மகளீர் தினக்கவிதை 0803 2025

புதுக்கவிதை -

பிறக்கும் யாவிற்கும் பெண்ணினமே தாயாம்
அரக்கர் தேவர் அனைத்துப் பிறப்புக்கும்
உருவம் தந்தது பெண்ணின எண்ணமே
நல்லதும் தீயதும் அவள்வகுத்த பாதையே

கல்விக்கும் படிப்பிற்கும் அவளே ஆதாரம்
உண்மையும் பொய்யையும் காட்டுபவளும் அவளே
பெண்மையை உணர்ந்த பிள்ளைகள் உலகில்
நல்லவராய் உயர்ந்து வாழ்கிறார்கள் சிறப்பில்

பெண்மைக்கு வேண்டும் நிதான பொறுமை
ஆத்திரமும் கோபமும் இருளாக்கும் வாழ்வை
அடங்காத கோபம் அழித்துவிடும் நம்மை
அதித பொறுமையும் ஆபத்தைத் தந்திடும்

பெண்களால் புவியும் பெருமையாய் சுழலுது
பெண்களின் அறிவால் அரசாங்கம் சிறக்குது
விஞ்ஞானத்தைப் பெண்கள் விரும்பி கற்பதால்
விண்ணுலகம் வசிக்கும் வாய்ப்பைப் பெற்றனர்

வாகனம் கற்றும் ஆயுதம் பழகியும்
அலையில் பயணிக்க அந்தரத்தில் மிதக்க
அறிவைத் தீட்டியே ஆற்றலைப் பெருக்கி
ஆணிலும் தீரமாய் பெண்களும் களத்திலே.

கல்வியெனும் அமிழ்தத்தை பருகிடும் பெண்களால்
வருங்காலம் பெண்களின் கட்டளையால் மாறும்
வறுமையும் சிறுமையும் வழக்கொழிந்து போகும்
வாய்ப்புகள் எந்நாளும் அவர்களுக்கு பணியுமே

இரவும் பகலும் கதிரும் நிலவும்போல
இன்பமும் துன்பமும் இறுகப்பற்றுங்கால்
ஆண்களின் துணையுடன் அதனை விரட்டுவோம்
பெண்மையையும் போற்றுவோம் ஆண்மையையும் போற்றுவோமே
– நன்னாடன் (எ) தி. புருஷோத்தமன்

எழுதியவர் : நன்னாடன் (8-Mar-25, 9:12 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 10

மேலே