காலம் இருந்தால்

வண்ணங்களால் இழைக்கப்பட்ட
எண்ணக் கோலங்களை
சின்னச் சின்னக் கண்ணிகளில்
பின்னிப் பின்னிக்
கூறலாம் என்ற
சிந்தனை எழுந்தது

பிள்ளைப் பிராயத்தின்
நினைவுகளை நாம்
வெள்ளைப் புத்தககம்
எனக் கொள்வோமாயின்
நீலக் கோடுகளை
நான்கு ஓரங்களிலும்
எல்லைகளாக வரைந்து
இடையினில் இருக்கும்
வெள்ளை வெளேரெனும்
திரையினில் தோன்றி
கள்ளமின்றி சிரிப்பது
கருவண்டு போன்ற
கண்கள் மட்டுமே.

அந்தக் கண்கள்
அந்தரத்தில் சுழன்று
மந்தகாச வெயிலின்
மஞ்சள் நிறத்தில்
பச்சை சுவர்களுக்குப்
பின்னால் பெய்யும்
முத்து மழையினை
பவளம் கோத்த
பாடல்களால் பாட
ஊதா நிறத்து
சங்கு புஷ்பங்கள்
தோதாய் நின்று
தூது சொல்லின

சிவப்பு மையினால்
தீட்டிய துணியால்
உவப்பு மிகுதியால்
சுருண்ட முடியதைக்
கட்டி இருந்த ஒரு
சுட்டிப் பெண்ணாள்
ரோசாப் பூவொன்றை
சால்சாப்பு செய்து
செருகி இருக்க
பச்சைக் காம்பது
கருப்பு மயிரினில்
கொம்பேறி மூக்கனின்
குட்டியை போல
எட்டிப் பார்க்கும்

யாரிவள் என்று
மரம் போலுயரும்
காரியக்கார கயவனாகக்
கேள்வி எழுந்து
தோலுரித்து நிற்கும்
அந்த வேளையில்

பிள்ளைப் பிராய
ஏடுகள் முடிந்து
உள்ளம் கொள்ளை
போனது உணர்ந்து
காதல் காடுகள்
வந்து நிற்கும்

அடர் வனம் அதிலே
இடம் எது?வலம் எது?
வால வயதின்
ஏடுகள் அவற்றை
காலம் இருந்தால்
வடிக்கலாம் பின்னே...

தா. ஜோசப் ஜூலியஸ்,

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ், (6-Jun-24, 2:36 pm)
சேர்த்தது : T. Joseph Julius
Tanglish : kaalam irundaal
பார்வை : 95

மேலே