பேச்சு!

கைக்குழந்தையிடம்
தாய் பேசுவது,
மழை நின்றபின்
தென்றல்
நம்மிடம் பேசும்
பேச்சு!

காதலியிடம் காதலன்
பேசுவது,
காலைக் கட்டிக் கொண்டு
குழந்தை
தாயிடம் பேசும்
பேச்சு!

கணவனிடம் மனையாள்
பேசுவது
வண்ணத்துப் பூச்சியிடம்
மலர் பேசும்
பேச்சு!

மாணவனிடம்
ஆசிரியர் பேசுவது,
கல்லிடம் உளி
பேசும்
பேச்சு!

தாத்தாவிடம்
பேரக் குழந்தைகள்
பேசுவது,
தூரிகையுடன்
வண்ணங்கள்
பேசும் பேச்சு!

அறுசுவையுணர
படைக்கப்பட்டு
மொழிச் சுவை
அறியாவண்ணம்
சில சமயங்களில்
படைக்கப்படும்போது

மண்ணிடம் பேசும் உளியாய்
வண்ணங்களில்லா தூரிகையாய்
ஈரம் நீங்கிய தென்றலாய்
மலர்களில்லா வண்ணத்து பூச்சியாய்
மாறித்தான் போகின்றது
மாற்றுத் திறனாளிகளின்
பேச்சு!!!

எழுதியவர் : அக்னிபுத்ரன் (29-Nov-11, 5:46 am)
சேர்த்தது : Agniputhran
பார்வை : 250

மேலே