தனக்கு வரும் போது

தனக்கு வரும் போது

காதில் கேட்கமுடியாத கெட்ட வார்த்தையை எதிரில் நின்ற முனியாண்டியின் மீது வீசினாள் ராசத்தி.
சொன்ன நேரத்தை தாண்டி ஐந்து நிமிடம் அதிகமாகி விட்டதாம், இதற்கும் காலை வெயில் கூட இன்னும் எட்டி பார்க்கவில்லை.
தேங்காய் பறித்து போடவேண்டும், இவன் தான் கொஞ்சம் வெளிச்சம் வரட்டும், மரத்தில் பூச்சி புழு இருந்தால் தெரியும் என்று கொஞ்சம் மெதுவாக வந்தான். அதற்கு இந்த பேச்சு ராசாத்தியிடம் இருந்து.
இதற்கும் அவன் மெதுவாக வந்த காரணத்தை சொல்லியும் அவள் காதில் வாங்காமல் அவனை வசை பாடியபடியே இருந்தாள்.
இவனிடம் மட்டுமல்ல ராசாத்தியிடம் “வாங்கி கட்டாதவர்களே” இல்லை, அவளிடத்தில் யாரும் நிரந்தரமாய் வேலைய செய்ய முடியாது, அவள் வயதை ஒத்த பெண்களையே அடவாடியாக பேசவும் சில நேரங்களில் கை வைக்கவும் செய்வாள்.
ராசாத்தி பழையதை மறந்து போய்விட்டாள், யாரையும் கண்டு கொள்வதில்லை. அவளின் நடவடிக்கைகளை ஊர் மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதே ஊரில் சிறிய ஓட்டு வீட்டில், தன் ஒரே மகளுடன் வசித்து கொண்டு அன்னாடம் கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தவள்தான். கணவன் என்றோ இறந்து விட்டான். மகளும் இவளுடன் கூலி வேலைக்குத்தான் சென்று கொண்டிருந்தாள்.
ராசாத்தியின் ‘நேரமோ’ இல்லை அவள் ‘மகளின் நேரமோ’ “வீட்டு வேலைக்கு ஆள் தேவை” என்று அரபு நாட்டுக்கு உறவுக்காரர் ஒருத்தர் இவளின் மகளை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார்.
அவள் போய் அனுப்பி வைத்த பணத்தின் மூலம் ராசாத்தி தோட்டமாகவும், பண்ணையாகவும் மாற்றி கூலி வேலைக்கு ஆட்களையும் நியமித்து கொண்டாள். அவள் முதலாளியாக என்று ஆனாளோ அன்றிலிருந்து அவள் நடவடிக்கைகள் இப்படித்தான் மாறி போயிருந்தது.
அன்று காலை அப்படித்தான், தன்னுடைய நிலத்தில் வேலை ஆட்களிடம் கடுமையாக பேசியபடியே நின்றவளின் அருகில் ஒரு ஜீப் வந்து நின்று அதிலிருந்து ஒருவர் இறங்கினார்.
ராசாத்தி யாரும்மா? இவளுக்கு பகீரென்றது, நானுதானுங்க
கொஞ்சம் என் கூட வாம்மா.
ஐயா தயங்கியவளிடம், சீக்கிரமா வாம்மா, விரட்டவும், இவள் முகத்தில் பய ரேகையுடன் ஜீப்பில் ஏறினாள். தன்னுடன் வேலை செய்யும் ஆட்கள் யாராவது வருவார்களா? என்று பார்க்க, அவர்களும் பயத்துடன் அப்படியே சிலையாய் நின்று கொண்டிருந்தார்கள்.
அலுவலகத்தில் அவள் எதிரே உட்கார்ந்திருந்த அதிகாரி ‘மாசாணி’ உன் பொண்ணாம்மா?
மகளின் பெயரை கேட்டதும் இவள் நடு நடுங்கி போனாள், ஐயா அது என் பொண்ணுதானுங்க.
இங்க பாரும்மா? ஒரு “செல்போனில் அவளின் பெண் கண்ணீர் விட்டபடி ஐயா என்னைய காப்பாத்துங்க, இங்க தினமும் அடி உதைதான் விழுது, ஒரு வேளைதான் சாப்பாடு கொடுக்கறாங்க, இங்க பாருங்க, தன் கை கால்களை காட்டி எல்லா இடத்துலயும் இவங்க அடி அடின்னு அடிக்கறாங்க, தயவு செய்து என்னை மறுபடி இந்தியாவுக்கு கூட்டிட்டு போக இதை பாக்கறவங்க ஏற்பாடு பண்ணுங்க, கதறி அழுகிறாள்.
அதை பார்த்த ராசாத்தி “ஐயோ மகளே உனக்கா இந்த கதி” அங்கேயே ஓலமிட்டு அழ அவர் இந்தம்மாவை கூட்டிட்டு போய் சமாதானப்படுத்துங்க, கவர்ன்மெண்டு முயற்சி செய்யுதுன்னு சொல்லுங்க.
ஊரில் ஒவ்வொருவரிடம் சென்று ஐயா என் மகளை எப்படியாவது இங்க கொண்டு வர்றதுக்கு உதவி பண்ணுங்கய்யா என்று கெஞ்சியபடி இருந்தாள் ராசாத்தி.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (9-Oct-24, 9:45 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 39

மேலே