கிராமத்துக்காரன்
அழுக்குப் பிடித்த
அரைக் கால் சட்டையோடு
ஆனந்தமாய்ச் சுற்றித் திரியும்
குழந்தைகள் பார்க்கையில்...!
களை பிடுங்கிய களைப்பாறி
வயல்வெளியில் வட்டமாய் உட்கார்ந்து
ஊர்க்கதைகளோடு உணவையும் பரிமாறும்
பெண்கள் பார்க்கையில் ...!!!
ஆல மரத்தடியில்
அகலத் துணி விரித்து
அண்ணாந்து படுத்திருக்கும்
அண்ணாச்சிகள் பார்க்கும் போதும் ..!!!
மச்சான் மாப்ளே
மாமியா நாத்துனா கொழுந்தனா
ஆத்தா அப்பச்சி அம்மாச்சி
அத்தனை சொந்தங்கள் பார்க்கும் போதும் ..!!!
வெற்றிலை மென்று கொண்டே
முற்றம் அமர்ந்து முன்னூறு கதைகள்
முப்பொழுதும் சொல்லும்
கிழவிகள் பார்க்கையில் ..!!!
பசி தீர்ந்தால் போதும்
பாசம் இருந்தால் போதும்
பணம் எதற்கெனப் பாடும்
மனங்கள் பார்க்கும் போதும் ...!!!
பச்சை மரங்கள் பார்க்கையில்
பாடும் பட்சிகள் பார்க்கையில்
வயல் பாயும் வாய்க்கால் பார்க்கையில்
வளையோடும் நண்டு பார்க்கையில்
அலையோடும் குளம் பார்க்கையில்...!!
சின்ன அறைக்குள் சிக்கி
நகரத்தின் வீதிகளில்
நசுங்கித் திரியுமெனக்கு
ஏன் படித்தோம் எனத் தோன்றும்
மனம் வலிக்க அழத் தோன்றும்
விவசாயமே செய்திருக்கலாமென்று
விசும்பத் தோன்றும்...!!!
செய்யும் விளம்பரம் உண்மையில்லை
இதழின் சிரிப்பில் உண்மையில்லை
எங்கும் பணம் பணம்
எங்கிருக்கிறது மனம் மனம் ...!
அலுவலகக் கோப்புகளை
ஆனந்தமாய் மறந்து விட்டு
அடுக்குமாடி கட்டிடத்தை
அப்படியே விட்டுவிட்டு
ஊர் சென்று உலாவ
தீபாவளி பொங்கலை
ஆவலோடு நோக்கும் மனசு ...!!!
ஒவ்வொரு கிராமமும்
ஒரு அழகான கவிதை
அங்கே எழுதுக்களாய்ப்
பிறக்க எல்லோருக்கும் பிடிக்கும்...!!!
கம்ப்யூட்டர் முன்
கன்னத்தில் கரம் வைத்து
அடுத்த அரசினர் விடுமுறையை
ஆவலாய் எதிர்பார்த்துக்
காத்திருக்கும் இவனுமொரு
கிராமத்துக்காரன் ...!!!