கடவுள்

கடவுளைக் காணும் முயற்சியில்,
கொறிக்க கடலையும், குவளையில் பாலும்
எடுத்துக் கொண்டு
புறப்பட்டான் சிறுவனொருவன்...

சில மணிநேர பயணத்தின்பின்
சிறியதொரு பூங்காவை
செல்லும் வழியில்
கடக்க நேரிட்டது...

இளைப்பாறலாம் என்று
அமர்ந்தவனருகே
ஒரு கிழவி, சில புறாக்களை
உற்று பார்த்துக்கொண்டு...

ஏதாவது சாப்பிடலாமே என்று
எண்ணம் உதித்ததும்
எடுத்து உண்ண ஆரம்பித்தான்
கொண்டு வந்தவைகளை...

அவளும் பசியாக இருக்கிறாளோ
என்று தோணவே
எடுத்து கொடுக்க ஆரம்பித்தான்
இவனிடமிருந்தவைகளை...

சிறியதொரு புன்னகை திரும்பி வர
அதைப் பார்க்கும் எண்ணம் இவனுக்கு
மறுபடியும் வர, தீர்ந்தது
கடலையும் குவளை பாலும்...

மாலைச் சூரியன், மஞ்சளை தெளிக்க
செல்லும் நேரம் வந்தது இருவர்க்கும்.
கட்டிக் கொண்டு விடை பெற்றனர்
கிழவியும் சிறுவனும்...

அவரவர் வீட்டில், அனைவரும் கேட்ட
கேள்விகளுக்கு கிடைக்கப் பெற்ற பதில்கள்
"கடவுளை கண்டு விட்டேன்"

சிறிதளவே அன்பும்
பின் கொஞ்சம் கருணையும்
சேர்ந்து செலவழிக்கும் நேரமும்
கடவுள்களை காட்டுகின்றன மனிதர்க்கு...

எழுதியவர் : அக்னிபுத்ரன் (29-Nov-11, 5:44 am)
சேர்த்தது : Agniputhran
Tanglish : kadavul
பார்வை : 242

மேலே