பிஸ்கட் சாப்பிட குட்டி புலி

புலிகள் நடமாடுகின்றன என்று சொல்லப்படுகின்ற காடுகள், இந்தியாவின் பல பாகங்களில் உள்ளன. மேற்கு வங்கத்தில் சுந்தர்பர்ன் காடுகள், நைனிதாலில் ஜிம் கார்பெட் பார்க் போன்ற இடங்களில் அவ்வப்போது புலிகள் சில சுற்றுலா பிரயாணிகளுக்கு தென்படுகின்றன. ஆனால், இன்னும் வேறு இடங்களில், புலிகளை காட்டுவோம் என்று கூறி, பல சுற்றுலா நிறுவனங்கள் சுற்றுலா பிரயாணிகளை கவர்ந்து இழுக்கின்றன. ஆனால், காட்டுக்குள் சென்று திரும்புகையில் அநேகமாக மான், காட்டு எருமை, பறவைகள் போன்றவைகளைத்தான் அவர்கள் பார்த்திருக்க முடியும்.
இதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய நான், கர்நாடகாவில் உள்ள நாகர்ஹோலே புலி காப்பகம் சென்றிருந்தேன். நான் எனது சக சுற்றுலா பயணிகளுடன் இந்த இடத்திற்கு சென்று வந்தபோது, நான் கண்டது குரங்கு, மான், பறவைகள் இவ்வளவே. இதனால், நான் மட்டும் அடுத்த நாள் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல், ஒருவரின் உதவியுடன் அவரது பைக்கில் இந்த புலிகள் காப்பகம் சென்றேன். எனது அதிருஷ்டம், ஒரு மணி அலைந்து மான்கள், ஓரிரு காட்டு பன்றிகள், காட்டு எருமைகள் இவைகளை பார்த்துவிட்டு, இன்றும் ஒரு புலியும் கண்ணில் தென்படப்போவதில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, ஒரு சிறிய புலி (வயசு, மூன்று மாதம் இருக்கும் என்று நினைக்கிறன்) எங்கள் கண்ணுக்கு தென்பட்டது. சுற்றி முற்றி பார்த்துவிட்டு, என்னுடன் வந்தவர் அந்த புலிக்கு அருகில் மெதுவாக சென்றார். நானும் உள்ளே பயந்துகொண்டு, வெளியே நடந்துகொண்டு அவர் பின்னால் சென்றேன். அவரிடம் பெரிய ஈட்டி போன்று ஒரு ஆயுதம் இருந்தது. பெரிய வலுவான உயரமான இரும்பு வேலி தடுப்பு ஒன்றுதான் எங்களுக்கும் அந்த குட்டி புலிக்கும் இடையில். குட்டி புலியின் அருகில் சென்றவுடன், இருவரும் அந்தப்பக்கமும் இந்த பக்கமும் பார்த்தோம். ஒரு வேளை அம்மா புலி எங்களை பார்த்துவிட்டால், நாங்கள் இருவரும் எங்கள் குடும்பத்தை மீண்டும் வாழ்நாளில் பார்க்க முடியாது எனும் பெரிய பயம் இருவருக்கும் வந்தது. நான் என்னை அறியாமலேயே, என் முதுகில் வைத்திருந்த பையிலிருந்து, ஒரு பாக்கெட் மேரி பிஸ்கட் எடுத்து, அந்த பாக்கெட்டை திறந்து அதிலிருந்து நான்கைந்து பிஸ்கட்களை அந்த குட்டி புலிக்கருகில் தூக்கி எறிந்தேன்.
என்ன ஆச்சரியம், அந்த குட்டி புலி முதலில் அதை அப்படி இப்படி என்று மோப்பம் பார்த்துவிட்டு, நகர ஆரம்பித்தது. உடனேயே, என்ன தோன்றியதோ, மீண்டும் பிஸ்கட் பக்கத்தில் வந்து, அதில் ஒன்றை எடுத்து கடித்தது. அடுத்த நிமிடம் மீதி இருந்த நான்கு பிஸ்கட்களையும் கவ்வி தின்றுவிட்டது. நாங்கள் இருவரும் மெய் சிலிர்த்து போனோம் (உடல் விரைத்து போனோம் என்றால் நன்றாக இருக்காது). நான் மீதியிருந்த பிஸ்கட்களையும், தூக்கி அதன் அருகில் வீசினேன். அதையும் அந்த குட்டி புலி சாப்பிட்டுவிட்டது. பின்னர், மெல்ல அது எங்களது அருகில் வந்தது.
