உலக மிதிவண்டி தின கவிதை

#உலக_மிதி_வண்டி_தினம் பற்றிய
#உருக்கமான_கவிதை
#ஆக்கம்_கவிதை_ரசிகன்_குமரேசன்

மிதிவண்டியை
ஏழை
'வீதியில்' ஓட்டுகிறான்...
பணக்காரன்
'வீட்டுக்குள்' ஓட்டுகிறான்....

குதிரையும்
மிதிவண்டியும் ஒன்று...
குதிரையை
'அடக்கியவன்' தான்
சவாரி செய்ய முடியும்
சைக்கிளைப் 'பழக்கிவன்'தான்
சவாரிப் பண்ண முடியும்....

இதனுடன் பழகினால்
'ஓட்டுவதற்கு'
கற்றுக் கொள்ள மட்டுமல்ல
'வாழ்வதற்கு'
பெற்றுக் கொள்ளவும் முடியும்..

'ஒவ்வொரு படியாக'
முன்னேறித்தான்
இதன் சிம்மாசனத்தில்
அமர முடியும்....
'ஒரே ! படியில்'
இதன் மீது உட்கார்ந்தவன் உலகத்தில்
ஒருவரும் இல்லை....

'அளவோடு
அறிவு ' இருந்த காலத்தில்
இது 'அமுதமாக' இருந்தது
'அளவுக்கு மீறி அறிவு' இருக்கும்
இந்தக் காலத்தில்
'நஞ்சாகி' விட்டது...

இதை 'ஓட்டிய' போது
'பறவையாக' வாழ்ந்தோம்
இதை 'ஒதுக்கியப்' போது
'அழுகியப் புழுவாக' வாழ்கிறோம்..

இதைக்
'காயம் படாமல்'
'கற்றவர் இல்லை '
இதில்
விழாமல் ஏறியவர் இல்லை
ஓ..... ?
'வாழ்க்கை பாடத்தை'
போதிக்கின்றதோ....?

எறும்பு போல்
இதுவும்
'சேமிப்பின்' அவசியத்தை
நன்கு உணர்ந்திருந்தது......
நாம் தான்
'ஆடம்பரத்திற்கு'
ஆசைப்பட்டு
'பெட்ரோலை'க் காசு கொடுத்து வாங்குவதோடு மட்டுமல்லாமல்
'விபத்துகளையும்' வாங்குகிறோம்...

மிதிவண்டி
இருந்திருந்தால்
போக்குவரத்து காவலர்களிடம்
இருசக்கர வாகனத்திற்காக
'லஞ்சம் வாங்கும் பழக்கம்' இருந்திருக்காது.......

மிதிவண்டி இருந்த போது
காற்று
'ஆரோக்கியமாக' இருந்தது
மோட்டார் வண்டி
வந்த போது
காற்று
'ஆஸ்துமா நோயாளியாக'
இருக்கின்றது......

இது வெறும்
கம்பிகளால் மட்டும்
உருக்கப்பட்டதல்ல தன்னம்பிக்கையாலும்
உருக்கப்பட்டது...

நீர்படாத இடத்திலிருந்தும்
மிதிவண்டி
'துருப்பிடிக்கக்' காரணம்....
குழந்தை பருவத்தில்
தன்னை மிதித்துக்கொண்டாடிய
பிஞ்சு பாதம்
இளமை பருவம் வந்ததும்
ஒதுக்கி விட்டதே !
திரும்பவும் அந்தப் பாதம்
எப்போதும் மிதிக்குமோ ? என்று
ஏங்கியதால் வடிந்த'க் 'கண்ணீரில்'
அது துரு பிடித்திருக்கிறது....

சிலர்
அதிலுள்ள தூசுக்களை
துடைத்து துடைத்து
வைத்திருக்கின்றனர்.....
அதில் ஒட்டி இருக்கும்
தன்னுடைய
"பால்ய பருவத்தின்
நினைவுகளை"
துடைக்க முடியாமல் போனதால்....

தங்கள் வீட்டின் உள்ளே !
அல்லது வெளியே !
ஏதேனும்
'ஒரு மிதிவண்டி ஒன்று'
நீண்ட நாட்கள்
ஓட்டாமல் நின்றிருந்தால்
உடனே ! தயவுசெய்து
ஒரே ஒரு முறையேனும்
'மிதித்து ஓட்டி விடுங்கள்.....!'
"அதன் வலி குறைந்து
சுகம் பெறட்டும்.......!
சுமை குறைந்து
அமைதி அடையட்டும்....!"

♥ அனைவருக்கும்
உலக மிதிவண்டி தின
நல்வாழ்த்துக்கள் ♥

இவண்

கவிதை ரசிகன் குமரேசன்

எழுதியவர் : கவிதை ரசிகன் (3-Jun-24, 4:04 pm)
பார்வை : 14

சிறந்த கவிதைகள்

மேலே