டோக்கன் நம்பர் 49

பேரறிவாளன் ஒரு தியான பயிற்சிக்கு சென்றார். பதிவு செய்வதற்கான டோக்கன் நம்பர் 49, அவருக்கு வழங்கப்பட்டது. அந்த டோக்கனின் இரண்டு பக்கமும் எண் 49 குறிப்பிடப்பட்டு இருந்தது. பேரறிவாளன் இதைப் பார்த்து விட்டார்.
பதிவு எண் 48 முடிந்தவுடன் 49 டோக்கன் பதிவுக்கு வரவும் என்று அழைக்கப்பட்ட போது, பேரறிவாளன் அந்த அழைப்பை மிகவும் கவனமாக கேட்டு விட்டு அவர் இருக்கையை விட்டு எழாமல் நிதானமாக அமர்ந்திருந்தார்.
ஒரு மணி நேரம் கழித்து டோக்கன் எண் 98 பதிவுக்கு வரலாம், என்று அழைக்கப்பட்ட போது, இருவர் பதிவு கவுன்டருக்கு விரைந்தனர்.
பதிவு செய்பவர் டோக்கன் எண் 98ஐ வாங்கிக் கொண்டு அவர் பெயரை கேட்டார். அவர் ' பொறுமையாளன் ' என்று பொறுமையுடன் கூறினார். உடனே பக்கத்தில் இருந்த பேரறிவாளன் "ஐயா எனது பதிவு எண்ணும் 98. இதைப் பாருங்கள்" என்று தனது டோக்கனை கவுண்டரில் காட்டினார்.
கவுன்டர் நபர் அதை பார்த்து விட்டு "ஐயா, உங்கள் டோக்கன் எண் 49. 98 இல்லை " என்றார். உடனே பேரறிவாளன்" நீங்கள் டோக்கனின் ஒருபுறம் தான் பார்த்தீர்கள். பின்புறமும் பாருங்கள் " என்றார். கவுன்டர் நபர் எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் "பின் புறமும் 49 என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.
பேரறிவாளன்" முன் பக்கம் 49, பின் பக்கம் 49. ஆக மொத்தம் 98 தானே ஆகிறது. இப்ப சொல்லுங்க. எனக்கு தானே நீங்கள் பதிவு செய்ய வேண்டும் ".
கவுன்டர் நபர் பேரறிவாளனை பத்து வினாடிகள் உற்று நோக்கி விட்டு" உங்கள் பெயர் என்ன?" என்று கேட்டார். பெயரை அறிந்தவுடன் ' ஐயா, நான் பல பெயர்களை பார்த்திருக்கிறேன். பெயருக்கும் அந்த மனிதருக்கும் துளியும் பொருத்தம் இருக்காது. ஆனால், நீங்களும் உங்கள் பெயரும், ஆஹா, எவ்வளவு கனகச்சிதமாக இருக்கிறது. உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. " என்றார்.
பேரறிவாளன்" ஏன், நீங்கள் வீட்டில் மாடு வளர்க்கிறீர்களா? " என்று கேட்டவுடன் கவுண்டர் நபர் அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓட்டம் எடுத்தார்.
டோக்கன் நபரைத் துரத்திக் கொண்டு டோக்கன் எண் 49 ம் 98 ம் விரைந்தனர்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (14-Jul-24, 3:57 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 69

மேலே