தாத்தா பாட்டிகளுக்கு சமர்ப்பணம்
தாய் தந்தையும் தாண்டி
பேர பேத்திகள் பலபெற்று
முதிர்வுற்று தளர்வுற்ற- நம்
தாத்தா பாட்டிகளுக்கு சமர்ப்பணம்!
தாத்தா பாட்டி சொன்ன கதைகள்
தந்ததே வாழ்வியல் நிறைகள்
தடையின்றி நீங்கிய குறைகள்
தரவில்லை பிரிவினை கறைகள்!
நான்கு மணிக்கே விழித்தார்கள்
ஐந்து மணிக்கே உழைத்தார்கள்
ஆறு பிள்ளைகளை வளர்த்தார்கள்
ஏழு ஜென்மமும் மறந்திடலாகாதே!
மரங்கள் சூழ வீடு கட்டி
மரநிழலில் தொட்டிலும் கட்டி
மரக்கிளை வேர் தண்டில்
கைமருந்து பல தந்தவர்களன்றோ!
பக்குவமாய் உடை உடுத்த
பட்டணம் சென்று கல்வி கற்க
பணம் காசு சேர்த்து வைக்க
பக்குவமாய் கற்றுத் தந்தவர்களன்றோ!
தளர்ந்துப் போன உடலானாலும்
உலர்ந்துப் போன உணர்வானாலும்
பேரன்/பேத்திக்கு மட்டும் கிடைத்த
பாசங்களும் முத்தங்களுமன்றோ?
இதயங்கள் இறுகின போது
இருண்டு போன வாழ்க்கையின்போது
இன்னல் மிக்க நிகழ்வுகளின்போது
இயன்ற துணை வந்தவர்களன்றோ!
அரிக்கேன் விளக்கு காலத்திலே
பெருகிய அடைமழை-யிலும்
பரவிய நோய் தொற்றிலும்
பாதுகாத்த புனிதர்களன்றோ!
கிராமத்து ஓலை வீட்டினில்
மாட்டு சாணம் மெழுகி
சுண்ணாம்பு பூசிய சுவர்களில்
ஏதும் ஒழுகவில்லையன்றோ?
அழகான திண்ணைக் கட்டி
அங்கலாய்ப்பு கதை பேசி
அரவணைப்பு பல செய்து
அயலாரை தங்க வைத்தாரன்றோ!
அறிவியல் அற்ற உலகையே
அனுபவ அறிவால் வென்றவர்கள்
அவர்கள் பெற்ற உடல்நலம்
இனி நமக்கு அரிதானதே!
தள்ளாடி நடமாடும் ஐனம்
அவர்கள் தடுமாறும் கணம்
அவர்கள் இதயம் கனக்கும்
மனம் மரணமென துடிக்கும்
நரை கண்ட பின்னரும்
வலி கொண்ட தேகத்திற்கு
வழி சொல்ல உறவுகள்
வழிவகை இல்லாமல் போனதேனோ?
கற்றவர்களும் கூட கல்மனதாய்
பெற்றவர்களுக்கு மனம் உவந்து
உற்றவராய் இல்லாமல் போனதால்
முதியோர் இல்லம் நிரம்புமோ?
செல்ல பேரன்/பேத்தி என்று
நம்மை மடியில் கொஞ்சி
தூங்க தாலாட்டு பாடியவளை
தூக்கி தாங்கல் ஆகாதோ?
ஆயிரம் கஷ்டங்கள் வந்தாலும்
அனைத்தையும் தாங்க வைத்த
மெலிந்த அவர்கள் மேனியை
நலமோடு காக்க மறப்பதோ?
தரணியில் ஆண்டுணர்ந்த
தரமிக்க பழக்கங்களெலாம்
கலியுகத்தில் காணாமல்
போனது இன்று ஏனோ?
விழித்திரை மெய் தேய்ந்தும்
உழைத்திட்டே மெய்ப்பட வாழ்ந்திடும்
தாத்தா பாட்டிகளின் இழிநிலை
இனியாவது மாறுமோ?