எங்கள் இருவரையும் ஐந்து செகண்ட் பார்த்துக்கொண்டே இருந்தது. பிறகு, தொண்டையை கனைத்துக்கொண்டு, "நீங்கள் இருவரும் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்" என்று தமிழில் கேட்டது. என்னுடன் இருந்தவருக்கு கன்னடம்தான் தெரியும். எனவே, அந்த புலி நிச்சயம் என்னுடன்தான் உரையாடியது. நான் அதிர்ந்து போய்விட்டேன். பக்கத்தில் இருப்பவரிடம் சொல்லி என்னை லேசாக அந்த ஈட்டியால் குத்தச்சொன்னேன். அவர் கொஞ்சம் நன்றாகவே என்னை முதுகில் ஈட்டியால் குத்தினார். அதே இடத்தில என் முதுகிலிருந்து ஐந்து சொட்டு ரத்தம் சொட்டியது. அவர் பயமின்றி, ஒரு துணியை கிழித்து அதை என் முதுகுக்கும் வயிற்றுக்கும் சேர்த்து கட்டிவிட்டு "இனி ஒன்றும் பிரச்னை இல்லை" என்று ஆங்கிலத்தில் கூறினார். நான் கொஞ்சம் என்னுடைய சுய நிலைக்கு வந்து, சிறிதே பயம் தணிந்து "நான் சென்னையிலிருந்து தான் வருகிறேன். உனக்கு எப்படி தமிழ் தெரியும்?" என்று கேட்டவுடன் அந்த புலி லேசாக சிரித்தது. "நீ கொடுத்த பிஸ்கட் சாப்பிட்டவுடன் எனக்கு தமிழ் தானாகவே வருகிறது. இன்னும் ஒரு பாக்கெட் இருந்தா கொடு, இந்த பிஸ்கட் நல்ல டேஸ்ட்டா இருக்கு." என்றது.
நல்ல வேளை என்னிடம் இன்னொரு மேரி பிஸ்கட் பாக்கெட்டும் இருந்தது. அதை எடுத்து பிரித்து பிஸ்கட்களை அதற்கு போட்டேன். அது பிஸ்கட்களை சுவைத்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் நான் " ஆமாம், இங்கே பல சுற்றுலா பிரயாணிகள் வந்து பார்த்துவிட்டு, புலியும் இல்லை எலியும் இல்லை " என்று ஏமாற்றத்துடன்தான் செல்கிறார்கள். அது ஏன் அப்படி? இந்த காப்பகத்தில் நீங்கள் (புலிகள்) பலர் வசிக்கிறீர்கள் தானே?" என்று கேட்டபோதுதான் அந்த சுட்டி புலி கீழ்வரும் பதிலை எனக்கு தந்தது.
"என்னைப் பொறுத்தவரை (அந்த குட்டி புலியைப் பொறுத்தவரை), குரங்கு மான் பறவைகள் என்று இருந்தால் பிஸ்கட் பழங்கள் பட்டாணி என்று எதையாவது கொஞ்சம் கொடுக்கிறார்கள் (அவர்கள் சாப்பிட்டது போக மீதமிருந்நால்). புலி ஒன்று தோன்றினால், கையில் உள்ள தின்பண்டங்கள் தானாகவே அவர்கள் கையிலிருந்து உதிர (உதற) ஆரம்பித்து விடும். இதனால் எந்த புலிக்கும் ஒரு பிஸ்கட் பழம் பட்டாணி கூட கிடைக்காது. உங்களை பார்க்க எவ்வளவு தூரம் நாங்கள் வருகிறோம். இப்படி எதுவுமே நீங்கள் எங்களுக்கு சாப்பிட கொடுக்காததால், மனிதர்கள் வந்தால், அவர்களை நாங்கள் பார்க்க வருவதில்லை. அப்புறம் உங்களுக்கு எப்படி புலிகள் தெரியும்?"
அதே நேரத்தில் தூரத்தில் ஒரு பெரிய புலி வருவது தெரிந்தது. இருவரும் பதறியடித்துக்கொண்டு பைக்குக்கு விரைந்தோம். எங்கள் வண்டி கிளம்பியவுடன், அந்த சின்ன புலி "இதோ பாரு, இந்த ஒரே பிஸ்கட், இதை என் அம்மாவுக்கு கொடுக்கப்போகிறேன். அதை சாப்பிட்டுவிட்டு என் அம்மா உன்னுடன் கொஞ்சம் தமிழில் பேசுவாள். கொஞ்சம் வெயிட் பண்ணு" என்று சொன்னது என் காதில் லேசாக கேட்டது. அதற்கு அடுத்த செகண்ட், என் ஈட்டி நண்பர் நூறு கிலோமீட்டர் வேகத்தில் அடுத்த பத்து நிமிடத்தில் அந்த காட்டிலிருந்து விரைந்து, என்னுடன் மறைந்தார்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (17-Jul-24, 11:43 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 83

சிறந்த நகைச்சுவைகள்

மேலே