பொலிவூட்டு

பொலிவூட்டு...!
29 / 05 / 2024
ஒப்பனை போட்டு வாழ்வை
ஒப்பேத்தும் அல்ப மானிடனே...
உன்
முகமூடிக்குள் எத்தனை முகங்கள்?
மூடிமறைத்த எத்தனை மர்மங்கள்?
முக்காடுபோட்ட எத்தனை அதர்மங்கள்?
காட்சிக்குத் தகுந்தாற்போல்
இடத்திற்குத் தகுந்தாற்போல்
ஆளுக்குத் தகுந்தாற்போல்
பச்சோந்தியாய் நிறம்மாறும்
பச்சையாய் குணம் மாறும்
எத்தனையெத்தனை முகபாவங்கள்?
அத்தனையும் சுயநலத்தின்
கண்ணாடி பிம்பங்கள்.
முகமூடிக்குள் மறைந்து கிடைக்கும்
ஆழ் மனதில் புதைந்து கிடைக்கும்
அழுக்குகளும் அவலங்களும்
யார் அறிவார்? என்கின்ற
குருட்டு தைரியம்தானே இப்படி
கடிவாளம் இல்லா குதிரையாய்
அலைகிறாய்.ரகசியம் காத்து
அல்லாடுகிறாய்.
உன்னோடு மடிந்து போகும்
உண்மைகள் தெரியாதவரை
நீ தப்பித்தாய்
உயிரோடு இருக்கும்போது
உன் முகமூடி கிழிந்துவிட்டால்
உன் நிலைமை என்னவென்று யோசி.
முடிந்தவரை உண்மையை சுவாசி
உள்மனசுக்கு வெள்ளையடி
முகமூடியை களைந்துவிட்டு
முகத்தில் புன்னகையால்
பொலிவூட்டு...!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (29-May-24, 7:49 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 28

மேலே