இலங்கைத் தமிழனின் இதயக் குரல்
![](https://eluthu.com/images/loading.gif)
காட்டாற்று வெள்ளம்
கால் தடம் பதித்த
ஆற்றுப் படுகையாய்
ஆகிப்போனது வாழ்க்கை
ஆனால்
நம்பிக்கை மட்டும்
நதிக்கரை நாணலாய்
இன்னும் அப்படியே இருக்கிறது!
வீடுகள் இழந்தோம்
வீதிக்கு வந்தோம்
காடும் மேடும் நாங்கள் தங்கும்
கூடுகள் ஆயின.
தோட்டத் தொழில் செய்தோம்
தோட்டங்களை எல்லாம்
தோட்டாக்கள் துளைத்தன
விதை விழுக வேண்டிய நிலத்தில்
தோட்டாக்களோடு எங்கள்
தோழர்களின் உயிர்களும் விழுந்தன
பயிர் செய்தோம்
இரண்டையுமே அறுவடை செய்தோம்
ஒன்று எதிரிகளுக்காக
இன்னொன்று எங்களுக்காக
இறுபது என்றும்
அறுபது என்றும்
இறந்தோரின் எண்ணிக்கை
எகிரிக்கொண்டே போனது
உண்ணா விரதத்தால் உயிர் நீத்தால்
என்னவென்று கேட்க எவரும் இல்லை.
அஞ்சி நின்ற போது செத்து மடிந்தோம்
நெஞ்சை நிமிர்த்தியபோது செய்து முடித்தோம்!
வனைக்கரம்கூட கொலைக்கரம் ஆகிய
கொடுமை கண்டு
எங்கள் தங்கைகளின்
கரும்புக் கரம் கூட
இரும்புத் துப்பாக்கி ஏந்தியது
நஞ்சு உள்ளம் கொண்டவர்கள்
பிஞ்சுகளையும் விடவில்லை
அதனால்தான் எங்கள் பிள்ளைகள்
மழலை முடிந்த கையோடு
மரணத்தை குப்பிகளில் அடைத்து
மார்பிலே சுமந்து கொண்டு
மண்ணுரிமைப் போரிலே
முன்னுக்கு நிற்கிறார்கள்!
தென்னையும் பனையும்
தின்னையில் முடங்கிய கிழவனும் - சில
தொன்னை நக்கிகளும்தான்
எதிரிகளின் இலக்காகினர்
முதல் இரண்டுக்கும் மரணம் இலக்கு
அடுத்ததற்கு மயக்கம் இலக்கு
எங்களுக்கு என்றும் விடுதலையே இலக்கு!
இனவெறியும் மொழிவெறியும்
இறுகிப்போன கரும்பாறையாய்
எங்கள் பாதையை அடைத்து நின்றது
எறும்பு ஊர தேயும் பாறை
இரும்பு உளிக்கு
என்ன பதில் சொல்லும்
எங்கள் தோழர்கள்
இரும்பு உளியாய் இறங்கினர்
இன வெறிப்பாறை மீது
பாறை சிதைந்தது இன்று
பாதை பிறக்கிறது பார்