நாங்களும் உங்கள் மகள் தான்............

மதியரசி, பெயருக்கு ஏற்றார் போல மதியோடு சேர்த்து குணத்திலும் சிறந்தவள். மதி குடும்பத்தில் அவள் தான் கடைக்குட்டி அண்ணன் தங்கத்திற்கும், மதிக்கும் ஒரே மேடையில் பெரு விமர்செயாக திருமணம் செய்து வைத்தார் தந்தை விநாயகம். மதி வைதேகியின் ஒரே மருமகள், வேலைக்கு செல்லும் இந்த கால பெண்.

அவளுக்கு இரு மைத்துனிகள் இருவருக்கும் திருமணமாகி குழந்தை செல்வங்களோடு மதுரையிலும், திருச்சியிலும் வாழ்கின்றனர். இல்லத்திலும் சரி அலுவலகத்திலும் சரி எதையும் யாரிடமும் எதிர் பார்க்க மாட்டாள். வீட்டில் பார்த்து பார்த்து முடித்து வைக்கப்பட்டதே குணசேகரன் உடன் இந்த திருமணம். அத்தை என்பவள் இரண்டாம் தாயாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தவளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

மதியின் அம்மா சூடாமணி அடிகடி சொல்லுவாள், நீ என்னை போல அல்லடி உன் பாட்டி போல மிகவும் பொறுமைசாலி என்று. பத்தாம் வகுப்பு வரை பாட்டியின் நிழலில் கிராமத்தில் வளர்ந்ததவள் பாட்டியை பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ பெரியவர்களிடம் அன்பும் அடக்கமும் கொண்டவளாய் இருந்தால் மதி. தன் அத்தை வைதேகி என்ன சொன்னாலும் மறு பேச்சின்றி செய்வாள் இருந்த போதும் மதி வருந்தும் படி ஏதேனும் வாய் விடுவாள் வைதேகி.

மனதின் காயங்களை கணவனிடமும் சொல்லாமல், பெற்றோருக்கும் தெரியப்படுத்தாமல் தானே தனக்குள் வருந்துவாள் தன்னை புரிந்தது கொள்ளாத தன் இரண்டாம் அன்னையை எண்ணி. தன் தாய் வீட்டில் இருக்கும் போது வேலைக்கு சென்று வீடு திரும்பும் போது மதியின் அம்மா சூடாமணி சுட சுட தேநீரோடு ஏதேனும் சிற்றுண்டியும் எடுத்து வந்து கையில் தருவாள்.

புகுந்த வீட்டில் மதிக்கு மட்டுமல்ல எந்த பெண்ணிற்கும் இந்த வசதி கிடைப்பதில்லை அத்தை என்பவள் இன்னொரு தாயாக மாறும் வரை. மதியும் அத்தையிடம் இதை எல்லாம் எதிர் பார்க்கவில்லை. அவள் ஏங்கியது அத்தையின் அன்பான வார்த்தைகளுக்காகவும், அலுவலக வேலை முடிந்து வீடு திரும்பும் போது வாம்மா மதி என்று முக மலர்ச்சியோடு வரவேற்கும் பாசத்தையும் தான்.

லக்ஷ்மி மதியின் அலுவலக தோழி, அவள் தன் தாயை பற்றி பேசியதை விட தன் மாமியாரை பற்றி தான் எப்போதும் மதியிடம் உரையாடுவாள். என் அத்தை போலவே மாமியார் எல்லோருக்கும் கிடைக்கனும்னு கடவுளை வேண்டிக்கிறேன். என் அம்மா கூட என்ன இப்பிடி பாதுப்பாங்களானு தெரில அடுத்த வீட்டு பொண்ணுன்னு நினைக்காம என்னை தன் சொந்த மகளாவே பாதுப்பாங்கனு லக்ஷ்மி எப்போதும் பெருமிதத்தோடு சொல்லுவாள்.

லக்ஷ்மி சொல்லிய வார்த்தைகள் இன்று ஏனோ மதியை உறங்க விடவில்லை. ஊரிலிருந்து வைதேகியின் மகள்கள் வந்து விட்டால் பாதத்தில் சக்கரம் கட்டிக்கொண்டு தான் சுற்றுவாள் வைதேகி. நான் என் அத்தையை தாயாக தானே பார்கிறேன் அவர்கள் மட்டும் ஏன் என்னை மகளாக நினைக்கவில்லை என்று குழம்பி குழம்பி உறங்காமல் இரவை கழித்தாள் மதி. வானம் லேசாக வெளிற தொடங்கியதும் படுக்கையில் இருந்து எழுந்து முகம் கழுவ சென்றாள். மனது குழம்பியது, அதனால் விழிநீர் பெருகியது. ஆறுதலுக்கு அன்னை மடி தேட ஆரம்பித்தது இளையவள் மனம். அம்மாவிடம் சொன்னால் மன குழப்பம் தெளிவதற்கு வழி சொல்லுவாள் என்று தோன்ற ஆரம்பித்தது.


