் விதிக்கப்பட்ட ஜீவன் அவன்.

இரைச்சலின் முறுமுறுப்பும் அதே இரைச்சலின் கொதி கொதிப்பும் புரிந்து கொண்டவன் அவன்.

அவ்விரவில் குழந்தையின் அழுகை அவனுக்குள் கலவரமூட்டியது.

சற்றே இருள் நேரம்.

மந்தமான வியாபாரம் நடந்த நாள்.

அவன் படுத்திருந்த கட்டிலுக்கு கீழே கால் வைக்க முடியவில்லை. கொசுக்கள் பயங்கரமாக கடித்தன. (கொசு எப்படி கடிக்கும்?)

திண்ணையில் வெட்டியாக இருப்பவர்கள், கட்சிக்கான வெள்ளை வேட்டி  கோஷ்டிகள், இன்ன பிற சமூக புழுக்கள் எல்லாம் எப்படியோ அன்றாடங்களை வென்று கொண்டிருக்கும்போது தான் மட்டும் ஏன் இப்படி சூடம் திரி பத்தி இவற்றோடு? இதுவெல்லாம் புரட்சிக்கு வித்திட வேண்டிய காரணங்கள் இல்லையா என்று அவன் தன்னை முன்வைத்து இந்த சமூகத்துக்காக சிந்தித்தான்.

சிந்திக்கும்போது தன்னுடைய இரண்டு காலையும் (கால்களையும்?) கட்டிலுக்கு மேல் உயர்த்தி வைத்து கட்டி இருந்த லுங்கியால் கால்களை மூடிக்கொண்டு படுத்தான். அப்போதும் ஆங்காரம் மிக்க ரீங்காரத்துடன் கொசுக்கள் அவனை 'க'   'க'   'க'.....

அந்த இரைச்சல்தான் அவனுக்கு பொறுக்க முடியவில்லையாம். கூடவே அழும் அந்த குழந்தைக்கு என்ன செய்வது என்றும் அவனுக்கு தெரியவில்லையாம்.

எழுந்து நின்றவனுக்கு பசி காதை அடைத்தது. காதின் அடைப்பை துளைத்துக்கொண்டு "மாரீயம்மா....மா...மா... மாரீயம்மா" இரைச்சல் கேட்டது.

ஒட்டுமொத்த மனிதர்களின் ஏதோ ஒரு துயரத்தின் பிலாக்கணம் அது. கடும் வேதனை அது. பசி அது. மனிதர்களுக்கு மட்டுமின்றி கொசுக்களுக்கும் அதுதான் என்று அவன் முடிவு செய்தான்.

தரையில் படுத்து சின்னஞ்சிறு கை கால்களை நீட்டி மடக்கி விரைத்து விரைத்து அழும் அச்சிசுவின் வாய் எங்கே என பார்த்தான்.

அவன் வலது காலை முடிந்தவரை நெஞ்சு அருகில் உயர்த்தி இறுக்கி வலு ஏற்றியதும் அதற்கு எப்படியோ விசேஷ பலம் கிடைத்திருந்தது.

சிசுவின் வாய் நோக்கி எந்த நடுக்கமும் இல்லாமல் வேகமாக ஓங்கி இறக்கி முடித்ததும்...

பெரிய தேங்காய் தொப்பென்று விழுந்தால் ஒரு சப்தம் கேட்குமே, அது கேட்டது.

குருதியில் மூளை மிதந்தது.

அந்த ஊரின் நான்கு தெருக்களுக்கு அப்பால் இந்த மரணம் பற்றிய பேச்சும் இல்லை, அதுகுறித்து எந்த பதட்டமும் இல்லை.

பெரும்பான்மையோர் தொலைக்காட்சி பேப்பரில் பார்த்து படித்து அறிந்து கொண்டதுதான் மிச்சம்.

கொன்றவன், இறந்தது இந்த இரண்டின் மீதும் எந்த அக்கறையும் காட்ட முடியாத அளவுக்கு ஏதேதோ இரைச்சலில் சிக்கி கிடந்தனர் அவ்வூர் மக்கள்...

அவ்வூரிலேயே அப்படி என்றால்? தமிழகம், இந்தியாவில் என்ன அதிர்வை உண்டாக்க போகிறது?

விசாரணை நடந்தது.

வல்லியல் என்று எதுவும் இல்லை என்பதை அறிக்கை சொன்னது.

ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டதற்கு கொசு கடித்தது தாங்க முடியவில்லை என்பதாலும் பசித்து கொண்டே இருந்ததாலும் என்பதை தவிர வேறு எதையும் அவனுக்கு சொல்ல தெரியவில்லை.

அவனை வக்கீல்களும் கை விட்டனர். தூக்கு தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆயுள் தண்டனை கிடைத்தது. குழந்தையின் பெற்றோர்களுக்கு டீவிக்காரர் மைக் முன்னே மூன்று நிமிடங்கள் ஒப்பாரி கலந்து புலம்பி பேச வாய்ப்புகள் கிடைத்தன.

அத்தோடு முடிந்தது.

போலீஸ் ஸ்டேஷன் போனால் வழக்கு கோர்ட்டில் இருப்பதால் அங்கேதான் பரிகாரம் தேட வேண்டும் என்று கூறி அனுப்பி விட்டனர்.

தாயும் தந்தையும் விதம் விதமான சபதங்கள் போட்டனர். அதில் ஒன்று, தேய்ந்த வழக்கில் சொல்லப்படும் "சுப்ரீம் கோர்ட் போவோம்" என்பது!

அவர்களின் மற்ற சபதங்கள் எல்லாம் கிட்டத்தட்ட சாபங்கள் போல்தான் என்பதால் அதை நாம் தவிர்த்துவிட்டு மேலே செல்வோம்.

ஓரிரு தினங்களில் அப்பெற்றோரை அத்தெருவினரும் சொ.பந்தங்களும் கைவிட்டு தத்தமது இரைச்சலை போக்கிக்கொள்ள தம் பிழைப்பை பார்க்க சென்றனர்.

நாளடைவில் அப்பெற்றோரும் நடவு வேலைக்கு சென்றதுக்கு காரணம் அதே இரைச்சல்தான்...

இந்த இடத்தில் நிறுத்திய அவள் உண்மையில் யார் குற்றவாளி என கேட்டாள்.

தெரியவில்லை. மெர்சோவை கேட்டால் சொல்வான் என்றேன்.

ஆல்பர் காம்யூ?

நோ. காமெல் தாவூத் என்றேன்.

அவள் எழுந்து சென்று புத்தக ரேக்கில் தேட ஆரம்பித்தாள்.

பின்குறிப்பு1: அவனுக்கு இப்போது இரைச்சல் கேட்பது இல்லை. நல்ல வேப்பமரத்தின் காற்று வீச மூன்று நேர உணவும் கிடைத்து விடுகிறது. நல்ல நலமாக இருக்கிறான்.

பின்குறிப்பு2: ரேக்கில் புத்தகம் தேடும் நான் அவள் பின்புறத்தை ஆராய தொடங்கினேன்.


==========================

எழுதியவர் : ஸ்பரிசன் (21-Apr-24, 10:33 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 17

மேலே