கீதை வெண்பா 4 வது அத்தியாயம் ஞானகர்ம ஸந்நியாச யோகம் 4 பா 16 17 18 19 20

16 .

எதுகர்மம் யாதகர்மம் என்ற இரண்டில்
அதிஞா னியருமே திக்கித் திணறுவர்
ஆதலால் அவ்வசுபம் நீங்கியதோர் கர்மத்தின்
பாதையை நானோது வேன்

17 .

கர்மத்தைப் பற்றியும் நீஅறி தல்வேண்டும்
கர்மம் எதைவிலக்கு மோஅது பற்றியும்
கர்மமல் லாததெது வோவது பற்றியும்
கர்மத்தின் போக்கே தனி

18 .

காண்பான் கருமத் தினிலகர்மம் தன்னையும்
காண்பா னகர்மத்தில் கர்மம் தனையுமே
அம்மேலோன் மாந்தரிடை மேதாவி யோகியாம்
அம்மனிதன் எல்லாம்செய் தான்

கர்மம் --பிரகிருதியின் இயல்பு
அகர்மம் --- ஆத்ம சொரூபம்

19 .

யாருடைய கர்மாசங் கற்பமாசை அற்றதோ
யாருடைய கர்மாஞா னத்தீயில் சாம்பலாமோ
அம்மனிதன் பேரறிஞன் என்றுவிளித் துப்போற்றும்
நம்பெரும் ஞானியர்சங் கம்

20 .

கர்மபலன் தன்னிலே பற்றற் றவனாக
கர்மத்தை ஆத்ம திருத்தி யுடன்செய்வான்
கர்மத்தில் யாதிலும் சாரா திருப்பவன்
கர்மம்செய் தும்செய்யா தான்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Sep-24, 4:01 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 11

மேலே