காலையில் குணா விடம் கேட்டு புறப்படலாம் என்று தன்னை சாந்தப்படுத்திக்கொண்டால்.
காலை தேநீர் தயார் செய்து அத்தை மாமா மற்றும் கணவனுக்கு கொடுத்து விட்டு தானும் பருகினாள். தேநீர் குடித்துவிட்டு குணசேகரன் அலுவலகம் கிளம்ப ஆயுத்தமானான். மதி எல்லோருக்கும் காலை உணவு தயார் செய்ய தொடங்கினாள். என்னங்க சாப்பிட வாங்க என்று அழைத்து பின் தயங்கி நின்றாள், என்னமா என்ன அச்சி அன்று அன்போடு கேட்டான் குணசேகரன். இல்லங்க இன்னைக்கு அலுவலகம் விட்ட உடன் அம்மா வீட்டுக்கு போயிட்டு வரட்டுமா என்று கேட்டால் மதி. சரி மா நீ போயிட்டு வா அம்மாவிடமும் ஒரு வாரித்தை கேட்டிடு என்றான்.

மதி அலுவலகம் கிளம்பும் முன் தன் அத்தையிடமும் ஒருவழியாக அனுமதி வாங்கிவிட்டாள். அம்மாவை பார்க்க ஆசையாக பொழுதை கடத்தினாள். மதியம் 3 மணிக்கு அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு 4.30 க்கு தாய் வீடு வந்தது சேர்ந்தால். அண்ணன் அண்ணி இருவரும் அவரவர் அலுவலகத்திற்கு சென்றிருந்தனர். அப்பா மளிகை சாமான் வாங்கிட அங்காடிக்கு சென்றிருந்தார்.

மதிக்கு வசதியாக இருந்தது தாயிடம் தனியாக பேசிட. சூடாமணி செய்து வைத்திருந்த முறுக்குகளை நொறுக்கியவாரே தன் மன கஷ்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வைத்தாள் மதி. தன் மகளுக்கு கிடைத்த மாமியாரை குறைபட்டுக் கொண்டே, மதி உனக்கு வெங்காய தோசைனா ரொம்ப பிடிக்கும்ல இரு நான் உனக்கு சூடா சுட்டு தரேன் என்று தன் மகளுக்கு ஆசையாக சூட்டு சூட்டு தந்தாள் பெரியவள். இரண்டு தோசை உண்ட பின் அம்மா அண்ணி எப்படி மா? உன்னோட சகஜமா பழகுகிறார்களா என வினவினால் ஆர்வத்தோடு.

என்னத்த சொல்றது என்று புலம்ப ஆரம்பித்தால் சூடாமணி. மதியின் அத்தை செய்ததை போல சூடாமனியும் மருமகளை மகளிடம் குறை சொல்லி தீர்த்தாள். சரி சரி அந்த கதையெல்லாம் விடு நீ நல்லா சாப்பிடு, நான் அந்த மகாராணிக்கும் சுட்டு வைக்கணும். இல்லனா அவ வந்த பிறகு சூடா சுட்டு தர வேண்டிருக்கும் என்றாள் சலிப்போடு. ஏன் மா நீ இப்போ சுட்டு வைக்கிறத அண்ணி வந்த பிறகு சுட்டு தரலாம்ல என்றாள் புரியாதவளாய். அதற்கு பெரியவளோ உன்னோட அண்ணி வச்ச ஆளா நானு நான் செஞ்சத அவ சாப்பிட்ட போதும் என்றாள்.

ஓங்கி கன்னத்தில் அறைந்தது போல உணர்ந்தால் மதி. பாதி சாபாட்டிலே கை கழுவிய மதியை பார்த்த சூடாமணி என்னடி இது அதுக்குள்ள கை கழுவிட்ட சரியா சாப்பிடாம என்றாள். தன் கை பையை எடுத்துக்கொண்டு கிளம்பியவளை என்ன மதி ஒன்னும் சொல்லாம புறப்பட்டுட்ட என்றாள் பெரியவள் அதற்கு இளையவளோ நான் என் தாய் வீடிற்கு வந்ததாக நினைத்தேன் ஆனால் இப்போது தான் புரிந்தது நான் என் அண்ணியின் மாமியார் வீட்டில் இருக்கிறேன் என்றாள் வேதனையோடு.
என்னோட அத்தை அப்பிடி இருக்கிறார்கள் என்று புலம்ப என் தாயிடம் ஓடிவந்தேன். இங்கு வந்த பின் தான் தெரிந்தது நீயும் ஒரு மாமியார் என்று இனியாவது அண்ணியை மகளாக பார் அம்மா என்று சொல்லிவிட்டு தன் கணவன் வீடிற்கு புறப்பட்டால் மதி. வரும் காலத்தில் எனக்கு மருமகள் வந்தால் என் மதி கெட்டு விடாமல் நான் அவளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் படி மனபக்குவத்தை கொடு இறைவா என்று வானத்தை நோக்கி வேண்டி விட்டு தன் வழி நடகலானால் மதி.

எழுதியவர் : Meenakshikannan (21-Nov-11, 4:31 pm)
பார்வை : 1009

மேலே