காத்திருப்பு

நேரிசை வெண்பா :

ஆனிழலீன் தாய்தந்தை நீத்தபின்சூல் கொள்தையற்
பானிலவன் மீணாட்குப் பார்துயிலாள் - வேனிற்கால்
பட்டுலரும் வேருயிர்சூழ் பைந்நிறமில் ஓரிறும்பின்
பொட்டற்கண் நுங்குதிர் போந்து.

ஆனிழலீன் - ஆல் நிழல் ஈன், ஆல் - ஆலமரம், ஈன் - தருதல், நீத்த - நீங்கிய, சூல் - கருவுற்றநிலை, தையல் - பெண், பானிலவன் - பால் நிலவன், மீணாட்கு - மீள் நாட்கு, நாட்கு - நாளுக்கு, பார் - உலகம், துயில் - தூக்கம், கால் - காலம், வேருயிர் - தாவரங்கள், பைந்நிறம் - பச்சைநிறம், இல் - இல்லை, இறும்பு - குறுங்காடு, பொட்டல் - வறட்சியான நிலம், போந்து - பனைமரம்.

பொருள் :

கடுமையான வெயில் காலத்தில் பசுமை நிறமில்லாக் குறுங்காட்டின் பொட்டலான இடத்தில் தன்னைச் சுற்றியுள்ள செடிகொடி மரங்கள் எல்லாம் பட்டு உலர்ந்து கொண்டிருக்கும் பொழுதிலும் பசுமையுடன் காய்த்த நுங்கினை உதிர்க்கும் நிலையில் நிற்கும் ஒரு பனைமரம். அதுபோல் ஆலமரமாக நிழலினைத் தந்து காத்துநின்ற தாயையும் தந்தையையும் பிரிந்து பாலொளி வீசும் நிலவின் குளிர்ச்சி பொருந்திய காதலனைக் கணவனாக்கியவள் பொருள்தேடிச் சென்றவன் திரும்பும் நாளுக்காக இவ்வுலகில் சரியாகத் தூங்காது கருவுற்ற நிலையில் உயிர்ப்போடு காத்திருக்கிறாள்.

(கஉ/அ/உ0ருரு)

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

படம் : ஓவியர் இளையராஜா.

எழுதியவர் : இதயம் விஜய் (29-Aug-24, 9:36 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 558

மேலே