"பல்கலைக் கழகம்" - (நல்லதொரு குடும்பம்)
"வரதட்சணை" என்னும்
"அன்பளிப்பு" தந்தால்தான்
அங்கே அனுமதி என்றதுமே
நன்கு புரிந்து கொண்டேன்
"நல்லதொரு குடும்பம்
பல்கலைக் கழகம்" என்று....!!
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்
"மனைவி" என்னும்
"பட்டம்" வழங்கியே
உள்ளே அனுமதிக்கும்
"பல்கலைக்கழகம்"
இது ஒன்றாகத் தான் இருக்கும்....!!
நுழைந்தவுடன் இங்கும் ராக்கிங் உண்டு
அதனால் கோபம் அடையாமல்
முதற்கணம் அறிய வேண்டியது
தியாகம் எனும் கலையின் முதற்படியை...!!
இன்றுமுதல் நான் திருமதியாம்
அதனால் தனித்துவம் என்பதை
தாரைவார்க்கும் "முதற்கலை"யை
கற்றுக்கொள்ள வேண்டும்...!!
எது நடந்தாலும்
என்றும் புன்னகை மங்காமல்
பொறுமை என்னும் நகை கழற்றாமல்
இருப்பதுதான் "இரண்டாம் கலை"....!!
தாய்மை எனும் "முதுகலைப்பட்டம்"
பெற்றப் பின்
தனக்காகக் கழிக்கும்
பொழுதுகளையும்
தேவைகளையும்
விட்டுவிடக் கற்று விட்டேன்...!!
வேறு எதைப் பற்றியும்
யோசிக்க எனக்கு நேரமில்லை...
எனது முழு கவனமும்
நான் பெற்ற இந்த
புதிய குஞ்சுகளுக்கு எப்படி
பறக்கக் கற்பிக்க வேண்டும்
என்பதே ஆகும்....!!
உலகத்தில் உள்ள மாசுகள்
உலகமே அறியாத
என் பிஞ்சு உயிர்கள் மேல்
படியாமல் வளர்க்கின்ற
ஓர் அற்புதக் கலையை
ஓயாமல் என்றும்
பயில்கின்றேன் பம்பரமாக...!!
கலைகள் பல கற்று இருந்தாலும்
கவலைகள் பல பெற்று இருந்தாலும்
கர்வமுடன் சொல்லுகின்றேன்
"நல்லதொரு குடும்பம்
பல்கலைக் கழகம்" தான்......!!!
செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு,
மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.